1250.
|
சென்ற
மறையோன் றிருமகனார் சிறந்த வூரா
னிரைகொடுபோய்
மன்றன் மருவும் புறவின்கண் மேய்ப்பார் மண்ணி
மணற்குறையி
லன்று திரளக் கொடுசென்ற வதனை யறிந்து
மறைந்தப்பா
னின்ற குரவின் மிசையேறி நிகழ்வ தறிய
வொளித்திருந்தான்.
45 |
(இ-ள்.)
வெளிப்படை. அவ்வாறு சென்ற மறையோனாகிய
எச்சதத்தன் தனது திருமகனாராகிய விசாரசருமனார் சிறந்த ஊர்
ஆனிரைகளைக் கொண்டு போய் மணங்கமழும் புறவினிடத்து
மேய்ப் பாராகி மண்ணியாற்றின் மணற்குறையில் அன்று
திரட்டிக்கொண்டு சென்ற அச்செயலை அறிந்து, மறைந்து
அப்பால் நின்றதொரு குராமரத்தின்மேல் ஏறி இனி நிகழ்வதனை
அறிவதற்காக ஒளித்திருந்தான்.
(வி-ரை.)
திருமகனார் - மேய்ப்பார் - கொடுசென்ற அதனை-
மறையோன் - அறிந்து - மறைந்து - அறிய - ஒளித்திருந்தான்
என்று கூட்டியுரைத்துக்கொள்க.
சிறந்த
ஊர் என்றும், சிறந்த ஆனிரையென்றும்
கூட்டி
உரைக்க நின்றது. இரு வழியும் சிறப்பு விசாரசருமனாரது
தொடர்பினால் உளதாகிய தென்க.
மன்றல்
மருவும் புறவு - மன்றல் - மணம். இது புறவினிற்
பூக்கும் பலவகை மரங்களின் மலர்கள் - இலை - தளிர் - என்றி
வற்றாலாவது. "மணந் தங்கிட" (1238); "வண்டு மருவும்
திருப்பள்ளித்தாமம்" (1240); "கந்தமலி" (1247) என்பன காண்க.
அன்று - விசாரசருமனார் திருவருள் பெறவும், எச்சதத்தன்
கழுவாயில்லாத சிவாபராதமும் நீங்கப்பெற்றுக் கதிபெறவும்,
இச்சரித நிகழ்ச்சியினால் உலகம் சிவபூசைப் பயன் பெற்றுய்யவும்
நின்ற ஒப்பற்ற திருநாளாதலின் அதனை அன்று
என உயர்வு
தான்றச் சுட்டிக் கூறினார். அன்று - அன்றும்.
உயர்வு சிறப்புந்
தந்து நின்ற இறந்ததுதழுவிய எச்சவும்மை தொக்கது.
அறிந்து
- அறிய- திரளக் கொடுசென்ற அதுவரைக்கும்
அறிந்தனன்; இனி மேல் நிகழ்வதனை அறியநின்றான் என்க.
அப்பால்
- சிறிது தூரத்திற் கப்பால். அகரம் சேய்மைச்சுட்டு.
மகனாசெய்வதனைத் தான் நன்கு காணவும் தன்னை அவர்
காணாமலும் இருக்கும் இடம் தேடினானாதலின் தூரத்திலிருந்த
மரத்தை நாடியதுடன் அதன்மேல் ஏறி ஒளித்தும் இருந்தான்.
குரவு
- குரா என்பது ஒருவகை மரம். இதன் மலரைச்
சிவபெருமான் உகந்தணிவர். "குராமலரோ டரா மதியஞ் சடைமேற்
கொண்டார்" என்ற திருத்தாண்டகமும், "திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற" என்ற திருவிசைப்பாவும் காண்க. இதனை
நந்தவனங்களின் வைத்துப் போற்ற வேண்டிய மரங்களினுள்
வகைப்படுத்தி 240-ல் ஆசிரியர் கூறியதும் ஆண்டு உரைத்தவையும்
பார்க்க. 45
|