1239.
நல்ல நவகும் பங்கள்பெற நாடிக் கொண்டு நாணற்பூங்
கொல்லை யிடத்துங் குறைமறைவு மேவுங் கோக்க
                                   ளுடன்கூட
வொல்லை யணைந்து பாலாக்க ளொன்றுக் கொருகா
                                   லாகவெதிர்
செல்ல வவையுங் கனைத்துமுலை தீண்டச் செழும்பால்
                           பொழிந்தனவால்  34

     (இ-ள்.) வெளிப்படை. நல்லனவாகிய நவகும்பங்கள்பெறுதற்கு
நாடி எடுத்துக்கொண்டு நாணல்கள் நெருங்கிய அழகிய கொல்லை
யிடத்தும், ஆற்றிடைக் குறை மறைவிலும் மேய்கின்ற பசுக்களுடன்
கூடவிரைவில் அணைந்து பாற்பசுஒன்றுக்குஒருகாலாக எதிரே போக,
அவையும் முலைதீண்டியவுடன்கனைத்துச் செழும்பால் பொழிந்தன.

     (வி-ரை.) நல்ல நவகும்பங்கள் - நல்லனவாகிய ஒன்பது
கும்பங்கள். "ஆன்மார்த்த பூசைக்கும் நவகும்பங்கள் தாபித்து
அபிடேகம் செய்யலாமென்று காமிகாகமங் கூறுகின்றமையால்
அது வருமாறு....." என்பது சைவ பூக்ஷணம்; 71-ம் பக்கம் (104)
காண்க. ஒன்பது கும்பங்கள் தாபித்துத் திருமஞ்சன மாட்டுதல்
ஆகமவிதிகளுள் ஒன்று. நவகும்பம் - (பூசைக்காதலின்) புதிய
குடங்கள் என்பாருமுண்டு.

     பெற நாடி கொண்டு - பெற - எண்ணி; நாடி -அதற்காக
முயன்று; கொண்டு - வந்ததைப் பெற்றுக்கொண்டு. நாணற்கொல்லை
- குறைமறைவு - இவை பசுக்கள் மேயும் இடங்கள்.

     ஒன்றுக் கொருகாலாக எதிர் செல்ல - முலைதீண்டஎன்க.
ஒரு பசுவினது மடியில் ஒரு முலைக்காம்பில் பால்பெறும்படி
முலையைத் தீண்ட. ஒருகாலாக - என்றது முலைக்காம்பாக என்ற
பொருளிலும், எதிர் செல்ல என்றது முறையாகப் போக - நிகழ -
என்ற பொருளிலும் வந்தன.

     ஒருகாலாக - பால் கறத்தலில் வழங்கும் மரபு வழக்கு.
இவ்வாறன்றி ஒருதரம் என்று கூறுவாருமுண்டு. முலைதீண்டச்
செழும்பால் பொழிந்தன
- விசாரசருமனாரைக் கண்டமாத்திரத்தில்
அருகுசார்ந்து உருகி முலைசுரந்து கறவாமே பால் சொரிந்த பசுக்கள்,
அவர், தம்மை யணைந்து முலைதீண்டப் பால் பொழிதல் ஒரு
வியப்பாமோ?

     பொழிந்தனவால் - விசாரசருமனாரைத் தம் கன்றாகப்பசுக்கள் நினைந்த நிலையை முன்னரும் "பொழிந்தனவால்" (1235) என்ற
இதே சொல்லினாற் கூறினார். முன்னர்க் கூறியது பசுக்கள்
விசாரசருமனாரை அருகுசார்ந்து பால் பொழிந்தநிலை; இங்குக்
கூறியது பசுக்களை அவை மேயுமிடத்து விசாரசருமனார் அணைந்து
முலைதீண்டியபோது பால் சுரந்து பொழிந்த நிலை.

     முலைதீண்ட என்றது அன்பு பெருகப் பால் சுரக்கச்செய்யும்
செயல் அளவில் நின்றது. இங்கும் கறவாமே தீண்டிய அளவில்பால்
பொழிந்தன என்க.

     கனைத்தல் - அன்பின் பெருக்கால் நிகழும் மெய்ப்பாடு.
முன்னரும் "கனைத்துச் சுரந்து" (1235) என்றது காண்க. 34