1221.




"நடமே புரியுஞ் சேவடியார் நம்மை யுடையா"
                             ரெனுமெய்ம்மை
யுடனே தோன்று முணர்வின்க ணொழியா
                           தூறும் வழியன்பின்
கடனே யியல்பாய் முயற்றிவருங் காதன் மேன்மே
                             லெழுங்கருத்தின்
றிடநேர் நிற்குஞ் செம்மலார் திகழுநாளி
                           லாங்கொருநாள்,  16

     1221. (இ-ள்.) வெளிப்படை. "அருட்கூத்தையே இயற்றும்
திருவடியினையுடையவர் நம்மை உடைய தலைவராவர்" என்னும்
உண்மை எண்ணுந்தோறும் உடனே தோன்றும் உணர்வினுள்
ஒழியாமல் ஊறுவதாகிய அன்பின் வழியே கடமையாக இயல்பாய்
முயற்சி செய்யும்படி வருகின்ற காதலானது மேன்மேல் எழுகின்ற
கருத்தின் உறுதி பிறழாமல் நேர்நிற்கும் செம்மலார் இவ்வாறு
விளங்குகின்ற நாட்களில் ஆங்கு ஒரு நாளில், 16

     1221.  வி-ரை.) நடமே - ஆனந்தக் கூத்தினையே. நடமே
புரியும் சேவடி - தூக்கிய திருவடி; இடது திருவடி.முத்தி கொடுப்பது அத்திருவடியே யாதலின் அதனை உடையார் நம்மை உடையார்
என்றார்.

     மெய்ம்மை - உண்மை உணர்த்தும் நூல்களாகிய
வேதசிவாகமங்களின் துணிபு.

     நம்மை உடையார் - உடையவர் - (பதி), அவரதுஉடைமைப்
பொருள்கள் (உயிர்கள் - பசுக்கள்), அவைஉடையானை அடைந்து
இன்புற வொட்டாது அவற்றைக் கட்டிய பாசம், அப்பாகத்தின்
வலிபோக்கி இன்பமளிக்க அவர் செய்யும் அருள், என்ற இவ்வளவும்
இதனாற் பெறப்படுமென்க.

     உடனே தோன்றும் உணர்வின் கண் - மேற்கூறிய
மெய்ப்பொருணிச்சயமாகிய துணிபுகள் எல்லாம் ஒருங்கே,
நடமேபுரியும் சேவடியார் என்று உணர்ந்த அப்பொழுதே,
ஒருங்கே, உணர்விற்றோன்றுவனவாகும் என்பது.

     உணர்வின் ஒழியாது ஊறும் வழி அன்பு - அன்பு
இடையறாது ஊற்றெடுத்து வழிவழி வருதற்குக் காரணம் உணர்வில்
மேல்கூறிய துணிபுகள் எல்லாம் உடன் தோன்றுவதேயாகும்என்பார்
அதனை உணர்வு என்பதனோடு உடம்பொடு புணர்த்தி ஓதினார்.
வழி அன்பு - முன்னைப் பிறவியிலிருந்து தொடர்ந்து பரம்பரையில்
இடையறாது வரும் அன்பு. "முந்தை யறிவின்
றொடர்ச்சியினால்.......சிந்தை மலர உடன் மலரும் செவ்வி யுணர்வு"
(1218) என்றது காண்க. ஒழியாது - இடையறாது.

     அன்பின் கடனே இயல்பாய் முயற்றிவரும் காதல்
- அன்பினாற் கடமையாகச் செய்யும் செயலினால்,
செயற்கையானன்றி இயல்பினாலே எழும் முயற்சியாக
விளைவிக்கப்படும் காதல். முயற்றுதல் - ஊக்கப்படுத்துதல்.

     கருத்தின் திடம் நேர்நிற்கும் - காதல் கருத்தில்மேன்மேல்
எழப், பின்னர் மாறாது அதனில் ஒன்றித்து உறைத்து நிற்கும். நேர்
நிற்கும் செம்மலார்
- கருத்தின் திடத்திலே உறைப்புடன் நிற்கும்
பெரியார் - மனம் இறைவனிடமாகப் பதிந்து கொண்டவர்.
"மண்டுகாத லருச்சனையின் வைத்தார் மற்றொன் றறிந்திலரால்"
(1254), "வேறுணரார்" (1225) என்று பின்வருவன இந்த மன
நிலையினை வெளிப்படுத்துதல் காண்க. செம்மல் -
பெருமையுடையார். "பெருந்தோன்றலார்", "மேலாம் பெரியோர்"
என்பன இக்கருத்தையே தொடர்ந்து புலப்படுத்துவன.

     திகழுநாளில் - இவ்வாறு கருத்தின் திடம் நேர்நின்று
விளங்கும் நாள்களில்.

    ஆங்கு ஒரு நாள். ஆங்கு என்ற முதனீண்ட சுட்டும், ஒரு
என்ற அடையும் அந்நாளினது சிறப்பை யுணர்த்துவன. அந்நாளின்
நிகழ்ச்சிகள் மேல் 1229 - ம் பாட்டில் உரைக்கப்படுவன. அவற்றின்
பயனாக விசாரசருமனார் ஆனிரை மேய்த்து, மணலால் இலிங்கந்
தாபித்துப், பாலால் திருமஞ்சனமாட்டி, அதனாற் சிவனது
திருமகனாராகி, உயிர்களுக்குச் சிவபூசைப் பயனை
கொடுத்தருளியிருக்கப் பெற்றனராதலின் இவ்வாறு சிறப்பித்தனர்
என்பதாம். ஒருநாள் என்ற தொடக்கம் நிரைகாக்க வந்தார் (1229)
என்றதனுடன் முடிவு பெறுகின்றது.

     செம்மலர் - ஒருநாள் (1221) - நிரையினுடன் புக்கபோது- ஆ
-ஓச்ச, - அவன் புடைப்ப, - வெகுண்டு - விலக்கி .உணர்ந்து (1222)
- அறிந்தா (ராய்) - அருள்செய்வார் (1223) - "ஆனினங்கள் -
தகைமையன; - பொருந்துவன - உடைய அல்லவோ? (1224); -
ஐந்தும் அளிக்கும் (1225); மூர்த்தம் (1226); விடைத்தேவர்
குலமன்றோ? (1227);" என்று - பலவும் நினைந்து - "இதன்மேலில்லை
கடன்; - இதுவே வழுத்து நெறியாவதும்" என்று,- ஆயன்றனை
நோக்கி - "நிரைமேய்ப்பு ஒழிக நீ" என்பார் (1228) - "இனியானே
மேய்ப்பன்" என்றார்; இடைமகனும் அகன்றான்; இசைவினால் - நிரை
காக்க - மறைச்சிறுவர் - வந்தார் (1229)என்று மேல்வரும்
பாட்டுக்களுடன் கூட்டி இந்த ஒன்பது பாட்டுக்களையும் தொடர்ந்து
முடித்துக்கொள்க. 16