1238.
|
ஆத்தி
மலருஞ் செழுந்தளிரு முதலா வருகு
வளர்புறவிற்
பூத்த மலர்க டாந்தெரிந்து புனிதர் சடிலத்
திருமுடிமேற்
சாத்த லாகுந் திருப்பள்ளித் தாமம் பலவுந்
தரங்கொய்து கோத்த விலைப்பூங் கூடையினிற்
கொணர்ந்து
மணந்தங் கிடவைத்தார். 33 |
(இ-ள்.)
வெளிப்படை. ஆத்திமலரும, செழுந்தளிரும்முதலாகப்,
பக்கத்தில் வளர்கின்ற (முல்லைச்) புறவினிற் பூத்த மலர்களுள்ளே
தாமே தெரிந்து புனிதராகிய சிவபெருமானுடைய சடையுடைய
திருமுடியின்மேல் சாத்துதற்காகும் திருப்பள்ளித் தாமங்கள்
பலவற்றையும் தாம் கொய்து இலைகளாற் கோத்துவைத்த
பூங்கூடையினிற் கொண்டுவந்து வாசனை (வெளிப்போகாது)
தங்கும்படி வைத்தனர்.
(வி-ரை.)
சாத்தலாகும் திருப்பள்ளித்தாமம் பலவும் -
இங்கு, விசாரசருமனார், இறைவனார் பூசைக்கு ஆகம விதிப்படி
சாத்தக்கூடிய னவாக விதிக்கப்பட்ட மலர், தளிர் முதலியவற்றைத்
தெரிந்து எடுத்தனர் என்றும், அவை ஆத்தி முதலிய
மலர்களென்றும் செழுந்தளிர்களென்றும், அவை அங்கு அருகில்
முல்லைப்புறவில் தம்மியல்பால் வளர்ந்து பூத்தன என்றும்
கூறப்பட்டது. ஆத்தி - திருவாத்தி என்று
கூறுப.
அருகு
வளர் புறவு - பக்கத்தில் இயல்பாய் வளர்ந்த
முல்லைப்புறவு. "மண்ணிக் கரையின் வளர்புறவின் மாடு" (1232)
என்றது பார்க்க. "சேய்ஞலூர் உள்ளது மருத நிலமேயாயினும்,
ஆமேய்க்குமிடங்கள் முல்லைப் பகுதிக்குரியன என்பதும்,
ஆமேய்த்தல் முல்லைத் திணைக்குரிய பகுதி என்பதும்,
அமைவன ஆதலின், இங்கு விசாரசருமனார் மலர்பறித்தது
அருகே வளர்ந்ததும் தாம் ஆக்களை மேய்த்த நிலமும் ஆகிய
முல்லைப் புறவின் சார்பு என்று கொள்க.
புறவிற்
பூத்த மலர்கள் - மனிதரால் வளர்க்கப்படட
நந்தனவன முதலியனவற்றிலன்றி இங்கு நாயனார் எடுத்தவை புறவில்
இயற்கையில் வளர்ந்த மரம் செடிகளிற் பூத்த மலர்களாம். இது
புண்ணிய நிலமாகிய நமது தென்திசைத் தேசத்திற்குரிய
பெருமைகளுள் ஒன்று. இதுபற்றியே"புண்ணியஞ் செய்வார்க்குப்
பூவுண்டு நீருண்டு" என்று திருமூலர் வகுத்தோதியதும்,"பூச னைக்குப்
பொருந்து மிடம்பல,பேசி லத்திசை யொவ்வா பிறதிசை" (46) என்று
முன்னர் வகுத்ததும் கருதுக.நந்தனவனங்களின் அமைவுபற்றி (240)
லும்,திருப்பள்ளித் தாமங் கொய்து சேர்க்கு முறைபற்றி (559)லும்
கூறிய ஆசிரியர் இங்கு அவ்வாறு அமையும் நந்தவனமில்லாதபோதும் சிவபூசை செய்யச் சாதனம்
தேடும் முறைபற்றி அறிவிக்கும் பண்பு
காண்க.
மலர்கள்
- மலர்களுள் ஆகும் பள்ளித்தாமம் என்றுகூட்டுக.
மரஞ் செடி கொடிகளில் உள்ளபோது பலவகை மலர்கள்
என்ற
பெயரால் அறியப்படும் இவை, சிவனுக்காகக் குறித்து டுக்கப்படும்
போது திருப்பள்ளித்தாமம் என்ற பெயரால்
வழங்கப்படும்
முறையினை, மலர்கள் - தெரிந்து,சாத்தலாகும்
திருப்பள்ளித்தாமம் - கொய்து
என்றறிவித்த பண்பு காண்க.
பூத்த
மலர்கள் என்றதனால் புதிதாக மலர்ந்த -அன்றலர்ந்த
- என்றுணர்த்தினார்.
தாந்தெரிந்து
- தாங் கொய்து - கோத்தஇலைப்பூங்கூடை
- தாமே விதி தெரிந்து தாமே கொய்துகூடையிற் கொண்டு சேர்த்தல்
நன்மை தருவதென்பது. இதுபற்றிமுன் எறிபத்தநாயனார் -
முருகநாயனார்புராணங்களிலுரைத்தவை பார்க்க.
புனிதர்
- இயல்பாகவே பாசங்களி னீங்கியர் - தூய்மை
யுடையவர் - தூய்மை செய்பவர்,
சாத்தலாகும்
- சாத்தற்கு ஆவன என்று விதிக்கப்பட்ட.1024
பார்க்க.
இலைகோத்த
பூங்கூடை என்க. மலர்களைச் சேர்த்துவைத்தற் பொருட்டுத் தாமே இலைகளாற்
கோத்துச் செய்த திருப்பூங்கூடை.
மலர்களைக் கையிற் கொண்டு சேர்த்தலும் துணி முதலியவற்றில்
வைத்துக் கொணர்தலும் ஆகாதென்பர்.
மணந்தங்கிட
- மலர்களின் மணம் காற்றினாற் பரவிவெளிச்
செல்லாமலும் வெயில் முதலியவற்றால் சிதையாமலும் அவற்றினுள்ளே
தங்கியிருக்கும்படி.
சிவபூசைக்காகக்
சிவலிங்கமும், சிவாலயமும், கோபுரமும்
சுற்றாலயமும் வகுத்தது சிவபூசை வேட்கை எழுந்தபின்
விசாரசருமனார் செய்த முதற்செயல். சிவபூசை செய்தற்குச்
சிவலிங்கமும், ஆலயமும், இன்றியமையாது முதலில்
வேண்டப்படுதலால் அவ்விரண்டனையும் முதலில் அமைத்துக்
கொண்டனர். பின்னர்த் திருமஞ்சனமாங் குறிப்பு உணர்ந்ததும்,அது
பூசையின் ஒரு அங்கமேயாதலின், அதற்குரிய பூசை புரியவேண்டியது
முதலில் அவசியமாயிற்று. பின்னர்ப் பிறஅங்கங்களும்
சாதனங்களுமாகிய மலர் முதலியன வேண்டப்படுமாதலின் அவற்றை
அடுத்தபடியாகத்தேடிக்கொண்டனர். இனி இவையெல்லாம்
குறிப்பினால்உணர்த்திய பாலாகிய திருமஞ்சனப்பொருளைத்
தேடிக்கொள்ளுதல் (1239) அடுத்தபாட்டிற் கூறுவர். அவ்வாறுதேடி
அமைத்தபின் செய்யும் பூசையினையும் அதனை இறைவர் ஏற்றுக்
கொண்டதனையும் அடுத்த (1240, 1241) இரண்டு பாட்டுக்களாற்
றொடர்ந்து கூறிப், பூசை முடித்து நாயனார் மகிழ்ந்த மனநிலையினை
அதற்கடுத்த (1242) பாட்டாற் கூறுவார். பூசை வேட்கை
எழுந்ததனையும், பூசைச் சாதனம் தேடியதனையும், பூசையினையும்,
அதனை இறைவர் ஏற்றுக்கொண்டதனையும்,அதனை நிரப்பி
விசாரசருமனார் மகிழ்ந்ததனையும் ஒரு சேரத் தொடர்ந்து (1237 -
1242) இந்த ஆறு திருப்பாட்டுக்களாலும் கூறிய வகையைக்
கண்டுகொள்க. 33
|