1227.
"உள்ளுந் தகைமை யினிப்பிறவே றுளவே! யுழைமான்
                                  
மறிக்கன்று
துள்ளுங் கரத்தா ரணிபணியின் சுடர்சூழ் மணிகள்
                                   சுரநதிநீர்
தெள்ளுஞ் சடையார் தேவர்கடம் பிராட்டி யுடனே
                                  சேரமிசைக்
கொள்ளுஞ் சினமால் விடைத்தேவர் குலமன் றோவிச்
                              சுரபிகுலம்?" 22

     1227. (இ-ள்.) வெளிப்படை. "நினைக்கத்தக்க தன்மை
இனிப் பிற வேறும் உளவாமோ? உழைமான் மறிக்கன்று
துள்ளியாடுதற் கிடமாகிய திருக்கரத்தினை யுடையவரும்,அணியும்
பாம்புகளின் ஒளிசூழ் மணிகளைக் கங்கை நீரானது தெள்ளுகின்ற
சடையுடையவரும் ஆகிய சிவபெருமான்தேவர்கள்தம் பெரு
மாட்டியுடனே சேரமிசைக்கொள்ளும்படியான சினமால் விடைத்
தேவரின் குலமல்லவாஇந்தப் பசுக்குலம்?", 22

     1227. (வி-ரை.) உள்ளும் ........உளவே? - மேலும் இனி
நினைக்கத்தக்க வேறு தன்மைகளும் உளவோ? இல்லை; என்று
இப்பாட்டிற் கூறும் பொருளே முடிந்த முடிபாகக்கூறுகின்றாராதலின்
இவ்வாறு தொடங்குகின்றார்.

     உழைமான் மறிக்கன்று துள்ளும் கரத்தார் - இருடிகள்
செய்த ஆபிசாரயாகத்தினின்றும் போந்து உலகத்தை அழிக்கவந்த
மான்கன்று சிவபெருமானது இடதுகரத்தின் இருவிரனுனியில் ஆடி
நிற்பதாகும் என்பது வரலாறு. விரிவு கந்தபுராண முதலியவற்றுட்
காண்க. உழை - மான் - மறி - ஒருபொருட் பன்மொழி; பல
தன்மைகளை வற்புறுத்தி ஒரு பொருளின்மேனின்றன. அந்த
மானினது தோற்றம், நிலை, ஒடுக்கம் என்ற மூன்று வெவ்வேறு
நிலைகளைக் குறிக்க மூன்று சொற்களாற் கூறினார். உழைமான் -
ஒருவகை மான் என்பாரும், மறிக்கன்று - மறியாகிய கன்று
என்பாரும் உண்டு. "புள்ளி உழைமானின்தோலான்" என்ற மேற்கோள் முதலியனவும் காட்டுவர்.உழைமான்- புள்ளிமான் என வழங்குவர்.
மறி - மான் முதலியசில மிருகங்களின் கன்றுகளுக்குப் பெயராயும்
வழங்கும்.

     கன்று துள்ளும் கரத்தார் - சிவபெருமானது திருக்கரத்தில்
விரல்களின் நுனியில் இரண்டு கால்களை நிறுத்தித் துள்ளுவது இந்த
மான்கன்று என்பது அவரது அளவில்லாதசத்தியைக் காட்டுவதாம்
என்பர்.

     மணிகளை - நீர் - தெள்ளும் என்றும், சடையார் -
பிராட்டியுடனே - மிசைக்கொள்ளும்
என்றும் கூட்டுக. சுடர்
சூழ்ந்த மணிகளையுடைய பணியணியினையும் தெளிந்த
நீரையுடைய சுரநதியினையும் அணிந்த சடை என்றுரைத்தலுமாம்.

     அணிபணியின் - கரத்தார் அணியும் பாம்பினது. பணி -
பாம்பு. கரத்தாரது அணியாகிய பாம்பின் என்றலுமாம்.

     சுடர்சூழ்மணி - பாம்பின் தலையில் உள்ளதாகச்
சொல்லப்படும் அரதனம். "முழையர வுமிழ்ந்த செய்ய மணிவெயில்"
(778) என்றதும், ஆண்டுரைத்தவையும் பார்க்க. "நஞ்சுகால்,வாய நாக
மணிப்ப ணங்கொள் விளக்கெ டுத்தன" (திருநா - புரா - 355)
என்றதும் பிறவும் காண்க.

     சுரநதி - கங்கை. தெள்ளும் - தெளிவுகாட்டும்; விளங்கும்.

     தேவர்கள் தம்பிராட்டி - தேவர்களுக்கெல்லாம்
பெருமாட்டியார் - தலைவியார் - உமையம்மையார். தம்பிரான்என்ற
சொற்குப் பெண்பாலாகத் தம்பிராட்டி என்னும் வழக்கு இந்நாளிலும்
மலையாள நாட்டில் வழங்குவதாம். இது பழந்தமிழர் வழக்கு.

     மிசைக் கொள்ளுதல் - மேல் கொண்டு எழுந்தருளுதல்.

     சினமால் விடைத்தேவர் - சினம் - பொருளுக்கு
இயற்கையடை மொழி. அடைந்தோரைக் காக்கும் பொருட்டுப்
பகைவரைச் சீறுகின்ற என்றலுமாம் "அண்ண லரண் முரண்
ஏறும்" (காந்தா - அதிகை - 1) என்ற அப்பர் சுவாமிகள்
தேவாரம் காண்க. மால் - பெரிய. மால் - விட்டுணு என்று
கொண்டு திரிபுர மெரித்த
அந்நாளில் இடபமதாய்த் தாங்கிய
திருமால் செய்தி குறிப்பதாகக் கூறுதலுமாம்.

     விடைத்தேவர் - இடப தேவர். இவர் வேறு; திருநந்திதேவர்
வேறு. நந்திதேவர் சிவகணங்கட்கெல்லாம் நாயகராய்த் திருமலைக்காவல் பூண்டுள்ளவர். (20).

     விடைத்தேவர் குலமன்றோ இச்சுரபிகுலம் -
விடைத்தேவரைச் சூழ்ந்துள்ள நந்தை - பத்திரை - சுரபி -சூசீலை-
சுமனை - என்னும் ஐவகைப்பசுக்களின்மூலம் ஆனினம் உலகிற்
பெருகும் என்றும், இவ்வைவகைப் பசுக்களும் திருப்பாற்கடலில்
உதித்தன என்றும் கூறுவது வரலாறு.

     அடியார்களுக்கு அருள் செய்யும் பொருட்டு வெளிப்படும்
போதெல்லாம் அறவுருவுடைய விடையினை ஊர்ந்தே அறவனார்
எழுந்தருள்வாராதலின் இதனினும் வேறு சிறப்பில்லை என்று
முடிபாகக் கூறினார்.

     இதனால் விடைத்தேவர் குலம்பற்றிப் பசுக்களின் சிறப்புக்
கூறப்பட்டது.