1207.
|
செம்மை
வெண்ணீற் றொருமையினா; ரிரண்டு
பிறப்பின்
சிறப்பினார்;
மும்மைத் தழலோம் பியநெறியார்; நான்கு வேத
முறைபயின்றார்.
தம்மை
யைந்து புலனும்பின் செல்லுந் தகையா;
ரறுதொழிலின்
மெய்ம்மை யொழுக்க மேழுலகும் போற்று மறையோர்
விளங்குவது.
2 |
(இ-ள்.)
வெளிப்படை. சிவநெறிச்சாதனமாகிய
திருவெண்ணீற்றில் ஒன்றுபட்ட ஒழுக்கமுடையவராய், இரண்டு
பிறப்பின் சிறப்புடையராய், முத்தீயினையும் என்றும் வளர்க்கும்
நெறியில்நிற்பவராய்,நான்குவேதங்களையும் முறையிற் பயின்றவராய்,
ஐந்து புலன்களும் தங்களைப் பின்செல்லும் தன்மையுடையராய்த்தாம்
செய்யும் அறுதொழிலின் மெய்யொழுக்கத்தினை ஏழுலகங்களும்
போற்றத் தக்கவராய் உள்ள மறையவர்கள் விளங்குவது அவ்வூர்.
(வி-ரை.)
செம்மை - சிவம் - முத்தி. செம்மை
வெண்ணீறு
- செம்மையைத் தருவதாகிய - சிவசாதனமாகிய திருவெண்ணீறு
என்க. திருநீறு சிவனைப்போலவே அழியாத தன்மையுடையது;
வேதங்களாற் றுதிக்கப்படுவது. "முத்தி தருவது நீறு", "பத்தி தருவது
நீறு", "பாவமறுப்பதுநீறு" முதலிய வேத வாக்குக்கள் காண்க.
செம்மை - "செம்மையே" (தொகை - பக் -
1354 - உரை பார்க்க).
நீற்று ஒருமையினார் - திருநீற்று
நெறியிற் பிறழாது
ஒன்றுபட்ட உறுதியுடையவர்கள். "உறுவது நீற்றின் செல்வ
மெனக்கொளு முள்ள மிக்கார்" (355), "விதியினாலே பரவிய
திருநீற் றன்பு பாதுகாத் துய்ப்பீர்" (488), "தொன்மைத் திருநீற்றுத்
தொண்டின் வழிபாட்டி, னன்மைக்கணின்ற நலம்" (610) முதலியவை
காண்க. ஒருமை - ஒன்றுபட்ட உறுதி. "ஒன்றி
யிருந்துநினைமின்கள்"
என்ற விருத்தம் சிந்திக்கத்தக்கது.
இரண்டு
பிறப்பின் சிறப்பாவது ஒரு பிறவியிலே
இரண்டுபிறப்பின் சீர் பெறுகின்ற மேம்பாடு. துவிசர் (இருபிறப்பாளர்)
என்பர்: வடவர். ளுபநயனம் என்ற சடங்கின் முன்னர்ஒரு பிறப்பும்,
அதன்பின் பிரம நோக்கம் கொண்ட தொரு பிறப்பும் என்பன
இருபிறப்பு எனப்படும். உபநயனம்
என்பதுபற்றி "முந்நூல் சாத்தி
(152) என்ற விடத்துரைத்தவையும், பிறவும் பார்க்க. சிறப்பு
-உயர்வு.
விசேட தீக்கையாற்றான் இருபிறப்பின்மை வருமென்பது
சித்தாந்த சாராவலி.
மும்மைத்தழல்
ஓம்பிய நெறி - முத்தீ - என்பன
ஆகவனீயம் முதலாக எண்ணப்பட்ட மூன்று. இவை மறையோர்
மனையில் நித்தியமாக வளர்க்கப்படத்தக்கன. "எரி மூன்று" (354),
"ஆகுதிகள்" (1064) என்ற இடங்களிலும் பிறாண்டு முரைத்தவை
பார்க்க. தழல் - தீக்கடவுள். இரண்டு
முகங்களையும்,
ஏழுகைகளையும், மூன்று கால்களையுமுடையவர் என்று
சொல்லப்படுவர். அவ்விய கவ்வியமாகிய இரண்டுக்கும் இரண்டு
முகங்கள் ஆவன; அவ்வியம் தேவர்க்கும். கவ்வியம் பிதிரர்க்கும்
கொடுக்கப்படுவன; ஏழு கோடி மகா மந்திரங்கள் தேவர் முதலிய
ஏழுவகையினர்க்கும் கொண்டு கொடுக்கும் கைகளெனப்படுவன;
(ஏழு கோடி - மந்திரங்களில் சுவாகா முதலாக உள்ள ஏழு முடிபுகள்); மூவுலகங்களும் செல்வன
மூன்றுகழல்கள். "எண்ணிறந்த
கடவுளருக் கிடுமுணவு கொண்டூட்டும், வண்ணவெரி வாயின்கண்
வைத்ததென" (796) என்ற விடத் துரைத்தவையும் பார்க்க.
"இருமுகங் கழன்முன் றேழுகைத்தலம்" என்ற (சாட்டியக்குடி - 5)
திருவிசைப்பாவும் கருதுக.
நான்கு
வேதம் - இருக்கு முதலாக வியாசர் வகுத்த; நான்கு
வேதங்கள். வியாசர் இவ்வாறு வகுக்குமுன் இவை தைத்திரீய
முதலாக நான்காகச் சொல்லப்பட்டன என்ப. முன்னர் மூன்றாகவும்
சொல்வர்.
முறைபயிலுதலாவது
- பதம், சடை, கிரமம், கனம் ஆகிய
முறைமையிற் பயிலுதலும், காலந்தெரிந்து பயிலுதலுமாம்.
"இருபிறப்பாளர் பொழுதறிந்து நுவல" (திருமுருகு) என்றது காண்க.
ஐந்து
புலனும் தம்மைப் பின்செல்லும் தகையார் என்க.
புலன் வழியே தாம் செல்லாமல் தம் வழி அவற்றை நிறுத்தினார்.
"உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்" (குறள்), "மாறிநின்
றென்னை மயக்கிடும் வஞ்சப் புலனைந்தின்வழியடைத்து",
"ஆட்டுத்தேவர்தம்வழியொழித்து"(திருவாசகம்), "தருமந்தன்
வழிச்செல்கை" (129) முதலியவை காண்க.
அறுதொழிலின்
மெய்ம்மை ஒழுக்கம் - அறுதொழிலாவன:
ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்பர்.
மெய்ம்மை ஒழுக்கம்
என்றது இந்த அறுதொழிலிலும் உண்மை
நிலையில் ழுகுதல்; அஃதாவது உண்டிப் பொருட்டானும் அது
போன்ற வேறு காரணங்களானுமன்றி இறைவன் சாட்சியாய்
அவ்வொழுக்கத்தைப் பாதுகாத்தற் பொருட்டாகவே அத்தொழிலின்
ஒழுகுதல்.
மறையோர்
விளங்குவது - மறையோர்கள் நிறைந்து
விளங்கும் ஊர். "தந்தகைமைக் கேற்றதனி யிடங்கண் மேவி" (1180)
என்றபடி பற்பல குலபேதத்தரும் தனித்தனி அங்கு இடம் பெற்று
வாழும் நகரங்களும், அவ்வாறன்றிச் சீறூர்களாய் ஒரே குலத்தவர்
தனியாக வாழ அமைக்கப்பட்ட நகரங்களும் என்று ஊர்கள்
இருவகைப்படும். இவ்வாறுதனி மரபினர்க்கென்று ஊர்கள்
அமைப்பது முன்னாளிலும் இந்நாளிலும் வழக்கமாகும். சேய்ஞலூர்
- மறையோர் தனித்துக் குடியிருக்கை கொண்டவூர். அக்கிரகாரம்
என்பர்; இது அகரம் என்று மருவிவழங்கும். மறையவர்க்குத்
தனியிருக்கைகளுடையஊர்கள் அமைப்பதும் முன்னாள்
அரசர் முதலியோர் செய்துவந்த தருமங்களுள் ஒன்றாகும்.
இதுசதுர்வேதி மங்கலம் என்ற பெயராற் பழங் கல்வெட்டுக்களில்
அறியப்படுகின்றது. இச்சரிதமுடைய நாயனார் மறைச்சிறுவராதலும்
உன்னுக. மறையோர் சிறப்புப்பற்றியே 1 முதல் 6 வரை
பாட்டுக்களால்நகரச் சிறப்புக் கூறிய தகுதியும் கண்டுகொள்க.
இவ்வாறே ஆளுடையபிள்ளையார் புராணத்துக்கூறப்பட்ட
நகரவளங்களும் பிறவும் இங்கு நினைவு கூர்க.
இப்பாட்டு ஒன்றுமுதல்
ஏழுவரை முறையாக அடுக்கிவரும்
எண்ணலங்காரம் என்ற அணிபெற அமைக்கப்பட்டதாம்.
"ஆழியொன்று" (339) என்ற திருக்கோவையாரும் எதிர்முறையாக
வரும் "மணங்கமழ்" (புறநீர்மை - ஓமாம் புலியூர் - 6) என்ற
ஆளுடையபிள்ளையார் தேவாரமும் காண்க.
விளங்குவது அவ்வூர் - என்று வருவித்து முடிக்க.
விளங்குபதி
- என்பதும் பாடம். 2
|