1232.

மண்ணிக் கரையின் வளர்புறவின் மாடும் படுகர்
                            மருங்கினிலுந்,
தண்ணித் திலநீர் மருதத்தண் டலைசூழ் குலையின்
                             சார்பினிலும்,
எண்ணிற் பெருகு நிரைமேய்த்துச் சமிதை
                      யுடன்மேலெரிகொண்டு
நண்ணிக் கங்குன் முன்புகுது நன்னாள் பலவா
                          மந்நாளில்.   27

     1232.(இ-ள்.) வெளிப்படை. மண்ணியாற்றின் கரையில்வளரும்
(முல்லைப்) புறவின் பக்கத்திலும், படுகர்களின் பக்கத்தும், குளிர்ந்த
முத்துக்களைக் கொழிக்கும் மருதநிலத்துச் சோலைகள் சூழ்ந்த
கரைகளின் பக்கத்திலும், மேன்மேல் வளர்ந்து பெருகும்
ஆனிரைகளை மேய்த்துச் சமிதையுடன் மேல் எரியினையும் கொண்டு
பொருந்தி இரவு வருமுன்பு புகுகின்ற நல்ல நாள்கள் பலவாம்;
அந்நாள்களில், 27

          1232. (வி-ரை.) புறவின் மாடும் - படுகர் மருங்கும்
- குலையின்
சார்பினிலும் - இவை விசாரசருமனார்ஆனிரைகளை
மேய்த்த இடங்களைக் குறித்தன. புறவு - மருதத்தையும் ஆற்றின்
கரையினையும் அடுத்த முல்லைப் புறவு. பசுக்கள் முல்லை நிலக்
கருப்பொருள். "முல்லையின் தெய்வமென் றருந்தமி ழுரைக்கும்"
(1095) திருமால் கோபாலனாகப் பசுக்காத்த செய்தியும் காண்க.
(குறிஞ்சியின் ஆறுகள் மலையின்வீ ழருவிகளாதலானும் குறிஞ்சி
நிலம் மேடுபள்ளமிக்குள்ள மலைச்சரிவுகளாதலானும் பசு
மேய்த்தற்குரியனவல்ல).

     படுகர் மருங்கு - ஆற்றோரத்தில் வண்டற்சேர்க்கையாற்
கூடிய பள்ள நிலம் படுகர் எனப்படும். இவை நீர்க்கரையில்
உள்ளனவாதலாற் புல்லும் செடிகளும் மிக உள்ள இடங்களாம்.

     மருதத் தண்டலை சூழ் குலையின் சார்பு - மருதநிலத்திற்
செழித்த நீர் வளத்தால் சோலைகள் மிகும்; அவற்றின் சார்பாய்க்
கரைப்பரப்பாகிய நிலங்கள். இவையும் ஆக்கள் மேய்தற்குரிய
பசும்புற் பரப்புடையன. குலை - கரை.

     எனவே இம்மூன்று வகையான இடங்களும் ஆனிரை
மேய்தற்கென்று வசதிகள் பெற்றவை; நகரின் அண்மையிலும்
உள்ளவை.

     இவ்வாறாகிய மேய்ச்சனிலங்கள் ஒவ்வோர் ஊர்களின் சுற்றும்
ஒதுக்கி வைக்கப்பட்டும், அதனால் ஆனிரைகள் செழித்தும்,
அதனால் மக்கள் சுகமுற வாழ்ந்தும் வந்தது முன்னாளில் நம்நாட்டு
மக்களின் சமூக வாழ்க்கையில் கண்ட நல்வழக்காகும். இவை
இந்நாளின் மக்களின் பேராசையின் பயனாக மாறிப்போய்,
இதற்குரிய எல்லாப் பொது நிலங்களும் மக்கள்
தனிவசப்பட்டுப்போக, ஆனிரைகள் மேய்தற்கு இடமில்லாது நலிவு
அடைந்து குறையக் காண்பதும் அதனால் மக்களின் உடற்சுகமும்
உயிர்ச் சுகமும் குறைந்துவரக் காண்பதும் புது நாகரிக
விளைவாகிய கேடுகளுட் சிலவாம். இதனை மக்கள் கண்டு
கருதித் திருந்த ஒழுகுதல் நலம்தரும்.

     மாடும் - மருங்கினிலும் - சார்பினிலும் என்றவற்றால்
பசுக்கள், புறவு - படுகர் - தண்டலை சூழ்குலை -
இவற்றுக்குட்சென்று கேடுபடாமலும் கேடுவிளைவிக்காமலும்
பக்கங்களில் மேய்க்கப்பட்டன என்பதாம். இதுவும் சமூக நல்
வழக்குக்களுள் ஒன்று என்க.

     எண்ணிற் பெருகு நிரை - பயன் என்னுங் கன்றுகள்பெருக
உளவாதல் கருதி எண்ணிற் பெருகும் என்றார்.

     சமிதையுடன் மேல் எரி கொண்டு - நிதமும் சமிதையும்
எரியும் சேகரித்து மனைக்குக் கொண்டுவருதல் மறைபயிலும்
பிரமசாரிகளின் கடமைகளுள் ஒன்று. சமிதை - மனையிற்
செய்யப்படும் நித்திய வேள்விக்குதவுவன. எரி - இங்கு
(வேள்விக்காக) எரிகடையும் மரக்கோல் (அரணி) குறித்தது.
ஆகுபெயர். "எரிகடையு மரணி" (794)"தீக்கடைகோல்" (793)
என்றவை காண்க.

     கங்குல்முன் புகுதும் - பசுக்களும் மனைக்கு மாலைப்
போதில் மாலை வேள்விக் குதவும்பொருட்டு இரவு புகுமுன்பு
திரும்பிவிடுதல் முறை என்பதாம்.

     நன்னாள் - நிரைகாக்கு மிந்நாள்களே மன்றுளாடுஞ்
சேவடிகள் வழுத்தும் சிவநெறியிற் செல்வதற்குரியனவாதலின்
இவையே நன்னாள்களாயின என்பதாம். "பேசாத
நாளெல்லாம்பிறவா நாளே" முதலிய தமிழ்மறைத்
திருவாக்குக்கள் காண்க.

     அந்நாளில் - எய்தி - பால் - பெருகி - சுரந்தன
என்றுவரும் பாட்டுடன் முடிக்க.