1229.
|
"யானே
யினியிந் நிரைமேய்ப்ப" னென்றா ; ரஞ்சி
யிடைமகனுந் தானே ரிறைஞ்சி விட்டகன்றான்; றாமு
மறையோ ரிசைவினா
லானே நெருங்கும் பேராய மளிப்பா ராகிப்,
பைங்கூழ்க்கு
வானே யென்னநிரை காக்க வந்தார
தெய்வமறைச்சிறுவர். 24 |
1229. (இ-ள்.)
வெளிப்படை. "இனி இந்நிரையினை யானே
மேய்ப்பேன்" என்றார்; இடைமகனும் பயந்து அவர் முன் வணங்கி,
மேய்த்தற் றொழிலை விட்டு நீங்கினான்; தாமும் மறையோர் இசைவு
பெற்று ஆக்களே நெருங்கும் பேராயத்தினைக் காப்பாராகிப், பசிய
பயிர்களுக்கு மழையே போலப், பசுக்கூட்டங்களைக் காக்கத் தெய்வ
மறைச்சிறுவர் முற்பட்டுவந்தனர். 24 இந்த ஒன்பது பாட்டுக்களும்
தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.
1229. (வி-ரை.)
இடை மகன் - இடையன். ஆனிரை
மேய்க்கும் மரபினன்.
இறைஞ்சி விட்டு
அகன்றான் - மறையவர் பதியாதலானும்,
பதியின் எல்லாரும் தலைவர்களாகலானும், அந்த மறையவர்
கூட்டத்தினுள் விசாரசருமனார் ஒருவராகலானும் ஊர்
சமுதாயத்தாரின் உத்தரவேயாகும் இது என்று தாங்கி இறைஞ்சி
ஏற்றுக்கொண்டனன்.
யானே
நிரை மேய்ப்பன் - (இடைமகன் அஞ்சிஅகன்றானாக)
நிரை மேய்த்தல் இடையர் றொழிலாகலானும், அந்தணர்க்குரிய
தொழில்களுள் ஒன்றாகவிதிக்கப்படாமையானும், மரபு பிறழ்ந்து
விசாரசருமனார் அதனை மேற்கொள்ளவும் இடைமகன் விடவும்
நேர்ந்த இயைபென்னையோ? எனின், இதற்கு விடை முன்பாட்டிற்
கூறப்பட்டதென்க. மக்கட் கூட்டத்தின் உயிரினைப் பற்றிய உயர்ந்த
கடமைகளுள்ஒன்றாகியும் சிவவழிபாட்டு நெறியாகியும்உள்ள இதன்
முன்பு உடலைப் பற்றிய தாழ்ந்த கடமைகளாகிய உலகநிலை
மரபுவழக்குக்கள் முனைந்து நில்லாது ஒதுங்கிப்போம் என்பது
துணிபு.
மறையோர்
இசைவினால் - மறையோர் ஊர் ஆன்நிரைக்கு
உடையோர் ஆதலின் அவர்களுடைய இசைவு
வேண்டப்படுவதாயிற்று. அன்றியும் மறையவர்களுடையஊராதலானும்
மறையவர் மரபிற்குரித்தாகாத தொழில் பற்றியதாதலானும் ஏனை
மறையோர்களின் இசைவு வேண்டப்படுவதாம்.
ஆனே
நெருங்கும் பேர் ஆயம் - ஆன் - ஆனிரை.
பசுக்கள் என்னும் ஆன்மாக்களின் பொதுமையையும்
குறிப்பாலுணர்த்தி நின்றது. அளிப்பாராகி
என்ற குறிப்பும் அது.
விசாரசருமனார் நிரைகாக்க வந்தது,
ஆன் கூட்டமாகிய அந்த
ஆயம்மட்டில் அன்றி, உண்மையில், ஆன் - ஆன்மாக்கள் -
நெருங்கும் பேர் ஆயம் - பெருங்கூட்டம் - அளிப்பதற்காகவே
யாகும் என்பது. ஆனே என்ற ஏகாரமும், நெருங்கும்
என்றதும்,
பேர் (பெரிய) என்றதும் அங்கு முன்னே நின்ற
ஒரு சிறு
கூட்டமாகிய ஆனிரை குறித்ததனோடு நில்லாது ஆன்மாக்களின்
தொகுதியாகிய வேறுமொரு பெருங்கூட்டத்தைக் குறிக்க நின்றதும் கருதுக. நிரை
காக்க என்றலே ஆன் ஆயமளித்தலாகுமாதலால்
முன்சொன்ன ஆன் நெருங்கும் ஆயம் வேறு என்பதும்
குறிப்பாலுணர்த்தப்படும். நிரை காத்தலால் ஆன் நெருங்கும்
ஆயம் அளித்தலாவது - பின்னர் நிகழும் சிவபூசையும்,
அதனால் நாயனார் பெறும் சண்டேச பதமும், அது கண்டு
வழிபட்டு உலகமுய்ந்து சிவபூசைப்பயன் பெறும் நன்மையும் காரணகாரிய முறையில் பெறப்படுதல்
குறிக்கொள்க.
பைங்கூழ்க்கு
வானே என்ன - கூழ் - பயிர். வான்
-
மழை - "வான்சிறப்பு" என்றது காண்க. மழை பயிர்களைக் காத்து
வளர்த்தல் போல் நாயனார் ஆன் நிறையை ஓம்பிக் காத்து
வளர்த்தனர் என்பது. வினைபற்றி வந்த உவமம். "விசும்பிற் றுளிவீழ்
னல்லான்மற் றாங்கே, பசும்புற் றலைகாண் பரிது" (குறள்) என்றபடி
இன்றியமையாமை குறித்த உவமம்.
நிரைகாக்க
வந்தார் - காக்க - காக்கும்பொருட்டு,
காத்தற்கு. வந்தார் - காக்குந் தொழிலை
மேற்கொண்டு வந்தார்.
தெய்வ
மறைச் சிறுவர் - தெய்வமறை என்றும்,தெய்வச்
சிறுவர் என்றும் கூட்டி யுரைக்க நின்றது.தெய்வத்தன்மை வாய்ந்த
சிறுவர் என்க. "முந்தையறிவின்றொடர்ச்சி" (1218) பெற்றும், "தெளிந்த
சிந்தை" (1220) பெற்றும், "கருத்தின் திடநேர் நிற்கும் செம்ம"லாராய்
(1221), "யாவும்தெளிந்த பொருணிலையே யெய்த உணர்ந்த
உள்ளமுடை" யாராய்விளங்கியது தெய்வத்தன்மை என்க. 24
|