1241.
|
மீள
மீள விவ்வண்ணம் வெண்பால் சொரிமஞ்
சனமாட்ட
ஆள வுடையார் தம்முடைய வன்ப ரன்பின்
பாலுளதாய்
மூள வமர்ந்த நயப்பாடு முதிர்ந்த பற்று முற்றச்சூழ்
கோள மதனி லுண்ணிறைந்து குறித்த பூசை
கொள்கின்றார். 36 |
1241. (இ-ள்.)
வெளிப்படை. மீண்டும் மீண்டும் இவ்வாறு
வெண் பாலினைச் சொரியும் திருமஞ்சனத்தினை ஆட்ட,
ஆட்கொண்டருளுதற்கு உடையாராகிய சிவபெருமான் தம்முடைய
அன்பரது அன்பின்பால் உளதாகி மேன்மேல் உண்ணின்று பெருக
விரும்பிய நயப்பாடு முதிர்ந்ததாகிய அன்பு முற்றச் சூழும்
கோளத்தினிடத்தில் உள்ளே நிறைந்து நின்று
அவர் குறிப்பில்
கொண்ட பூசையினை ஏற்றுக் கொள்கின்றாராக, 36
1241. (வி-ரை.)
மீள மீள ஆட்ட - நவகும்பங்களையும்
மேன் மேல் ஆட்டியதனால் மீள மீள என்று அடுக்கிக் கூறினார்.
ஆள
உடையார் - ஆள்வதற்கு - அடிமைகொள்வதற்கு
- உரிமையுடையவர். ஆள உரியார் என்று பாடங்
கொள்வாருமுண்டு.
ஆளஉடையார்
- பூசை - கொள்கின்றார் என்க.
அன்பின்பாலுளதாய்
முள அமர்ந்த நயப்பாடு
முதிர்ந்தபற்று முற்ற - "நயப்புற்றாட்டுதலும்" (1252) என்பதும்,
"பூசனையை விரும்பும் வேட்கை (1236) என்றதும் காண்க. நயப்பாடு
- ஆசை. அமர்ந்த - விரும்பிய. முள
- மேன்மேற்பெருக. நயப்பாடு முதிர்ந்தபற்று
- ஆசை மிகுந்ததனாற் பற்றாகி விளைந்தது.
முற்ற
- விளைய. அன்பின்பால் உளதாய் -
அன்புகாரணமாக உளதாகிய; அன்பினையே இருக்கையாகக்
கொண்டதாகிய. பூசை வேட்கையானது அன்பினால் உளதாகியது;
அது முதிர்ந்த பற்றாக விளைந்தது. முற்ற
- முற்றியதனால்.
காரணப்பொருட்டில் வந்த வினை யெச்சம். முற்றியபடியால் -
கொள்கின்றார் என்றபடியாம். அன்பின்பால்
- அன்பின்
குறிப்பினால் கொண்ட பசுப்பாலினிடத்து என்றுரைக்கவும் நின்றது.
முள
அமர்ந்த நயப்பாடு - "பொங்குமன்பால்"
(1237); "மண்டுகாதல்" (1254).
சூழ்கோளம்
அதனில் உள் நிறைந்து - கோளம் -இங்கு
மணலாலாகிய சிவலிங்கத்தைக் குறித்தது. கோளம்
- வட்ட
வடிவமாகிய பொருளைக்குறிக்கும் பெயர். இங்கு அவ்வாறமைந்த
சிவலிங்கங் குறித்து நின்றது. சூழ் கோளம் - சூழ்தல்
- கருதுதல்.
விசாரசருமனார் கருதியமைத்துக் குறித்த சிவக்குறி.
உண்ணிறைந்து
- மணலிலிங்கத் திருமேனியினுள்ளேநிறைந்து. எங்கும் நிறைந்த இறைவராயினும், இங்குவிளக்கமாக
நிறைந்தனர்.
பசுவினிடத்துப் பால் உடல் முழுதும் நிறைவுடையதாயினும் மடியின்
முலைக்காம்பில் விளக்கமாக நிறைவதுபோல என்க. அரிவாட்டாய
நாயனாருடைய நியதி வழுவாது "படிமிசைக் கமரில் வந்து"
பூசைகொண்டதும், அவ்வாறு வருவன பிறவும் நினைவு கூர்க.
குறித்த
- இது, சிவபெருமான் எழுந்தருளியிருக்கும்
திருமேனியாகும் என்ற குறிப்பினாற் பூசித்த. மணல் என்ற குறிப்பு
நீங்கச் சிவமென்ற குறிப்புப்பெற மன நேர்பட்ட என்றபடி."அண்ணல்
பாதங், கொண்டவன் குறிப்பினாலே கூப்பினான்
தாப ரத்தை"
(ஆப்பாடி - 4) என்ற திருநேரிசையின் கருத்தினை ஓர்க. குறித்த
பூசை - சிவத்தினிற் குறிவைத்த பூசை.
கொள்கின்றார்
- ஏற்றுக் கொள்வாராகவே ஆளஉடையார்
கொள்கின்றாராதலின், அது கண்டு வணங்கி, ஆட் செய்வாராகிய
பிள்ளையார் மகிழ்கின்றார் என்று மேல்வரும்
பாட்டில் முடிவது
காண்க.
கொளநின்றார்
- என்தும் பாடம். 36 |