1217.
நன்றி புரியு மவர்தம்பா, னன்மை மறையின்
                            றுறைவிளங்க,
என்று மறையோர் குலம்பெருக, வேழு புவனங்
                              களுமுய்ய,
மன்றி னடஞ்செய் பவர்சைவ வாய்மை வளர,
                            மாதவத்தோர்
வென்றி விளங்க, வந்துதயஞ் செய்தார் விசார
                            சருமனார்.
 12

     (இ-ள்.) வெளிப்படை. நன்மை செய்யும் அவர்களிடமாக,
நன்மை தரும் மறைகளின் துறைகள் விளங்கவும், என்றும்
மறையோர்களின் குலம்பெருகவும், ஏழுலகங்களும் உய்யவும்,
திருவம்பலத்தில் திருக்கூத்தியற்றும் பெருமானுடைய சைவ
உண்மைத்திறம் வளரவும், மாதவத்தோர்களின் வெற்றி விளங்கவும்,
விசாரசருமனார் வந்து திருஅவதாரஞ் செய்தருளினார்.

     (வி-ரை.) நன்றி - இங்கே நன்மையாவது இல்லற
நல்லொழுக்கம்.

     நன்மை மறை - இந்நன்மையாவது வேதங்களிற்கூறப்பட்ட
விதி விலக்குக்களால் உலகம் நன்னெறியில் நிறுத்தப்படுதல்.

     மறையின் துறை விளங்க என்றது விசாரசருமனாரின்
சரிதத்தால் வேத நீதிகள் விளக்கமுறுதல். அவையாவன -
பிரமசரிய நிலை, உபநயனம், வேதம்பயிலுதல், சமிதையும்
எரியும்கொண்டுசாமங்கணித்தல், பசுக்காத்தல் முதலியவையாம்.

     என்றும் மறையோர் குலம்பெருக என்றது மறையோர்
குலத்திலே விசாரசருமனார் திருவவதாரம் செய்து பசுக்காத்துச்
சிவபூசை செய்து சிவன் மகனாராகப் பெற்ற சரித நிகழ்ச்சியினை
அறிந்து, அதனைப் பின்பற்றிச், சிவனை வழிபட்டு, அந்தக்
குலத்தாராகிய மறையோர் வளர்ந்து வருதல் குறித்தது. "கானவர்
குலம் விளங்க" (662) என்று கண்ணப்ப நாயனார்
திருவவதாரத்திலும், "அந்தண ராகுதி பெருக" (திருஞான - புரா
- 23) என்று ஆளுடைய பிள்ளையார் திருவவதாரத்திலும்
கூறியனவும், இவ்வாறு வருவன பிறவும் காண்க.

     ஏழுபுவனங்களும் உய்ய - சிவபூசைசெய்து அதன்
பயனாலன்றி உயிர்களுக்கு உய்தி கிடையாது என்பது ஞானநூன்
முடிபு. "சைவத் திறத்தடைவ ரிதிற் சரியை கிரியா யோகஞ்
செலுத்தியபின் ஞானத்தாற் சிவனடியைச் சேர்வர்" என்பது (8.11)
சிவஞானசித்தியார். இந்நாயனாரது திருவவதாரத்தாற் புவனம்
உய்தலா
வது இவர் காட்டிய வழியாற் சிவபூசைசெய்து அதன்
பயனை இவர்பாற் பெற்று உய்தல். இவ்வாறே "ஏழுலகுங்
குளிர்தூங்க" (திருஞான - புரா. 23) என்று கூறுவதும் காண்க.

     சைவ வாய்மை வளர்தலாவது சைவத்திற் சொல்லப்பட்ட
சிவபூசையே மக்களுக்கு உறுதி தருவதாம் என்ற முடிந்த உண்மை
நிலைபெற்றுப் பரவுதல்.

     மாதவத்தோர் வென்றி விளங்க என்றது சிவபூசை
செய்வோரின் வெற்றி விளக்க முறுதல். மாதவம் - சிவபூசை,
தவங்களுள் எல்லாம் தலைசிறந்தது அதுவே யாகலின்.
"மாதவத்தோர் செயல்வாய்ப்ப" (திருஞான - புரா. 23) என்றதும்
காண்க. இவ்வெற்றியாவது பூசையில் வரும் இடையூறுகள்
எவையே யாயினும் அவை முன்னிற்காதொழிதல். "வானந்
துளங்கிலென்...ஒருவனுக்காட்பட்ட வுத்தமர்க்கே", "அஞ்சுவ
தியாதொன் மில்லை அஞ்ச வருவது மில்லை"
என்றற்றொடக்கத்துத் திருவாக்குக்களும் சரிதங்களும் நினைவு
கூர்க. இந்நாயனார் சரிதத்தினுள், உலகர் செய்யிற்
பெரும்பாதகமாகும் செயலாகிய, மறையவனும் - தந்தையும் -
ஆகியவனைக்கொன்ற செயலும், நன்மையாகி முடிந்து
முத்திக்கேதுவாகிய வெற்றி காண்க.

     உதயம் செய்தார் - அவதரித்தார். ஞாயிறு - மதி - முதலிய
ஒளிப்பொருள்கள் உதயமாயின் உலகத்துப் புற இருள் நீங்குதல்
பயனாவதுபோல, இந்நாயனார் உதயமாயினமையால் ஆணவஇருள்
நீங்கி உய்தி பெறுதலாகிய பெரும்பயனாகுவதுஎன்பதுகுறிப்பு.

     விசார சருமனார் - இஃது இவரது பிள்ளைத் திருநாமம்.
சருமர் - மறையவர்களுக்குரிய மரபுப்பெயர். விசாரம் -
ஆத்துமஞான விசாரணை. முன்னைநிலையிலே, ஆன்ம விசாரணை
முற்றிய உணர்ச்சியுடன் வந்து அவதரித்த சாமுசித்தராவர் என்பது
சரிதத்தாலறியப்படும். "கொளுத்துவதன்முன் கொண்டமைந்து...அலகில்
கலையின் பொருட்கெல்லை யாடுங் கழலே யெனத்தெளிந்த, செலவு
மிகுந்த சிந்தை" (1220) என்பதும், மேல்வரும் பாட்டிற் கூறும்
பொருளும் காண்க. பிரளயாகலர் விஞ்ஞானகலர்களுக்குப்போல
அருள்புரியத் தக்கவர் சாமுசித்தர். "பண்டைநற் றவத்தாற்றோன்றிப்
பரமனைப்பத்திபண்ணும், தொண்டர்" என்ற சித்தியாரும்
உரையும்பார்க்க. விசாரணையாவது - உயிர்களின் இருப்பையும்,
அவற்றைக்கட்டிய பாசத்தின் இயல்பையும், அந்த மலக்கட்டினை
நீக்கி இன்பந்தரும் இறைவனையும் விசாரித்து அறிந்து, பாச
நீக்கத்தின் பொருட்டுச் சைவ சாதனங்களின் வழி நிற்றல். 12