1242.
பெருமை பிறங்குஞ் சேய்ஞலூர்ப் பிள்ளை யார்த
                                 முள்ளத்தில்
ஒருமை நினைவா லும்பர்பிரா னுவக்கும் பூசை
                                  யுறுப்பான
திருமஞ் சனமே முதலவற்றிற் றேடா தனவன்
                                 பினினிரப்பி
வருமந் நெறியே யர்ச்சனைசெய் தருளி வணங்கி
                             மகிழ்கின்றார். 37

     1242. (இ-ள்.) வெளிப்படை. பெருமை விளங்கும் சேய்ஞலூர்ப்
பிள்ளையார் தமது உள்ளத்தில் ஒன்றுபட்ட நினைப்பினாலே தேவர்
பெருமான் மகிழும் பூசனையின் உறுப்புக்களாகிய திருமஞ்சனமே
முதலாகியவற்றில் தாம் தேடிக் கொள்ளாதவற்றை அன்பினால்
நிரப்பிக்கொண்டு
வரும் அந்நெறியிலே அருச்சனை செய்தருளி
வணங்கி மகிழ்கின்றாராயினர். 37

     1242. (வி-ரை.) பெருமை பிறங்கும் சேய்ஞலூர் என்றும்,
பிறங்கும் பிள்ளையார்
என்றுங் கூட்டி உரைக்கநின்றது.
பெருமையினாற் பிறங்குதல். பெருமையானது இங்குச் சார்ந்ததனாற்
பிறங்குதற் கிடமாகிய என்றுரைத்தலுமாம். பிறங்குதல் -
விளங்குதல். பிள்ளையார் - "ஆளுடைய பிள்ளையார்" என்பது
போல உலகத்தந்தையாகிய சிவபெருமான் "உனக்கு நாம் தாதை"
(1259) என்றருளி மகனாகக் கொள்ள வருவாராதலின் இவ்வாறு
கூறினார். சேய்ஞலூரில் வந்தவதரித்த பிள்ளையார் என்றலுமாம்.

     தம் உள்ளத்தில் ஒருமை நினைவால் - "ஒன்றியிருந்து
நினைமின்கள்" என்பது திருவிருத்தம். ஒருமை நினைவாவது
பூசிக்கும் தாமும், பூசிக்கப்படும் சிவபெருமானும் வேறாகக்
காணமுடியாது நினைவினில் ஒற்றித்து நிகழ்தல். இதனையே
இலயம்
என்பது வடவர் வழக்கு. "ஒன்று முள்ளத்
துண்மையினால்" (1252) என்பதும், பின்னர் இச்சரிதத்தில்
எச்சதத்தன் தம்மைப் புடைத்துக் கொடிதா மொழி கூறவும்
வேறுணராது நிற்பதும், "மண்டு காத லர்ச்சனையின் வைத்தார்
மற்றொன் றறிந்திலரால்" (1254)என்பதும் காண்க.

     உம்பர்பிரா னுவக்கும் பூசை - "இறைவர்தாம் விரும்பும்
உண்மை யாவது பூசனை யென" (1128) என்றது காண்க.
உவத்தலாவது உயிர்கள் தம்மைப் பூசித்து இன்பமடையச்
சங்கற்பித்தல்.

     பூசை உறுப்பான திருமஞ்சனமே முதலவற்றில் தேடாதன
அன்பினில் நிரப்பி
- பூசை உறுப்புக்களில் இலை பூ
என்றவற்றையும், திருமஞ்சனவகையில் பாலும் தேடி அமைத்துக்
கொண்டமை முன்னர்க் கூறப்பட்டது. ஏனையவாகிய திருமஞ்சனநீர்
- சந்தனம் - புகை - அமுது - முதலியவைகளில் தாம் தேடி
அமைத்துக் கொள்ளாதவற்றை அன்பினால் ஆக்கிக் கொண்டு
என்றபடி.

     அன்பினால் நிரப்புதல் - பாவனையால் உளவாகக்
கொண்டு பூசித்தல். தேடாதன என்றார் முன் சொன்ன பூ இலை
பால் என்றவற்றின் மேலும் திருமஞ்சனநீர் தேடிக்கொள்ளக்
கிடைத்தமை குறித்தற்கு. திருமஞ்சனமே முதலவற்றில் - பூசை
உறுப்புக்களில் திருமஞ்சன நீர் இன்றியமையாததாய் முதன்மை
பெற்றது என்பது குறிப்பு. "பூவுண்டு நீருண்டு"(திருமந்திரம்),
"பூவோடுநீர் சுமக்கும் நின்னடியார்" (சம்பந்தர்), "சலம் பூவொடு
தூபமறந் தறியேன்" (அப்பர்), "தூயகாவிரியி னன்னீர்
கொண்டிருக் கோதி யாட்டி" (மேற்படி - திருநேரிசை) முதலிய
திருவாக்குக்கள் காண்க.

     வரும் அந்நெறியே - ஆகமங்களில் விதித்தபடி வருகின்ற
அவ்வழியாலே. அகரச்சுட்டு வரன்முறையே- 1240) என முன்னர்க்
கூறியதனைச் சுட்டி நின்றது. அந்நெறி யாவன - உரிய, ஆடை -
சந்தனம் - பூ - மாலை - அணிகள் முதலியவற்றால்
அலங்கரித்தலும், உரிய மந்திரங்களால் அர்ச்சித்தலும், தூய தீபம்
அர்க்கியம் கொடுத்தலும், அமுதூட்டலும், ஆவரணபூசைசெய்தலும்,
துதித்தலும், வணங்குதலும், சபித்தலும் முதலாயின. "உயர்ந்த
வர்ச்சனைமுறை உய்த்தார்" (9), "மாடு சூழ்புடை வலங்கொண்டு
வணங்கிமுன் வழுத்தித், தேடு மாமறைப் பொருளினைத் தெளிவுற
நோக்கி, நாடு மஞ்செழுத் துணர்வுற விருந்துமுன் னவின்றார்" (10)
என்ற திருநீலநக்கநாயனார் புராணம் முதலியவை காண்க.

     மகிழ்கின்றார் - பூசை முடிந்த பின்னும், அதனால் நாயனார்
கொண்ட மகிழ்ச்சி குறைவுபடாது நிலவி நின்றது என்பது குறிக்க மகிழ்ந்தார் என்னாது மகிழ்கின்றார் என்று நிகழ்காலத்தாற்
கூறினார். "நீடுபூசனை நிரம்பியு மன்பினா னிரம்பார்" (திருநீலநக்கர்
புரா - 10) என்றது காண்க. "முந்நிலைக் காலமுந் தோன்று
மியற்கை, யெம்முறைச் சொல்லு நிகழுங் காலத்து, மெய்ந்நிலை
பொதுச்சொற்கிளத்தல் வேண்டும்" (தொல் - சொல் - 43) என்பதும்,
"முக்காலத்து மொத்தியல் பொருளைச், செப்புவர் நிகழுங் காலத்
தானே" (நன் - பொது - 32) என்பதும், இலக்கணமாதல் காண்க.
முன்னர்க், "கொள்கின்றார்" (1241) என்றதும் கருதுக.

     தேடாதன அன்பினில் நிரப்பி - பூசை உறுப்புக்களாகிய
சாதனங்கள் முற்றும் தேடக்கிடையாத போதும் அதனாற் பூசை
முட்டுப்படாது இயற்றுதல் வேண்டும் என்பதனை
வற்புறுத்தியதுடன், அவ்வாறு இயற்றும் வழியினையும் வகுத்துக்
காட்டிய வாறாயிற்று. இவற்றின் விரிவு ஆகமங்களுட் காண்க.
பூசைக்கு இன்றியமையாத பூவும் நீரும் நமது புண்ணிய பூமியில்
எங்கும் தேடக்கிடைப்பன என்பதனைத் திருமூலதேவநாயனார்,
"புண்ணியஞ் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு" என்று
வழிகாட்டி உபதேசித்தருளினர். இவையும் கிடைக்காதபோதும்
பூசை முட்டாமல் மனத்தாற் செய்யத்தக்கது என்பது விதியாம்
என்பதனையும், மனத்தன்பால் நிரப்பும் வகையினையும்,
"போதும் பெறாவிடிற் பச்சிலை யுண்டுபுன லுண்டெங்கும்;

ஏதும் பெறாவிடி னெஞ்சுண்டறே" (கழுமல மும் - கோவை -
12) என்று பட்டினத்தடிகள் வற்புறுத்தி யருளியது காண்க.37