1246.



ஆங்கு மருங்கு நின்றார்க ளவ்வந் தணன்றன்
                                 றிருமனையின்
பாங்கு சென்று மற்றவனை யழைத்துக் கொண்டு வரப்,                                      பரந்த
ஓங்கு சபையோ ரவனைப்பார்த்த "தூரா
                       னிரைமேய்த்துன்மகன்செய்
தீங்கு தன்னைக் கே" ளென்று புகுந்த பரிசு
                                 செப்புவார், 41

     1246. (இ-ள்.) வெளிப்படை. அங்குப் பக்கத்தில் நின்றவர்கள்
அவ்வந்தணனுடைய திருமனையினிடத்துப போய், மற்றவனை
அழைத்துக் கொண்டு வரவே, பரந்த ஓங்கிய அந்தச் சபையோர்கள்
அவனைப்பார்த்து "உன் மகன் ஊரவருடைய ஆனிரையை
மேய்த்துச் செய்யும் தீங்கினை நீ கேட்பாயாக!" என்று தொடங்கி,
நிகழ்ந்த செய்தியைச் சொல்வார்களாகி, 41

         1246. (வி-ரை.) ஆங்கு மருங்கு நின்றார்கள் -
சபையில் "அழைமின்" என்று சொன்னவர்களின் அருகில்
நின்றுகொண்டிருந்தவர்கள்; இவர்கள் சபையினரிடம் தம்
காரியத்தின் பொருட்டு நின்றவர்கள். மருங்கு எனவும், நின்றார்கள்
எனவும் கூறிய குறிப்பினால் சபையோரிடம் வந்து பக்கத்தில்
நின்றவர்கள் என்பது பெறப்படும். சபையோர் குறிப்பிட்டு எவரையும்
தனிநோக்காது "அழைமின்" என்று பொதுமொழியா லுரைத்தாலும்,
அதுகொண்டு அங்கு மருங்கு நின்றவர்கள் சென்று அந்தப்பணி
செய்தல் வழக்கு. அந்தணர்களின் ஊர்ச்சபையாதலின் வேறு
எவரும் அதில் உட்காந்திருக்க இடம் பெறாது நின்றிருத்தலும்
வழக்காகும். தில்லைமறையோர் சபைமுன் திருநீலகண்டநாயனார்
நின்றதும், திருவெண்ணெய் நல்லூர் அந்தணர் சபையின்முன்
நம்பியாரூரரும் சுற்றத்தார்களும் நின்றதும் ஆகிய சரிதங்களையும்
உன்னுக.

     திருமனை - விசாரசருமனார் அவதரித்தருளிய இடமாகவும்
இருக்குமிடமாகவும் உள்ளதாதலின் இவ்வாறு போற்றினார்.
இத்திருமனை யின் அடையாளங்களேனும் அது இருந்த இடமேனும்
குறித்துக் காப்பாற்றப் பெற்றிருப்பின் அது சைவ உலகத்துக்குப்
பெருஞ்சிறப்புத் தருவதாயிருந்திருக்கும்.

     மற்றவன் - "அறியாத அயன்மற் றொருவன்" (1244)
என்றவன்போல அவனும் அயலவனாக நிற்பவன் என்பது குறிப்பு.
மற்று - அவனை என்று பிரித்து உரைத்தலுமாம்.

     புகுந்த பரிசு - நிகழ்ந்த தன்மை. புகுதல் - நிகழ்தல்
- போதல்.

     செப்புவார் - செப்புவாராகி. முற்றெச்சம். செப்புவார் -என்று
- வாய்மொழிந்தார் என்று கூட்டி முடிக்க.

     தீங்கு - மேற்பாட்டில் விரிக்கப்பட்டது. "செயல்தன்னைக்கேள்"
என்னாது செய்த தீங்கு என்று செயலைச் சொல்லுதற்கு முன்பே
முடித்து ஓதியது, அது தீங்கு என்பதனைச் செய்தி கேட்குமுன்பே
அவன் மனதில் ஊன்றுவித்தற் பொருட்டு.

     வரப்பகர்ந்த - என்பதும் பாடம். 41