1240.
கொண்டு மடுத்த குடநிறையக் கொணர்ந்து விரும்புங்
                             கொள்கையினால்
அண்டர் பெருமான் வெண்மணலா லயத்து
                            ளவைமுன்றாபித்து
வண்டு மருவுந் திருப்பள்ளித் தாமங் கொண்டு
                               வரன்முறையே
பண்டைப் பரிவா லருச்சித்துப் பாலின் றிருமஞ்
                               சனமாட்டி, 35

     1240. (இ-ள்.) வெளிப்படை. பொழிந்த அந்தப்பாலினைக்
குடங்கள் நிறைய ஏற்றுக்கொண்டு, கொணர்ந்து, விரும்பும்
கொள்கையினால் தேவதேவரது வெண் மணலாகிய கோயிலினுள்ளே
அவற்றை முன் தாபித்து, வண்டுகள் பொருந்த நின்ற திருப்பள்ளித்
தாமங்களினால் வரன் முறையாலே முன்னைத் தொடர்ச்சியாகிய
அன்பினாலே அருச்சனை புரிந்து, பாலின் திருமஞ்சனத்தை
ஆட்டி, 35

     1240. (வி-ரை.) மடுத்த குடம் நிறையக் கொண்டு
கொணர்ந்து
என்க.

     மடுத்த - முலைதீண்டப் பால் - பொழிந்தனவாதலின் இவர்
செய்ய எஞ்சி நின்ற செயல் அதனைக் குடத்தில் ஏற்றலேயாம்;
ஆதலின் மடுத்தகுடம் என்றார். மடுத்தல் - நிறைய ஏற்றல்;
நிறைத்தல். கொணர்ந்து - நாணற் கொல்லையிடத்தும்
குறைமறைவினும் (1239) பாலினை ஏற்ற இடத்திலிருந்து மணலினிற்
புளினக்குறையில் ஆத்தியின்கீழ்க் (1237) கோயில் ஆக்கிய
இடத்துக்குக்கொண்டு வந்து.

     ஆலயத்துள் - சிவாலயத்தினுள் (1237).

     அவை முன் தாபித்து- குடங்களைத் தாபித்தலாவது ஆசனம்
கற்பித்து வைத்தும், திருமஞ்சனமாகக் கற்பித்து அபிமந்திரித்தும்
நிறுவுதல். இதன் விரிவு சிவாகமங்களுட் காண்க.

     வண்டுமருவும் திருப்பள்ளித்தாமங் கொய்து -
இலைப்பூங்கூடையில் மலர்களைக் கொணர்ந்து மணந்தங்கிடவைத்தா
(1238) ராதலின் மணத்துக்கும் அதனால் உணர்ந்த தேனுக்குமாக
வண்டுகள் மருவி நின்றன என்பது குறிப்பு."அரும்பற் றப்பட
வாய்மலர்........சுரும்பற் றப்படத் தூவித் தொழுமினோ"(அப்பர் சுவாமி
தேவாரம்). "கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிறைத் தும்பி...........நறியவு
முளவோநீ யறியும் பூவே" என்றதிருப்பாட்டின்படி வண்டுகள்
மணத்தினாலே பூக்களைத் தெரிந்து மொய்த்துத் தேனுண்பன
என்பதறியப்படும். மருவும் - மருவ நின்ற என்க.

     திருப்பள்ளித்தாமம் கொண்டு- பூக்களைக் கொண்டு.
1238ன் உரை பார்க்க.

     பண்டைப் பரிவால் வான்முறையே அர்ச்சித்து - என்க.
அர்ச்சித்துத் - திருமஞ்சனமாட்டி என்றதனால் இது திருமஞ்சன 
மாட்டுதலின் முன்னர்ச் செய்யும் அருச்சனையாகும். திருமஞ்சனம்
முதலிய பூசை உறுப்புக்கள் எல்லாம் முடிந்தபின் செய்யும்
அருச்சனை வணக்கம் முதலியவை வேறு; அவற்றை "அருச்சனை
செய்தருளி வணங்கி" என்று (1242) பின்னர்க் கூறுவது காண்க.
இங்குக் கூறிய அர்ச்சித்தலாவது மணலாதரவாக, அதிற் சிவனது
வித்தியா தேகத்தை நிறுவி, அதிற்சிவத்தை வெளிப்படச்செய்வதற்கு
ஆகமங்களில் விதித்த மந்திரம், பாவனை, செயல் என்றவற்றைச்
செய்தலாம். இவை இலிங்கசுத்தி செய்தலும், ஆதாரசத்தி முதல்
ஆதிசத்திவரை இலிங்கபீடத்தில் வைத்துச் சிவாசன பூசைகள்
செய்தலும், அதன்மேல் இலிங்கத்தில் வித்தியாதேகமாகிய
மூர்த்தியை
வருவித்து வைத்தலும், அதன்மேல் அத்தேகத்தினுள்
சீவனாயுள்ள பரமசிவமாகிய மூர்த்தி மானைத் துவாத
சாந்தத்தின்மேல் தியானித்து வருவித்து வைத்தல் என்னும் 
சிவஆவாகனம் செய்தலும், பின்பு அவரைப் பூசை முடியும் வரை
அந்த இலிங்கத் திருமேனியில் கருணையுடன் விளக்கமாக
எழுந்தருளியிருக்க வேண்டுதலும், அதன்பின் உரிய மந்திரங்களால்,
மலர்களைக் கொண்டு கைகூப்பிச் சாத்துதலும் துதித்தலும்
வணங்குதலும் முதலாயின. "திருப்பள்ளித் தாமஞ் சாத்தி, மஞ்சனமாம்...............பாற்குடங்கள் எடுத்து நயப்புற் றாட்டுதலும்"
(1252) என்றும் பின்னரும் இவ்வாறே கூறுதல் காண்க. சுயம்பு -
ஆரிடம் - மானிடம் - முதலாக எண்ணப்பட்ட எண்வகைச்
சிவலிங்கங்களுள் சுயம்பு - தைவிக இலிங்கங்களுக்கு இந்த நியாச
ஆவாகன விதி கிடையாது. ஏனை மானிட முதலாய அறுவகைக்கும்
இவை செய்யப்பட வேண்டும் என்று சிவாகமங்கள்
விதிக்கின்றபடியால், இங்கு நாயனார் தாபித்ததும், மானிடலிங்கம்
என்ற வகையுட்பட்டதும் ஆகிய சிவலிங்கத் திருமேனியில் வரன்
முறையே
அருச்சித்து அதனிற் சிவபெருமானது விளக்கங்கண்டு,
பின்னர்த் திருமஞ்சன மாட்டினர் என்று கூறிய முறை காண்க.
திருக்குறிப்புத்தொண்ட நாயனார் புராணத்தினுள் அம்மையார்
கம்பைமா நதிக்கரையில் மாவினடியிற் பூசித்தது இறைவனார்
தமதருளாற்றாமேவந்து தோன்றிய (1134) (சுயம்பு) மூர்த்தியா
யினமையால் அங்கே இவ்வாறு ஆவாகனவிதி இயற்றப்படாமல்
திருமஞ்சனம், மெய்ப்பூச்சு, தூப, தீப முதலிய பூசைகளே தொடங்கி
ஆகமவிதிப்படி (1137) செய்யப்பெற்றன என்பதையும் இங்கு
உய்த்துணர்ந்து கொள்க. அஃது உலகின் பொருட்டுத்
தான்றோன்றிமூர்த்தியிற் செய்யப்பட்ட பரார்த்த பூசையெனவும்,
இஃது ஆன்மார்த்த பூசை என்னும் கணிக பூசை எனவும் கூறுவர்.
(நியாசம் - வைத்தல்).

     வரன் முறையே என்றது மேலே காட்டியபடி சத்திகள் -
ஆசனபூசை - நியாசம் - ஆவாகனம் - வேண்டுகை முதலிய
விதிமுறைகளை ஆகமங்களில் விதித்த கிரமப்படியே. ஆவாகனம்
முதல் புட்பதானம்வரை பத்துச் செய்கையாலும், ஐந்து
உபசாரங்களாலும் பூசனை புரியும் முறை பற்றிச் சித்தாந்த
சாராவளி கிரியாபாகம் 23 - 24 பார்க்க.

     பண்டைப் பரிவால் - முன் பிறவியின் வாசனையால்
விளக்கமாகிய அன்பினாலும், அறிவினாலும். "முந்தையறிவின்
தொடர்ச்சியினான்" (1218) முதலியவை பார்க்க. ஆகமவிதிகள்
யாவும் முன்னைப் பயிற்சி வசத்தால் விசாரசருமனார் மனத்தினுள்
அறியப்பட்டன என்க.

     பாலின் றிருமஞ்சனம் - பாலாலாகிய திருமஞ்சனம்
என்றும், பால் + இன் = பால் என்ற இனிய திருமஞ்சனம் என்றும்
உரைக்க நின்றது. இங்குப் பால்தான் இப்பூசை விளைய 
ஆதரவாயிருந்தமையின், அச்சிறப்புக் காட்டும்படி இவ்வாறு
குறித்தார்.

     ஆட்டி - இவ்வண்ணம் ஆட்ட - நயப்பாடு முதிர்ந்த
பற்றுமுற்ற - உடையவர் - கோளமதனில் நிறைந்து-
பூசைகொள்கின்றார்; பிள்ளையார் - நினைவால் - அன்பினில்நிரப்பி
- அருச்சனை செய்து வணங்கி - மகிழ்கின்றார் என்ற இந்த மூன்று
பாட்டுக்களையும் தொடர்ந்து கூட்டிப் பொருள் கொள்க.

     பண்டைப்பயில்வரல் - என்பதும் பாடம். 35