1251.

அன்பு புரியும் பிரமசா ரிகளு மூழ்கி யரனார்க்கு
முன்பு போல மணற்கோயி லாக்கி முகைமென்
                               மலர்கொய்து
பின்பு வருமான் முலைபொழிபால் பெருகுங் குடங்கள்
                                   பேணுமிடந்
தன்பாற்கொணர்ந்து தாபித்துப் பிறவும் வேண்டுவன
                                சமைத்தார், 46

     1251. (இ-ள்.) வெளிப்படை. அன்பு புரிகின்றபிரமசாரிகளாகிய
விசாரசருமனாரும், நீரில் மூழ்கிப், பின், சிவபெருமானுக்கு முன்னை
நாட்களிற் போல மணலாற் சிவாலயமும், சுற்றாலயமும் ஆக்கி,
அன்று மலரும் அரும்புகளையும் மெல்லிய மலர்களையும் கொய்து,
பின்புவரும் பசுவின் முலைபொழிபால் பெருகும் குடங்களைப்
பேணும் இடத்திற் கொண்டு வந்துதாபித்துப் பிறவும்
வண்டுவனவற்றை அமைத்துக் கொண்டாராகி,46

           1251. (வி-ரை.) அன்பு புரிதல் - அன்பினால்
தூண்டப்பட்ட செயல் செய்தல். அன்பு- அதனால் விளையும்
செயலுக்காயிற்று. அன்பு கொண்ட என்றலுமாம்.

     பிரமசாரிகள் - பன்மை விகுதி பெருமைகாட்டி நின்றது.
‘உம்மை சிறப்புணர்த்திற்று.

     மூழ்கி - இதனை நித்த நியமமாய்ச் செய்து பூசனைசெய்தனர்.
இந்நாட் பூசையுடன் இனி மூழ்கும்செயல் வேண்டப்படாமல் "அந்த
உடம்பு தன்னுடனே அரனார் மகனா" ராய்(1264) விளங்கும்
பெருமை குறித்து இங்குச் சொல்ல வேண்டியிருத்தலின், முன்னர்,
முதலிற் பூசைசெய்யத் தொடங்கின செயல் கூறும்போது (1237-ல்)
இதனைச் சொல்லாதுவிட்டதிறம் காண்க.

     முன்புபோல மணற்கோயி லாக்கி - முன்பு ஆக்கியதிறம்
1237-ல் விளக்கப்பட்டது. (முன்புபோல) முகைமென்
மலர்கொய்து
என்க. இதனை 1238-ல் காண்க.

     பின்பு வரும் ஆன்முலை பொழிபால் - பின்பு வரும்
- மலர் கொய்துவைத்த பின்பு செய்ய வருவதாகிய இச்செயலை
விரிவாய் 1239-1240-ல் உரைத்தபடி இங்கும் கொள்க. பால்
கறந்து வெகுநேரம் தங்கினால் அதன் தன்மை மாறுமாகையால்,
ஏனைப்பொருள்களை அமைத்தபின் அதனைத்தேடிக் கொள்வது
அமைவுடைத்தாம் என்பது குறிக்க அம்முறைபற்றியே இறுதியிற்
கூறியதுடன் பின்பு வரும் என்றும் குறித்தார். இனி, அன்று
கொண்டபால் முன்னை நாட்களிற் கொண்ட பால்போலன்றிப்
பின்னே வரும் சரித விளைவுக்குக் காரணமாய் வருதல் குறிப்பிற்
கூறியபடியுமாம். "வெவ்வே றியல்பினில்" (811) என்றதும்ஆண்டுரைத்த
வையும் காண்க.

     ஆன்முலை பொழிபால் - கறவாமல் ஆன் தாமேபொழிந்தன
என்ற பொருள் தோன்றப் பொழிபால் என்றார். "முலைதீண்டச்
செழும்பால் பொழிந்தனவால்" (1239) என்றதுகாண்க.

     பெருகுங்குடங்கள் பேணுமிடந் தன்பாற் கொணர்ந்து
தாபித்து
-1240 பார்க்க. பெருகுங்குடங்கள் என்றது பால்நிறையப்
பொங்கப்பெற்ற என்ற பொருளில் வந்தது. பேணும்இடம்-
ஆலயத்தினுள் திருமஞ்சனக் குடங்கள் வைக்கவேண்டிய முறையின்
அமைத்த இடம்.

     பிறவும் வேண்டுவன- திருமஞ்சன நீர் - தருப்பைமுதலாயின.
இதற்குச் சிவலிங்கம் முதலாயின என்பர் ஆறுமுகத்தம்பிரானார்.
"அரனார்க்கு
முன்புபோல மணற் கோயிலாக்கி" என்றதனால்
சிவலிங்கம் முன்னரே பெறப்பட்டமை கண்டு கொள்க.

     வேண்டுவன பிறவும் என்க. பூசைக்குரிய சாதனங்களையும்
வேண்டுவனவாகிய பிறவற்றையும், இரண்டனுருபு தொக்கது.

     சமைத்தல்- தேடிக் கொள்ளுதலும், தேடியபின் அவற்றைப்
பூசைக் குரியபடி மாலை முதலியன போல அமைத்துக்
கொள்ளுதலுமாம். 46