1223.



பாவுங் கலைக ளாகமநூற் பரப்பின் றொகுதிப்
                             பான்மையினான்
மேவும் பெருமை யருமறைகண் மூலமாக விளங்குலகில்
யாவுந் தெளிந்த பொருணிலையே யெய்த வுணர்ந்த
                                 வுள்ளத்தா
லாவின் பெருமை யுள்ளபடி யறிந்தா ராயற்
                            கருள்செய்வார். 18

     1223. (இ-ள்.) வெளிப்படை. பரந்த கலைகளும், ஆகம
நூல்களின்பரந்த தொகுதியும், உண்மைப் பகுதியினாற் பெருமை
பொருந்திய அரிய வேதங்களும், ஆகிய இவைகளின் மூலமாக,
விளங்கும் உலகத்தில் எல்லாந் தெளிந்துணுர்ந்து பொருணிலை
தெளிய உணர்ந்த உள்ளத்தினால், பசுக்களின் பெருமையினை
உள்ள படியே அறிந்தாராகி, விசாரசருமனார், ஆயனுக்கு
அருள்புரிவாராய், 18

     1223. (வி-ரை.) பரவும் கலைகள் - மிகப்பரந்துகிடக்கும்
எல்லாக் கலைகளும் அளவிடமுடியாத கலைஞானங்களைக்
குறித்தது.

     ஆகமநூற் பரப்பின் தொகுதி- மூலாகமங்கள் உபாகமங்கள்
என்ற இவை பலவற்றின் தொகுதி. தொகுதி - என்றதனால்
ஆகமங்கள் பலவாகிப் பரந்திருப்பினும் அவை கூறும் முடிந்த
பொருள்களில் ஒற்றுமையுடையன என்பதும், ஆவின்பெருமையினை
ஒன்று போலவே எல்லாஆகமங்களும் கூறுவன என்பதும் ஆம்.

     அருமறைகள் - ஆகமங்களேயன்றி வேதங்களும் ஆவின்
பெருமை கூறுவன.

     மூலமாக - ஏதுவாகக் கொண்டு. கலைகளும் ஆகமங்களும்
மறைகளும் என்னுமிவற்றை ஏதுவாகக் கொண்டு யாவுந் தெளிந்த
என்க. எண்ணும்மைகள் தொக்கன. இது நூல்வழியால் தெளிந்த
உணர்வு.

     யாவும் தெளிந்த.........உள்ளம் - பதிமுது நிலை - உயரவை
நிலை - இருண்மல நிலை - அருளது நிலை என்ற பொருணிலை
யெல்லாம் தெளிய உணர்ந்து கொண்டமைந்த உணர்ச்சியினையுடைய
உள்ளம். "நடமே புரியும் சேவடியார்நம்மை உடையார் எனும்
மெய்ம்மை" (1221) என்றதும் ஆண்டுரைத்தவையும் பார்க்க.

     பெருமை உள்ளபடி அறிந்தார் - உள்ளபடியினை -
வகையினை - அறிந்தாராதலின். படி - படியை - வகையை.
இரண்டனுருபு தொக்கது. உள்ளவாறு - உண்மையாக
என்றுரைப்பினுமாம்.

     அருள் செய்வார் - செய்வாராகி. செய்வார் -
"நிரைமேய்ப்பொழிக நீ (1228) - யானே - மேய்ப்பன்" என்றார்(1229)
என்று மேல்வரும் பாட்டுக்களுடன் முடிக்க.

     மேலே 1224 - 1227-ல் வருவனவும், "இன்ன பலவும்" (1228)
விசாரசருமனார் தம் மனத்துள்ளே நினைந்து துணிந்து கொண்ட
முடிபுகள்.

     பொருளினிலை யெய்த - என்பதும் பாடம். 18