1237.
|
அங்கண்
முன்னை யர்ச்சனையி னளவின் றொடர்ச்சி
விளையாட்டாப்
பொங்கு மன்பான் மண்ணிமணற் புளினக்
குறையிலாத்தியின்கீழ்ச்
செங்கண் விடையார் திருமேனி மணலா லாக்கிச்
சிவாலயமும் துங்க நீடு கோபுரமுஞ் சுற்றா
லயமும்
வகுத்தமைத்தார். 32 |
1237. (இ-ள்.)
வெளிப்படை. அவ்விடத்து, அர்ச்சனையினது
முன்னாளிற் செய்த தொடர்ச்சி அளவிற் சிறுவர் விளையாட்டாக
உருக்கொண்டு பொங்குகின்ற அன்பினாலே, மண்ணியாற்றின்
மணற்றிடரில், ஆத்திமரத்தின் அடியில் செங்கண் விடையினை
யுடையாரது திருமேனி யாகிய சிவலிங்கத்தை மணலினாலே
உளதாக்கிச் சிவாலயமும், பெரிய நீண்ட கோபுரமும், சுற்றாலயமும்
வகுத்து அமைத்தனர். 32
1237.
(வி-ரை.) அர்ச்சனையின்
முன்னைத் தொடர்ச்சி
யளவில் அங்கண் விளையாட்டா என்க.
விளையாட்டாப்
பொங்கும் அன்பால் - முன்னைப் பிறவி
வாசனையாகிய அர்ச்சனையின் தொடர்ச்சி இப்பிறப்பில் சிறுவர்
மணற்கூட்டி விளையாடும் விளையாட்டு என்ற உருவத்தில் வந்தது
என்பதும், அவ்வாறு வரினும் அது உள்ளே நிறைந்து பொங்கும்
அன்பினால் ஆகியது என்பதும் ஆம்.
மணற்
புளினக்குறை - மணற்றிடர் - திட்டை - திடல்.
செங்கண்
விடையார் திருமேனி மணலால் ஆக்கி -"தாபர
சங்கமங்களென்றிரண் டுருவி னின்று, மாபரன் பூசைகொண்டு
மன்னுயிர்க் கருளை வைப்பன்" (சித்தியார் - 228) என்ற இடத்து
"சதாசிவ தத்துவத்தின் வைகும் இறைவன், புறத்தே
திருக்கோயிலுள்ளிருக்கும் திருமேனியும் திருவேடமும் ஆதாரமாகக்
கொண்டு நின்றுதும், அகத்தே உயிரிடமாகக் கொண்டு நின்றும்
ஈண்டுள்ளார் செய்யும் பூசை கொண்டருளுவானாகலான்,
அஃதறிந்தவ்விடங்களின் வழிபடுக" என விதிக்கப்படுதலின்
அவ்விரண்டனுள் இங்கு விசாரசருமனார் திருக்கோயிலுள்ளிருக்குந்
திருமேனியாகிய இலிங்கத் திருமேனி கண்டு வழிபடலாயினர்
என்றும் அவ்வாறு சிவலிங்கத் திருமேனி காண்பதில் மண் -
உருத்திராக்கமணி - சந்தனம் -முதலிய பலவற்றானும் சிவலிங்கம்
ஆக்கிக்கொண்டுபூசிக்கலாமென்று விதியிருப்பதனால் அவற்றுள்
மணலாலாக்கிக் கண்டனர் என்றும் கொள்க.
திருமேனியாக்கிச்
சிவாலயமும் - கோபுரமும் -
சுற்றாலயமும் வகுத்தமைப்பார் - சிவலிங்கத்தை முன்னர்
அமைத்து வைத்துக்கொண்டு, பின் அதற்கு ஏற்றவாறுசிவாலயமும்
கோபுரமும் சுற்றாலயமும் பிறவும்அமைக்கவேண்டுவது முறை
என்றும், இப்படிக்கன்றி முன்னர் ஆலயம் கோபுரம் முதலியவற்றை
அமைத்துக் கொண்டு பின்னர் அதற்குச் சிவலிங்கம் அமைத்தல்
தகுதியன்றென்றும் கருதவைத்த முறை காண்க.
கோபுரமும்
சுற்றாலயமும் வகுத்தமைத்தார் என்றதனால்,
சிவலிங்கம் தாபித்தபின், அதற்குரிய சிவாலயமும் கோபுரமும்
முதற்கண் இன்றியமையாது வேண்டப்படுவனவென்றும், சுற்றாலயம்
அவற்றின் பின்னரே அமைக்கத்தக்கது என்றும் குறித்தபடி.
சிவலாயம்
- சிவலிங்கப் பெருமானுக்குரிய ஆலயம்.
சுற்றாலயம் - பரிவார மூர்த்திகளெனப்படும் விநாயகர் முருகர்
நந்தி தக்ஷிணாமூர்த்தி சண்டேசர் வைரவர் சூரிய சந்திரர்
முதலிய மூர்த்திகளுக்குரிய இடம். இவை முதற்சுற்றில்
இருக்கத்தக்கன.
இந்தச் சிவலிங்கமூர்த்தியும்
சிவாலயமும் இப்போது
திருவாப்பாடி மூர்த்தியும், திருக்கோயிலுமாக
அமைந்துள்ளன.
துங்கநீடு
என்றது பெருமையால் என்றும் நீடியுள்ள என்று
குறிப்பதாம்.
ஆத்தியின்
கீழ் - இந்த ஆத்திமரம் இப்போது
திருவாப்பாடிக் கோயிலினுள் தென் மேல்பாகத்தில் உள்ளது. இது
காட்டாத்தி என்ற வகையுட்பட்டது. இது போலவே சிறுத்தொண்ட
நாயனாருக்கு அருள்புரிய வந்த உத்தராபதியார்
திருச்செங்காட்டாங்குடி ஆலயத்தில் "வண்ணமல ராத்தியின்கீழ்"
எழுந்தருளியிருந்த அந்த மரமும் இப்போது தரிசிக்க உள்ளது. 32
|