1124. ஆய நானிலத் தமைதியிற் றத்தமக் கடுத்த
மேய செய்தொழில் வேறுபல் குலங்களின்                                  விளங்கித்,
தீய வென்பன கனவிலு நினைவிலாச் சிந்தைத்
தூய மாந்தர்வாழ் தொண்டைநாட் டியல்புசொல்
                               வரைத்தோ?
47

     (இ-ள்.) வெளிப்படை. இவ்வாறாகிய குறிஞ்சி முல்லை மருதம்
நெய்தல் என்ற நான்குவகைப்பட்ட நிலங்களிலும் அமைதிகளிலும்,
தங்கள் தங்களுக்குப் பொருந்திய செய்தொழிலாற் பலவாகிய வேறு
குலங்களினால் விளங்கித், தீயவை எனப்படுகின்றவற்றைக்
கனாவிலும் நினையாத மனத்தையுடைய தூய மக்கள் வாழ்கின்ற
தொண்டை நாட்டின தியல்பு (எமது) சொல்லினளவில்
அடங்குவதாகுமோ? (அடங்காது).

     (வி-ரை.) ஆய - மேலே சொல்லப்பட்டனவாகிய.
நன்மையாகிய என்ற குறிப்புமாம். நானிலத்தில் - அமைதியில்
என்று கூட்டுக. மேற்காட்டியபடி நிலம் நான்குவகையும் புணர்நிலம்
ஆறுவகையும் ஆகப் பத்துவகைகளிலும் என்க.

     தத்தமக்கு....விளங்கி - அடுத்த மேய செய்தொழில் -
நூல்களானும் ஆன்றோராசாரத்தானும் அவ்வவர்க்கும்
அடுத்ததென்று விதிக்கப்பட்டுப் பொருந்திய செய்தொழில்கள்.
இவை சிவாகம முதலியவற்றாலும் தமிழிலக்கணத்தானும்
அறியப்படும். செய்தொழிலைச செய்தி என்ற பெயராற்
றொல்காப்பியம் கூறும்.

     வேறுபல் - வெவ்வேறாகிய பல. குலங்கள் -
தொன்றுதொட்டுவரும் மரபுகள் - குடிகள். செய்தொழில் -
செய்தற்குரிய தொழில்.

     குலங்கள் என்றது ஈண்டுச்சாதியை. மேய - பொருந்திய.
குலங்களுக்குத் தொழிற் பொருத்தம் கூறப்பட்டுள்ளது.
மேவாதனவாகிய தொழில்களைச் செய்தல் குலநலமன்று என்பது
முன்னோர் துணிபு. "குலவித்தை கல்லாமற் பாகம்படும்", "அரிசி
விற்றிடு மந்தணர்க் கோர்மழை...வருட மூன்று மழை" என்பனவாதி வாக்குக்கள் இக்கருத்தைப் பற்றி எழுந்தன.

     மாந்தர் - அமைதியில் - குலங்களின் விளங்கி - வாழ் -
நாட்டின் - இயல்பு என்று கூட்டுக.

     வேறுபல் குலங்களில் விளங்கி - நானிலமும் அறுவகைப்
புணர்நிலமும்போலக் குலங்களும் பெருங்குலங்கள் நான்காகவும்
கலப்புக் குலங்கள் ஆறாகவும் விதிக்கப்படுவன.1 நிலத்தியல்போல,
அவ்வவற்றில் வாழும் மக்களும் தத்தமக்கடுத்த இயல்பின் வந்த
உரிய செய்தியோடு விளங்குதல் முறை என்பதாம்.

     தீய என்பன....வரைத்தோ? - தீய என்பன - தீயவை
என்று நூல்களானும் ஆன்றோராசாரத்தானும் விலக்கப்படுவன.
என்பன - எனப்படுவன. படு - விகுதி தொக்குவந்த
செயப்பாட்டுவினையாலணையும் பெயர்.

     கனவிலும் நினைவு இலாச் சிந்தை - தீமைகள் - மனம்,
வாக்குக், காயம் என்ற மூன்று கரணங்களாலும் இயற்றப்படுவன.
கொலை செய்தலும், கொல் என்று வாயினாற் கூறுதலும், கொல்ல
நினைத்தலும் என்ற இவைபோல்வன. "நல்ல நினைப்பொழிய
நாள்களி லாருயிரைக், கொல்ல நினைப்பதுவும் குற்றமு மற்றொழிய"
(திருவாரூர் - புறநீர்மை - 4) என்ற நம்பிகள் திருவாக்கும், பிறவும்
காண்க. இம்மூன்றனுள் மனத்தானும் தீமை நினையாமையே
அடிப்படையாம். என்னை? மனம் தூயதாகவே, வாக்குத்
தீமையின்றி விளங்கும்; அதனால் செயலிலும் தீமை நிகழாது.
ஆதலின் சிந்தைத் தூய்மை சொல்லவே, ஏனைய இரண்டும் உடன்வரும் என்க. கனவு - உயிர்நிற்கு நிலைகளின் ஒன்று;
இதனைச் சொப்பனாவத்தை என்பர் வடவர். இவ்வவத்தை, உயிர்,
கண்டத்தானத்தில் (கழுத்து - Little brain) தங்கும்நிலை என்ப.
இறைவனருளால் கனாக்கள், வருங்கால நிகழ்ச்சிகளை அறிவிக்க
நிகழ்வனவும் உண்டு; நோய்களாலும் கனாநிகழ்தல் உண்டு;
தூய்மையில்லாத தீச்செயல்களாலும் தீய வாசனையாலும் கெட்ட
கனாக்கள் உளவாம். அவ்வாறு நிகழாதபடி தம் செயல்களையும்
உட்கரணங்களையும் தூயநல்லொழுக்கத்தில் வைத்து நடப்பர்
பெரியோர். இம்மாந்தர்கள் இவ்வாறு நல்லொழுக்கத்து
நின்றமையால் கனாவிலும் தீயநினைவுகள் இல்லையாயின என்பதாம்.

     தூய மாந்தர் - மாந்தர் தூயராவதற்குக் காரணம் கனவிலும்
தீய நினைவில்லாமையாம் என்பதுணர்த்த உடம்பொடு புணர்த்தி
ஒதினார்.

     தூய மாந்தர் வாழ் தொண்டை நாடு - "தொண்டை
நன்னாடு" (1078)ல் உரைத்தவை பார்க்க. "எவ்வழி நல்லவ ராடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே" என்ற புறப்பாட்டும் நினைவு
கூர்க. "பெருந்தொண்டை நன்னாடெய்தி" (திருநா - புரா - 315),
"தொண்டைத் திருநாட்டில்" (திருஞான - புரா - 973), "பேருலகி
லோங்குபுகழ்ப் பெருந்தொண்டை நன்னாட்டு" (கலியர் - புரா - 1),
"சொல் விளங்குசீர்த் தொண்டை நன்னாட்டிடை" (வாயிலார் - புரா
- 1), "செம்மைநெறி வழுவாதபதி" (திருஞான - புரா - 1008) என்று
பலவிடத்தும் இக்கருத்தையே வற்புறுத்தி ஆசிரியர் விதந்தோதுதல்
காண்க. "மங்கலத் தமிழ்ப் புவிக்கு வாண்முக மெனத்தகுந்,
துங்க மிக்க கீர்த்திபெற்ற தொண்டை நாடு" (தழுவக் குழைந்த
படலம் - 129) என்ற காஞ்சிப் புராணமும் இக்கருத்தையே
தழுவிய தென்க.

     இயல்பு - இந்த மேன்மைகள் இத்திருநாட்டுக்குச்
செயற்கையாலன்றி இயற்கையானமைந்தன என்பது குறிப்பு.

     மேலே 1083 முதல் 1124 வரை உள்ள திருப்பாட்டுக்களால்
தொண்டை நாட்டின் நானிலத் தைந்திணைச் சிறப்பினைத்
சிறப்பினைத் தமிழ்இலக்கண வரம்பு காட்டிச், செம்மை நெறியுடன்
கூட்டி விரித்துரைத்த ஆசிரியரது தெய்வக் கவிநலத்தைத், தெய்வக்
கவிப்பண்புடைய எமது மாதவச் சிவஞான யோகிகள்
"திருத்தொண்டை நன்னாட்டு நானிலத்தைந் திணைவளமுந்
தெரித்துக் காட்ட, மருத்தொண்டை வாய்ச்சியர்சூழ் குன்றைநகர்க்
குலக்கவியேவல்ல னல்லாற்,
கருத்தொண்ட ரெம்போல்வா
ரெவ்வாறு தெரிந்துரைப்பார்? கலந்தார்க் கின்ப, மருத்தொண்ட
ரணியிலவை யொன்றோடொன் றியைந்தனவு மாங்காங் குண்டால்"
(திருநாட்டுப் படலம் - 128) என்று தமது காஞ்சிப்புராணத்தினுள்
எடுத்து வியந்து பாராட்டிப் போற்றினர்.

     சொல்வரைத்தோ? - வரை - அளவு. ஒகாரம் எதிர்மறை
குறித்தது. 47


     1. கலப்புக் குலங்கள், மேற்குல ஆடவரும் கீழ்க்குலப்
பெண்டிரும் கலந்ததன் பயனாக வரும் வகை மூன்றும், கீழ்க்குல
ஆடவர் மேற்குலப் பெண்டிருடன் கலந்ததன் பயனாக வரும்
மூன்றும் கூடி ஆறு என்ப.