1244.
|
செயலிப்
படியே பலநாளுஞ் சிறந்த பூசை செய்வதற்கு முயல்வுற் றதுவே திருவிளையாட் டாக முந்நூ
லணிமார்பர்
இயல்பிற் புரிய மற்றிதனைக் கண்டித் திறத்தை
யறியாத
அயன்மற் றொருவ னப்பதியி லந்த ணாளர்க்
கறிவித்தான். 39 |
(இ-ள்.)
வெளிப்படை. இப்படியாகிய செய்கையாலேபின்னரும்
பலநாள்களும் சிறப்பாகிய பூசனை செய்வதற்குமுயல்வுற்று,அதுவே
திருவிளையாட்டாக நிகழ, முப்புரிநூலணிந்த மார்பினையுடைய
விசாரசருமனார் இயல்பினாற் புரியும் மற்றஇதனைக் கண்டுஇதன்
திறத்தினை அறியாத அயலானாகிய மற்றை யொருவன் அந்த ஊரில்
அந்தணர்களுக்கு இதனை அறிவித்தான்.
(வி-ரை.)
சிறந்த...........திருவிளையாட்டாக - சிறந்த
பூசை- முத்தி நெறிகளாகிய சைவசாதனங்கள் நான்கனுள் கிரி
யைஎன்னும் சிறப்புடைய இரண்டாவது சாதனமாம் என்றபடி. இது
புத்திரமார்க்கம் எனவும் படும். "புத்திரமார்க்
கம்புகலிற் புதிய
விரைப் போது புகை யொளிமஞ் சனமமுது முதல்கொண் டைந்து,
சுத்தி செய்தா சனமூர்த்தி மூர்த்தி மானாஞ் சோதியையும் பாவித்தா
வாகித்துச் சுத்த, பத்தியினா லருச்சித்துப் பரவிப் போற்றிப்
பரிவினொடு மெரியில்வரு காரியமும் பண்ணி, நித்தலுமிக்
கிரியையினை யியற்று வோர்க ணின்மலன்ற னருகிருப்பர் நினையுங்
காலே" (சித்தி - 8 - 20) என்ற திருவாக்கும், "கிரியையோ கங்கள்
கிளர்ஞான பூசை, யரிய சிவனுரு வமரு மரூமந், தெரியும் பருவத்துத்
தேர்ந்திடும் பூசை, யுரியன நேயத் துயர்பூசை யாமே" (5 - 30) என்ற
திருமூலர் திருமந்திரமும் இங்குக் கருதத்தக்கன.
முயல்வுற்று-
முயற்சியாவது ஒருகுறிக்கோளை அடைவதற்குச்
செய்யும் செயல். சாதனம் என்ப.
அதுவே
திருவிளையாட்டாக இயல்பிற் புரியும் - சிறந்த
பூசை செய்யும் முயற்சி பெருமுயற்சியாலும் பலநாள் முயன்று
கைவரும் சிறந்த சாதனையாலும் ஏனைப் பெரியோர்கள்பால்
அரிதில் வருவதாகவும், இவரிடத்துச் சிறுவர் இயல்பிற் செய்யும் விளையாட்டுருவமாக
நிகழ்ந்தது என்றபடியாம். இவர்பால்
பூசைவிளையாட்டாகவும் விளையாட்டே பூசையாகவும் விளைந்தது
என்க.
இது முன்னைத்
தொடர்பால் ஆகியது. "நின்ற விதியின்
விளையாட்டா நிறைந்த வரும்பூசனை" (1252) என்று பின்னர்க்
கூறுவதும் காண்க. ஏனையோர் செய்வன கருவிளையாட்டுக்களாய்க்
கழிந்தொழிய, இவர் செய்தது திருவாகிய சிவத்தைப் பெருவித்தலால்
திருவிளையாட்டு எனப்பட்டது.
இயல்பிற்
புரியும் - செயற்கையானன்றித் தம் இயல்பினாற்
செய்தனர். மனிதர்க் கியல்பாக அமையவேண்டுவது சிவவழிபாடு,
தலையும் வாயும் கையும் முதலிய கருவி கரணங்கள் எல்லாம்
அதற்காகவே தரப்படுதலான்; அல்லாதவை எல்லாம் இயல்பிற்
மாறுபட்டவை என்பது குறிப்பாகும். "ஒழியா தூறும் வழியன்பின்
கடனே யியல்பாய் முயற்றிவரும் காதல்" (1221)
என்று முன்னர்க்
குறித்ததும் இங்கு நினைவு கூர்க.
மற்றிதனை -
மற்று என்பது ஏனைச் சிறார் விளையாட்டுப்
போலாது சிறந்த பூசை முயல்வுற்ற செயலாகும் என்ற குறிப்பில்
நின்றது.
இத்திறம்
- சிறந்த பூசையாகும் தன்மை. கண்டு - நேரிற்
கண்டு. கண்டும் என உம்மை தொக்கது எள்றுரைத்தலுமாம்.
அறியாத
அயல் மற்று ஒருவன் - விசாரசருமனார் செய்த
சிறந்த பூசையினை நேரே காணும் பேறுபெற்றும் உண்மைத்திறத்தை
அறியும் விதியின்றி அறியாமையினால் மீதூரப்பட்டு வினை
விளைத்தானாதலால், இவ்வாறு அயல் - மற்று - ஒருவன்
என்று
மும்முறையும் வேறுபடுத்திக் கூறினார்.
மற்று
- பெரியதனிற் பெரியதனைக் கண்டும் சிறியதனிற்
சிறிய அறிவு படைத்தவன் என்றது குறிப்பு. முன்னர் மற்றிதனை
என்றதில் மற்று என்றது சிறார் விளையாட்டுக்களின்
தோற்றமுடையதனை அத்தொகுதியினின்றும் பிரித்து உயர்வின்கட்
செலுத்தியது; மற்றொருவன் என்றதில் மற்று
என்றது விதியும்
அறிவும் உடைய மக்களின் தோற்றமுடைய அவனை
அத்தொகுதியினின்றும் பிரித்து இழிபின்கட் செலுத்தியது. மற்று
-
இரண்டும் அசை என்பாருமுண்டு. 39
|