1213.
சென்னி, யபயன், குலோத்துங்கச் சோழன், றில்லைத்
                                திருவெல்லை
பொன்னின் மயமாக் கியவளவர் போரே, றென்றும்
                                  புவிகாக்கு
மன்னர் பெருமா னநபாயன் வருந்தொன் மரபின்
                                  முடிசூட்டுந்
தன்மை நிலவு பதியைந்தி னொன்றாய் விளங்குந்
                               தகைத்தவ்வூர்.
8

     (இ-ள்.) வெளிப்படை. அவ்வூரானது, சோழர் மரபில்அபயன்
என்றும்; குலோத்துங்கச்சோழர் என்றும்,பெயருடையவராய்த்
தில்லைத்திருவெல்லையினைப் பொன்மயமாக வேய்ந்த சோழர்
போரேறாய் நிகழ்ந்த அநபாயச் சோழர்அவதரித்த பழைமையாகிய
மரபில்முடிசூட்டிக்கொள்ளும்தன்மையில் நீடிவருகின்ற ஐந்து
பதிகளில் ஒன்றாகி விளங்கும்பண்பினையுடையது.

     (வி-ரை.) இப்புராணம் பாடுவித்த நன்றியின் பொருட்டு
அநபாயரது அன்பின் றிறத்தை ஆசிரியர் இப்புராணத்துள்
வைத்துப் பாராட்டிய பதினொருஇடங்களுள் இது சிறந்த
இடமாகும்.

     அபயன் - குலோத்துங்கன் என்ற இரண்டு பெயர்களும்
அநபாயருக்கு வழங்கப்பட்டனவென்ற செய்தியும், அவர் தில்லைத்
திருவெல்லையினைப் பொன்மயமாக்கினர் என்ற செய்தியும்
அவரதுசரித ஆராய்ச்சிக்கும், குலோத்துங்கன் என்று வழங்கப்படும்
பலருள்ளும் அவர் இன்னார் என்று குறிப்பிடுதற்கும் பெருந்துணை
செய்வன. "சேய வன்றிருப் பேரம் பலஞ்செய்ய, தூய பொன்னணி
சோழன்", (8) என்றதும் காண்க. அநபாயரின் பெருமைகள்
பலவற்றுள்ளும் அவரது திருநீற்று அன்பின் திறமும், தில்லைஎல்லை
பொன்மயமாக்கிய தொண்டின்றிறமுமே ஆசிரியரது திருவுள்ளத்தைக்
கவர்ந்தன; ஆதலின் அவர் அவற்றைப் பல இடத்தும்
பாராட்டுவாராயினர். அன்பின்றி றம்பற்றி அநபாயருக்குத்
திருநீற்றுச்சோழர் எனப்பெயர் வழங்கலாயிற் றென்பதும்
அறியப்படுகின்றது. "பொருவருபே ரம்பலமுங் கோபுரமும்ஆலயமும்
பொன்வேய்ந் துண்மைச் சுருதியுடன் சைவநெறி தழைத்தோங்கத்
திருநீற்றுச்சோழனென்று, குருமணிமாமுடிபுனைந்த
குலோத்துங்க வளவன்" என்று சிதம்பர புராணமும்; "துன்று புகழ்த்
திருநீற்றுச் சோழனென முடிசூடி, மன்றினடந் தொழுதெல்லை
வளர்கனக மயமாக்கி
வென்றிபுனை யநபாயன்" என்று
கோயிற்புராணமும் போற்றியன. அபயன் என்பது பல சோழரும்
பூண்ட பெயர்.

     குலோத்துங்கச் சோழன் என்பதும் பல சோழர்கள் பூண்ட
பெயராகும். ஆனால் அநபாயர் என்பதே இவ்வரசர் சிறப்பாய்ப்
பூண்டுகொண்ட பெயராதலின் அதனை இறுதியில் வைத்துக்
காட்டினதுடன் வேறு பல இடத்திலும் அப்பெயராலேயே தம்
அரசரைக் குறிப்பாராயினர் ஆசிரியர்.இவர் குலோத்துங்கர்
இரண்டாவதவர் என்பது இந்நாள் பல ஆராய்ச்சியாளர் கண்ட
முடிவாகும். சில காலத்துக்கு முன் முதலாங் குலோத்துங்கரே இவர்
என்ற கொள்கை நிலவி வந்தது. இவ்விரண்டு கொள்கையுமன்றிக்
கங்கைகொண்ட சோழரே இவர் என்றதொரு புதியகொள்கையுமுண்டு.
இவைபற்றி எனது "சேக்கிழார்" 12 முதல் 23 வரை பக்கங்களில்
விரிவாகக் கூறியுள்ளவை காண்க.இவ்வாறன்றி இப்பாட்டில் அபயன்
(1), அபயகுல சோழர் குலோத்துங்கர் (2), அநபாயர் (3) என
மூன்று சோழர்களைக் குறித்ததாக உரைத்தனர் முன் உரைகாரர்கள்.

     எல்லை பொன்னின் மயமாக்கிய என்றதனால் தில்லையின்
எல்லைக்குள் பல இடங்கள் இவர் பொன்மயமாக்கினர் என்பது
பெறப்படும். (8) பார்க்க.

     என்றும் புவிகாக்கும் என்றது பேரன்பாகிய தமது அரசர்
பெருமானது ஆட்சி நீடுவாழ்வதாக என்று ஆசிபுரிந்தபடியாம்.
இன்றும் உலகம் சைவத் திறத்தின் வாழ்ந்து நிற்பதாமென்னில்
அது அநபாயரது ஆட்சியின் வலிமையா லாவதாம் என்பது
மிகையாகாது. ஆதலின் என்றும் புவிகாக்கும் என்றது என்றும்
திரியாதஉண்மைத் திருவாக்காகும் என்க.

     அநபாயன் வரும் தொன்மரபு - சோழ அரசர் மரபு.
தொன்மை - வழிவழி வரும்பழமை. அநபாயர் வரும் மரபு
என்றது அநபாயரதுமரபின் முந்தையோரை.

     முடிசூட்டும் தன்மை நிலவுபதி ஐந்து - சோழ அரசர்தமது
நாட்டில் ஐந்து பதிகளில் முடிசூட்டிக் கொள்வது வழக்கு. அவை
காவிரிப்பூம்பட்டினம், திருவாரூர், உறையூர், சேய்ஞலூர், கருவூர்
என்பன.

     இப்பாட்டினால் அரசர் மரபு வழக்குப்பற்றி நகரச்சிறப்புக்
கூறினார்.

     நீடும் தகைத்து - என்பதும் பாடம். 8