1210.
தீம்பா லொழுகப் பொழுதுதொறு மோம தேனுச்
                             செல்வனவுந்,
தாம்பா டியசா மங்கணிப்போர் சமிதை
                  யிடக்கொண்டணைவனவும்,
பூம்பா சடைநீர்த் தடமூழ்கி மறையோர் மகளிர்                                 புகுவனவு
மாம்பான் மையினில் விளங்குவன வணிநீண் மறுகு                                பலவுமுள.
5

     (இ-ள்.) வெளிப்படை.. ஓமங்களுக்குப் பஞ்சகவ்வியத்தின்
பொருட்டு வளர்க்கப்படும் பசுக்கள் இனிய பால் ஒழுகும்படி
பொழுதுதோறும் செல்வனவும், தாங்கள் பயின்ற வேத சாகைகளைக்
கணித்துக் கொள்வோராய் மாணவகர்கள் ஓமத்துக்குரியசமிதைகளைக்
கொண்டு அணைவனவும், பூக்கள் நிரம்பியதடங்களில் நீர்மூழ்கி
மறையவர் மகளிர்கள் புகுவனவும் ஆம் பான்மையினில்
விளங்குவனவாகிய நீண்ட தெருக்கள் பலவும் அந்நகரில் உள்ளன.

     (வி-ரை.) செல்வனவும், அணைவனவும், புகுவனவும் ஆம்
பான்மையினில் விளங்கும் மறுகுபலவும் உள்ளன என்றபடியாம்.
செல்வன, அணைவன, புகுவன - செல்வதற்கும் அணைவதற்கும்
புகுவதற்கும் இடமாவன என்க.

     பொழுது தொறும் தீம்பால் ஒழுகச் செல்வன - என்க.
மடியின் மிக நிறைதலால் கறவாமே பால் ஒழுகச் செல்வது
பசுக்கள் செழித்து வளர்தற் கறிகுறியாம் அத்தகைய பசுக்கள்
கன்றைநினைந்துசெல்வதனாலும் பால்கறவாமே ஒழுகுவதா
மென்ப. இவ்வாறு பால் ஒழுகச் செல்லும் பசுக்களை இன்றும்
கோயமுத்தூர்ச் சில்லா அரசாங்கத்தாரது விவசாயப்
பண்ணையிலும் அவ்வாறுள்ளபிற சில இடங்களிலும் காணலாம்.
கறவாமே பசுக்கள் பால் பொழிதலின் விளைவாகும் இச்சரிதக்
குறிப்பும் காண்க. 1235 பார்க்க.

     ஓமதேனு - ஆகுதிகளுக்குப் பால் தரும் பசுக்கள் - 1247
பார்க்க. தேனு - சாதி பொருமை.

     தாம் பாடிய சாமம் கணிப்போர் - பாடிய - இங்குக் கற்ற
என்னும் பொருளிலும், சாமம் - பொதுவாய் வேதம் என்ற
பொருளிலும் வந்தன. கணிப்போர் - தாம் கற்ற வேதப் பகுதிகளை
மீள மீளச் சொல்லிப் பயின்று கணக்கிடும் சிறுவர். சுரங்களினளவும்
-பதம் - சடை - கிரமம் என்ற முறைகளினளவும், காலத்தினளவும்
கணக்கிட்டுப் பயில்வதால் கணிப்போர் என்றார்.

     கணிப்போர் சமிதை இடக்கொண்டு அணைவனவும்
- நித்தியாக்கினிக்கு வேண்டும் சமிதைகளைக் கொண்டுவருதல்
மறைபயிலும் சிறுவர்களின் கடமைகளுள் ஒன்றாக வைப்பது
முன்னாளில் மறையவர் வழக்குக்களுள் காணப்படும். ஊர்
வெளியில் உள்ள வேதம் பயில் மடங்களிற் சென்று மறைபயின்ற
பின் வேளையில் அச்சிறுவர் அங்குச் சமிதை சேகரித்து மனைக்குத்
திரும்பும்போது, காலத்தை வீணாக்காமல் தாம் கற்ற
மறைப்பகுதிகளைக் கணித்துக்கொண்டே செல்வர் என்பது. வீண்
பேச்சுப் பேசி வீதி செல்லும் இந்நாள் மாணவகர் இதைக்
கணிப்பார்களாக.

     பூம்பாசடை....புகுவன - மறையோர் மகளிர் நகர்ப்புறத்தில்
உள்ள பூம் பொய்கைகளில் சென்று குளித்து நீர்கொண்டு மனைக்கு
வருதலும் முன்னாள் மறையவர் வழக்குக்களுள் ஒன்றாகும்.
மேற்சொல்லிய இவ்வழக்குக்கள் இந்நாளில் அருகி வருதல்
வருந்தத்தக்கது.

     மறையவர் பதியாதலின் முன்பாட்டில் வேள்விச்
சாலைகளைப்பற்றிக் கூறிய கருத்தைத் தொடர்ந்தே, இங்குக்
கூறிய மூன்றும் மறையவர் மனையில் வளர்க்கும்முத்தீ
வேள்விக்கான பகுதிகளாமென்பதும் கண்டுகொள்க.

     ஆம் பான்மை - செல்வனவும் அணைவனவும் புகுவனவும் ஆகும் பான்மை பெற்ற மறுகுகள் என்க. பான்மை - நற்பண்பு -
நல்ல தன்மை.

     அணி நீள் மறுகு - மறுகுகளுக்கு அணியாவது
இடமகன்றனவாய், இருபுறமும் குளிர்ந்த நன்னிழலுடையனவாய்,
செல்வ மனைக ளிரண்டு புறமும் நிறைந்தனவாய், மேடு
பள்ளங்களும் கோணை வளைவு முடுக்குக்களும் இன்றிச்
செல்வதற்கு வசதியாய் இருத்தல், நீண்மறுகு - பிரிவும்
வளைவுமின்றி நெடுந்தூரம் செல்லுதல். இத்தன்மைகள் இந்நாளும்
நல்ல நகர அமைப்பில் தெருக்கள் வகுப்பதில் கருதவுள்ள
தகுதிகளாகும். 5