1247.





"அந்த ணாள ராகுதிக்குக் கறக்கும் பசுக்க
                             ளானவெலாஞ்
சிந்தை மகிழ்ந்து பரிவினாற் றிரளக் கொடுபோய்
                           மேய்ப்பான்போற்
கந்த மலிபூம் புனன்மண்ணி மணலிற் கறந்து
பாலுகுத்து வந்த பரிசே செய்கின்றா னென்றா"
                னென்று வாய்மொழிந்தார். 42

       1247. (இ-ள்.) வெளிப்படை. அந்தணாளர்கள்
வேள்விக்குப் பால் கறக்கும் பசுக்களை யெல்லாம் மனமகிழ்ந்து
அன்பினாலே திரட்டிக் கொண்டுபோய் மேய்ப்பவன் போல,
மணங்கமழும் பூக்கள் பொருந்திய நீர் நிறைந்த மண்ணியாற்றின்
மணலிற் கறந்து பாலினைக் கீழே ஊற்றி (மனதுக்கு) வந்த
தன்மையாகவே செய்கின்றான் என்று சொன்னான்" என்று
சொன்னார்கள். 42
  

     1247. (வி-ரை.) அந்தணாளர் ஆகுதிக்கு - ஆறனுருபு
விரிக்க. ஆகுதிக்குக் கறக்கும் - ஆகுதிக்காக வேண்டும்
வளங்களைத் தருவதற்குப்பால் கறக்கும் என்க. நான்கனுருபு
கொடைப் பொருளில் வந்தது. முன்னர்"ஓமதேனுக்கள்" (1210-1234)
என்றது காண்க. ஆகுதி - சிவவேள்வி. "பசுக்கள் பால்குன்றியவழி
அவியின்மையானும், அது கொடுத்தற்குரியார் மந்திரங் கற்பமென்பன
ஓதாமையானும் வேள்வி நடவாதாம்" என்று "ஆபயன் குன்றும்"
என்ற குறளின்கீழ்ப் பரிமேலழகர் உரைத்தனர்.

     சிந்தை..........போல் - முன் "ஆயன்...........ஒழுகும்" (1245)
என்று தாம் கொண்ட கருத்தினை எச்சதத்தனிடம் அந்தணர்
அறிவிக்கும் மொழிகள். மேய்ப்பான் போல் - என்றதனால்
மேய்ப்பதாகச் சொல்லியது வஞ்சமொழி என்றும், அவ்வாறு
செய்யமுற்பட்டது போலியே என்றும் குறித்தபடியாம்.

     சிந்தை மகிழ்ந்து - ஆ மேய்ப்பதில் கொண்ட உள்ள
நிறைந்த மகிழ்ச்சியே காரணம் என்று காட்டியபடி.

     பரிவினால் - பசுக்களின்மேல் வைத்த அன்பினால்.
பரிவினால்
- சிவன்பால் வைத்த அன்பினால் என்ற உண்மைக்
குறிப்பும் காண்க.

     வந்த பரிசே - சிறாராகிய தமது மனதுக்கு வந்தபடியே."மனம்
போன போக்கெல்லாம்" என்றதுபோல. தாம் இவ்வுலகில் முன்னைத்
தொடர்ச்சியுடன் வந்த அத்தன்மைக் கேற்றபடியே என்றதோர்
உண்மைக்குறிப்பும் காண்க.

     செய்கின்றான் - என்றான் - அச்செய்தியைத் தாம் அறிந்த
வகையினைக் கூறியபடி. அது தாம் நேரிற் கண்டறிந்ததன்று;
மற்றவன்பாற் கேட்டறிந்ததொன்று என உணர்த்தியபடியாம்.
அவையோர் முறை செய்கின்றபோது ஒருவன் தம்முன் வந்து
சொன்ன செய்தியும், அதற்குப் பிறர் கூறும் பக்கமும் கேட்டுஒழுங்கு
செய்தல் போல, என்றானாதலின் அதற்கு உனது விடை யாது?
என்ற குறிப்புப்பட நின்றது.

     என்றான் - அயன் மற்றொருவனென்ற எழுவாய் தொக்கது.
மற்றவனைக் குறித்த பெயரும் மறைந்து நின்றது.

     வாய்மொழிதல்- சொல்லுதல். நீதிமன்றத்தில் வழங்கும்
மரபுமொழி. வாய் என்றது வாளா பெயராய் நின்றதெனினுமாம்.

     அந்தண் மறையோர் - என்று மறையோர்
வாய்மொழிந்தார்
- என்பனவும் பாடங்கள். 42