1249
|
அந்த
ணாளர் தமைவிடைகொண் டந்தி தொழுது
மனைபுகுந்து
"வந்த பழியொன்" றெனநினைந்தே மகனார் தமக்கு
வாய்நேரான்
"இந்த நிலைமை யறிவே" னென் றிரவு கழிந்து
நிரைமேய்க்க
மைந்த னார்தாம் போயினபின் மறைந்து சென்றான்
மறைமுதியோன். 44 |
(இ-ள்.)
வெளிப்படை. அந்தணர்களிடம் விடைபெற்றுக்
கொண்டு, மாலைச் சந்திக்கடன் முடித்து, வீடடினுட் புகுந்து இந்த
மகனால் தனக்கு வந்த பழி இது ஒன்றாகும் என்று நினைந்து
கொண்டு, மகனாரிடம் இதனைச் சொல்லாதவனாய், "இந்த
நிலைமையினை யானே நாளை நேரிற் கண்டறிவேன்" என்றுஎண்ணி,
அன்றிரவு கழிந்தபின், மைந்தனார் தாம் ஆனிரைகளை
மேய்க்கப்போன பின்பு, மறை முதியோனாகிய எச்சதத்தன் மறைந்து
சென்றனன்.
(வி-ரை.)
விடைகொண்டு - பிழை யுடன்பட்டு
மன்னிப்புக்கேட்டும், இனிவரில் என்குற்றமே என்று ஒப்பியும்
அவையோரிடம் விடைபெற்றுக்கொண்டு. அவையோர் அவனது
வேண்டுகோளுக்கு இணங்கி விடைதந்தனர் என்பது.
அந்தி
தொழுது - மறையோர் அந்தியிற் செய்யவேண்டிய
சந்தியா தியானம் என்னும் கடமையைச் செலுத்தி. அந்தி
என்பது ஆகு
பெயராய் அந்நேரத்தில் வழிபடற்குரிய
தேவிக்காயிற்று.
வந்த
பழி ஒன்று - ஒன்று - பெயர்ப்பயனிலை. மகனார்
-
மைந்தனார் - என விசாரசருமரைப் பன்மையிற்கூறிய ஆசிரியர்
தந்தையை ஒருமையாற்கூறிய தன்மை காண்க. இவ்வாறேமேல்வரும்
பாட்டுக்களில் வருவனவும் கண்டு அவ்வவற்றின் அமைதியையுங்
கண்டுகொள்க.
வாய்
நேர்தல் - சொல்லுதல். மகனாரிடம்
சொல்லாதிருந்ததற்குக் காரணமாவது பழி ஒன்று வந்ததென்று
கவலை கொண்டதும், தானே நேரில் அறிவேன் என்று துணிந்ததும்
ஆம் என்பது குறிக்க, வாய் நேரான் என்பதனை
அந்த
இரண்டற்குமிடையில் வைத்தோதினார்.
இரவு
கழிந்து - கழிய என்பது கழிந்து
என வந்தது.
வினையெச்சத்திரிபு. எச்சதத்தன் கவலையினால் தூக்கம் பிடியாமல்
இரவுக் காலம் கழித்தான் என்று குறிப்பினா லுணர்த்தினார்.
மறையோர் ஆகுதிக்குக் கறக்கும் பால் வீணாய்ப் போயினதெனக்
கேட்டதும் அவன் கொண்ட அச்சமும், அந்திதொழுது
என்றதனால் அவனது ஒழுக்கமும் புலப்பட்டமை
காண்க. "இருமை வினைக்கும்
ஒருவடிவாம்" (1215) என்றபடி அவன் நல்வினைக்கும் காரணனாதலின் பழியஞ்சிக் கவன்றான்
என்பதாம்.
மறைந்து
சென்றான் மறை முதியோன் - பின்சென்றதனால் எழுவாயும் பின் வந்தது.
மறை - வேதம் என்றும், மறைதல் என்றும்
இருபொருளும் படநின்றது. பின்னரும் மறைந்து - குரவின்மிசை யேறி ஒளித்
திருந்தான் (1250) என்பது காண்க. விசாரசருமரின் ஒளியின்
முன்அவன் மறையவேண்டிய நிலையிலுள்ளவனே யாவன் என்க.
"நஞ்சுடைமை தானறிந்து நாகங் கரந்துறையும்" என்பது நீதிநூல்.
மகனாரிடத்தில் நேரில் கேட்டும் அல்லது கூடவே சென்றும் அறிந்து
கொள்ளும் நிலையினையுடைய தந்தை இவ்வாறு மறைந்து
நிற்கவேண்டும் அவசியமில்லையாதலின் அதுபற்றி முன்னர் "அதுவே
நஞ்சு மளிக்கு மரவு போல்" (1215)என்று உவமித்ததன் பொருத்தமும்
கண்டுகொள்க. மேலும் இக்குறிப்பினால் அவனை "மறையோன்" (1250),
"முதுமறையோன்" (1253), "மாலாமறையோன்" (1255), "மறையோன்"
(1256), "முதுமறையோன்" (1263) என்றே கூறுவதும் உய்த்துணர்ந்து
கொள்க. அவன் காசிப கோத்திரத்தில் உதித்து மறைபயின்று ஒழுகிய
அளவில் மறையோனாய் முதியோனாய் நின்றொழிந்தனனன்றி
மறையின் உட்பொருளாகிய சிவஞனாத்தினை உணராது
மடவோனாய் நின்றான் என்பது குறிப்பு. பின்
- காலமு மிடமும்
குறித்தது. 44
|