1235.
|
அனைத்துத்
திறத்து மானினங்க ளணைந்த மகிழ்ச்சி
யளவின்றி
மனைக்கட் கன்று பிரிந்தாலு மருவுஞ் சிறிய மறைக்கன்று
தனைக்கண் டருகு சார்ந்துருகித் தாயாந் தன்மை
நிலையினவாய்க்
கனைத்துச் சுரந்து முலைக்கண்கள் கறவாமேபால்
பொழிந்தனவால். 30 |
(இ-ள்.)
வெளிப்படை. எல்லாவகையாலும் ஆனினங்கள்
கொண்ட மனமகிழ்ச்சி அளவில்லாமல் வீட்டில் உள்ள தமது
கன்றுகளைப் பிரிந்தாலும், தம்முன் மருவிய சிறிய
மறைக்கன்றாகிய விசாரசருமரைக் கண்டு அருகே யடைந்து
உருகி அக்கன்றுக்குத்தாம் தாயாகிய தன்மையுள்ள
நிலையினைஅடைந்தவைகளாகக் கனைத்துக்கொண்டு
மடிசுரந்து முலைக்கண்களினின்றும் கறவாமே பாலினைப்
பொழிந்தன.
(வி-ரை.)
அனைத்துத்திறம் - முன் 1233 - ல்
உரைக்கப்பட்டவை.
மகிழ்ச்சி
அளவின்றி - கண்டு - சார்ந்து - உருகி -
நிலைமையவாய் - கனைத்து - சுரந்து - பால் பொழிந்தன
- என்று முடித்துக் கொள்க.
மனைக்கட்கன்று
பிரிந்தாலும் - மறைக்கன்று தனைக்கண்டு
- பிரித்தரியாத தமது கன்றுகளை மனைக்கட்பிரிந்து தாம் தனியே
மேய்வதற்கு வந்தபோதிலும் அதனால் வருந்தாது, விசாரசருமரைத்
தம்கன்றாகவே கண்டு. மருவும் - தம்முடன் மருவியிருக்கும்.
விசாரசருமனார் பசுக்களின் கூடவே யிருந்து பேணிய தன்மை
குறித்தது. "கன்றகல் புனிற்றாப் போல்வர்" (761) என்றபடி
கன்றினைப் பிரிந்த பசுக்கள் இயல்பாய் வருந்தல் வேண்டுமாயினும்,
இங்கு அதற்குமாறாக வருந்தா திருந்ததுடன், அன்பு பெருக
நின்று மடி சுரந்து பாலும் பொழிந்தன என்னில், இதுவும்
இயற்கைக்கு மாறன்று, இங்கும் அன்புமிக்க கன்றிருந்ததாகலின்
என்றதாம்
சிறிய
மறைக்கன்று - சிறுமை பிராயத்தாலும் உருவத்தாலும்
காணப்பட்டது. "அச்சிறிய பெருந்தகையார்" (திருஞான - புரா - 73)
முதலியவை காண்க. பசுக்கள் அவரைத் தம்கன்றாக
எண்ணியமையால் மறைக்கன்று என்றார். மறையோர் குழவி என்ற
பொருளும் தோன்ற நின்றது. கன்றுபோல்வாரைக் கன்று என்றது
இலக்கணை.
பிரிந்தாலும்
- கண்டு என்க. தமது கன்றாகவே கண்டு.
தாயாம்
தன்மை நிலைமையவாய் - அருகு சார்தல் -
உருகுதல் - கனைத்தல் - முலை சுரந்து பால் பொழிதல் என்ற
இவை தாய்ப்பசுக்களின் தன்மை. நிலைமைய ஆய்
-
நிலைமையை அடைந்தனவாகி. நிலைமை அவாய்
- என்று
பிரித்துத், தமது கன்றினுக்குத் தாயாயிருப்பதனுடன்
இந்தக்கன்றினுக்கும் தாயாகியிருக்கும் நிலைமையை விரும்பி -
ஆசை கொண்டு - என்றுரைக்கவும் நின்றது. அவாய்
- அவாவி
- விரும்பி. மனைக்கட் கன்று - தம்மால்
ஊட்டி வளர்க்கப்படும்
கன்று; மறைக்கன்று - தம்மை அன்புடன் ஊட்டி
வளர்க்கும்
கன்றுஎன்று கொண்டன என்பதாம். "ஏய மனங்கொள்
பெருமகிழ்ச்சி யெய்தி" (1233) என்றது காண்க.
தாயாந்தன்மை
நிலைமையில் முலையினின்றும் பால்
பொழிதல் உளதாகும் என்பதனை ஆளுடைய பிள்ளையாரது
நிலையினைக் கேட்டவுடன் தமது தனபாரங்களிற் பால் சுரந்து
நின்ற மங்கையர்க்கரசி யம்மையாரது வரலாறு
முதலியவற்றாலுமறிக. "முன்னின் - நிலைவிளம்பக், கொங்கை
சுரந்தவருட் கோமகள்" என்றார் சிவப்பிரகாச முனிவர்
(நால்வர்நான்மணிமாலை). "பிள்ளையெனச் சொல்லச் சுரந்த,
தனமுடையா டென்பாண்டிமாதேவி தாழ்ந்த,
மனமுடையாளன்பிருந்த வாறு" (திருக்களிறு - 54)
என்றது ஞானசாத்திரம்.
கறவாமே
பால் பொழிந்தன - கன்றினை நினைந்தபோதும்
கண்டபோதும் கறவாமலே பால் பொழிதல் மிக்க அன்பினுக்கும்
பாற்செழிப்புக்கும் அடையாளம். இத்தகைய பசுக்களை இந்நாளிலும்
காணலாகும் கறவாமே பால் பொழிந்த இந்நிகழ்ச்சியே
இச்சரித
விளைவுக்குத் தொடக்கமாம் இத்திருப்பாட்டு இப்புராணத்தினுள்
சரிபகுதியில் அமைந்த அமைப்பும் காண்க.
பொழிந்தனவால்
- ஆல் - அசை - அதிசயக் குறிப்புப்பட
நின்றது. முன்னர் 1233ல் முலைகள் சுரந்தனவால்
என்றார்.
அங்குத் தம் கன்றுகள் வாய் வைத்து உண்ணுமாறு சுரந்த மட்டில்
நின்றன; இங்குப் பொழிந்தன எனச் சுரந்த
மட்டில் அமையாது
முலைக் கண்களினின்றும் வெளிப்படப் பால்சொரிந்தன என்று
கூறியதும் மனைக்கன்றுக்கும் மறைக்கன்றுக்கும் பசுக்கள் கொண்ட
வேறுபாடு குறித்தது. அன்றியும், முன்னைய நிலை, மனங்கொள்
பெருமகிழ்ச்சியால் நிகழ்ந்ததாகப் பின்னையது அந்த மகிழ்ச்சி
அளவின்றிப் பெருகியதால் ஆகியது என்பதும்
காண்க.
பின்னரும் செழும்பால் பொழிந்தன (1239)
என்றதும் கருதுக.
இவ்விடங்களில் ஆல் என்ற ஒரே அசைமொழி தந்தோதியதும்,
சுரத்தல் பொழிதல் என்ற இரண்டும் கன்றின் மேற் கொண்ட
அன்பு ஒன்றே பற்றியது என்று காட்டுதற்கா மென்க. 30
|