1248.





மறையோர் மொழியக் கேட்டஞ்சிச் "சிறுமா ணவகன்
                                    செய்தவீ
திறையு நான்முன் பறிந்திலே; னிதற்கு
                           முன்புபுகுந்ததனை
நிறையும் பெருமை யந்தணர்காள்! பொறுக்க வேண்டு
                                நீங்க"ளெனக்
குறைகொண் டிறைஞ்சி, யினிப்புகுதிற் குற்ற மெனதே
                            யா"மென்றான். 43

     (இ-ள்.) வெளிப்படை. மறையவர்கள் இவ்வாறு
சொல்லக்கேட்டுப் பயந்து, "சிறுமாணவகன் செய்த இதனைச்
சிறிதேனும் நான் முன்பு அறியேன்; இதற்கு முன்பு நிகழ்ந்த
தீமையினை, நிறையும் பெருமையுடைய அந்தணர்களே! நீங்கள்
பொறுத்துக்கொள்ளவேண்டும்" என்று குறை கொண்டு வணங்கிக்
கேட்டுக் கொண்டு "இனி, இச்செயல் நிகழ்ந்தால் குற்றம்
என்னுடையதேயாகும்" என்று எச்சதத்தன் சொன்னான்.

     (வி-ரை.) சிறுமாணவகன் செய்த ஈது - செய்த -
செய்ததாகச் சொன்ன தான் கண்டிலனாயினும், சபையோர்
கேட்டுச் சொல்லத், தான் கேட்டறிந்ததனை உள்ளதெனவே
கொண்டு, பிழை யுடன்பட்டவனாய்ச், "செய்ததகாச் சொன்ன"
என்னாது செய்தஎன்றே கூறினான். இதற்கு முன்பு புகுந்ததனைப்
பொறுக்க வேண்டும்" என்று குறைகொண்டிறைஞ்சுதலும், "இனிப்
புகுதில்" என்றதும் இக்கருத்துப் பற்றியே எழுந்தன.

     இறையும் - ஒரு சிறிதும். முன்பு - நீங்கள் சொல்வதற்கு
முன்பு.

     நிறையும் பெருமை அந்தணர்காள்! பொறுக்க வேண்டும்
- பொறுத்தற்குக் காரணங் கூறியவாறு. நிறையும்
பெருமையுடையோராதலின் என்க. இது நீதிச் சபையோரைச்
சுட்டிக்கூறும் மரபு வழக்குமாம். "அனைத்துநூ லுணர்ந்தீர்" (200)
முதலியவையும், ஆண்டுரைத்தவையும் பார்க்க.

     குறை கொள்ளுதல் - தன்குறையைச் சொல்லி வேண்டிக்
கொள்ளுதல். பிழையுடன் படுதல்.

     இனிப்புகுதில் குற்றம் எனதே ஆம்- என்ற அவன் வாய்
மொழிகள், பிற்றைநாள் விசாரசருமனார் செய்யப்புகும் செயலினை
நேரே கண்டும், அத்திறத்தை அறிந்துகொள்ளாத குற்றமும், சினந்து
அவரைப் புடைத்துக் கொடிதா மொழி கூறியும்பாற்குடத்தைக்
காலாற் சிதறியும் செய்யும் சிவாபராதமாகிய பெருங்குற்றமும் என்
மேலதாகவே இருக்குமன்றி அவர்மேற் குற்றமொன்று மிராது
என்றதோ ருண்மைக் குறிப்புப் பெற நிற்பனவாதலும் காண்க. 43