1252.
நின்ற விதியின் விளையாட்டா னிறைந்த வரும்பூ
                            சனைதொடங்கி
யொன்று முள்ளத் துண்மையினா லுடைய நாதன்
                              றிருமுடிமேன்
மன்றல் விரவுந் திருப்பள்ளித் தாமஞ் சாத்தி
                                மஞ்சனமா
நன்று நிறைதீம் பாற்குடங்க ளெடுத்து நயப்புற்
                             றாட்டுதலும், 47

        1252. (இ-ள்.) வெளிப்படை. நின்ற விதியின்
விளையாட்டாலே நிறைந்த அரிய பூசனையைத் தொடங்கி ஒன்றிய
உள்ளத்தின் உண்மையினாலே ஆளுடைய நாதரது திருமுடிமேல்
வாசனை பொருந்திய திருப்பள்ளித் தாமத்தைச் சாத்தி அருச்சித்து
நன்றாக நிறைந்த இனிய பாற்குடங்களை எடுத்து ஆசையுடன் திரு
மஞ்சனமாக ஆட்டுதலும். 47
    

     1252. (வி-ரை.) நின்ற விதியின் விளையாட்டால் -
சைவாகமங்களின் நிலைத்த விதிகளின்படியே விளையாட்டாகவும்.
நின்ற விதியின் - விதியின் நின்ற என்று கூட்டி முன்னைப்
பிறவி வாசனையினால் அவரது மனத்தினுள்ளே தோன்றி நின்ற
என்றுரைத்தலுமாம். "முந்தை யறிவின் றொடர்ச்சியினால்" (1218),
"செம்மை நெறியே உறுமனத்தில்" (1236), "முன்னை யர்ச்சனையின்
அளவின் றொடர்ச்சி விளையாட்டா" (1237) என்று முன்னர்க்
கூறியவை காண்க.

     நிறைந்த அரும் பூசனை - முன்னர், "குறித்தபூசை" (1241),
"நிறை பூசனை" (1243) என்ற ஆசிரியர் இங்கு இனி நிறைவாக
வுள்ளதனை இவ்வாறு இறந்த காலக் குறிப்பொடு கிளந்தது
அன்றைய நாட்பூசை விரைவில் நிறைவு பெறும் அரிய பூசையாய்
விளங்குவ தொன்றாகும் என்ற குறிப்புப்பெறக் கூறியபடியாம்.
"தேடாதன வன்பினி னிரப்பி" (1242) என்றபடி பூசையின்
எல்லாவுறுப்புக்களும்
நிறைந்த என்றலுமாம். பிறர் எல்லாரும்
செய்யும் பூசைகட் கெல்லாம் குறிக் கொள்ளத் தக்க
இலக்கியமாயும் பயன் றருவதாயும் நிகழ்வதொன்றாகலின் அரும்
பூசனை என்றார்.

     ஒன்றும் உள்ளத் துண்மை - ஒருப்பட்ட உள்ளத்தின்
மெய்ம்மைநிலை. "ஒருமை நினைவால்" (1242) என்றதுகாண்க. மனம்
ஒருப்படாதபோது பூசனையாற் பயனில்லை என்பது துணிபு. "பொக்க
மிக்கவர் பூவுநீ ருங்கண்டு, நக்கு நிற்பனவர்தமை நாணியே" என்ற
திருக்குறுந்தொகையும் பிறவும் காண்க.

     உண்மை - உள்ளத்தின் தன்மையாகிய ஒருமைப்பாடு.
இவ்வுள்ள நிகழ்ச்சி பின்னர் 1254 - 1257 பாட்டுக்களில்
விரித்துக் கூறிய புறநிகழ்ச்சிகளால் அறியப்படும்.

    உடைய நாதன் - ஆளுடைய இறைவர். "உடைய நாதனே
போற்றி" என்பது திருவாசகம். "ஆளவுடையார்" (1241) என்றது
காண்க.சிவபூசைக்கு "உடையவர்" பூசை என வழங்கும்
சைவமரபும் கருதுக. உயிர்கள் யாவும் இறைவனது அடிமைகளாம்
என்பது உண்மைநூற்றுணிபு. அதனை எஞ்ஞான்றும் மனத்தினுள்
ஊன்றவைத் தொழுகுதல் வேண்டும் என்பது உயர்ந்தோர்
ஒழுக்கமாம். கல்வெட்டுச் சாசனங்களில் உடையார் எனவரும்
வழக்கும் காண்க.

     திருப்பள்ளித்தாமஞ் சாத்தி....ஆட்டுதலும் - முன்னரும்
"அருச்சித்துப் பாலின் திருமஞ்சன மாட்டி" (1240) என்றது காண்க.
அபிடேகத்தின் பொருட்டு அட்டபுட்பஞ் சாத்தி என்பாருமுண்டு.

     நன்று நிறை தீம் பாற் குடங்கள் - "பெருகுங் குடங்கள்"
என முன் பாட்டிற் கூறியது காண்க. நன்று நிறை என்பது
குடங்களுள் நிறைந்தது பால் அளவில் அமையாது நன்றென்பன
எல்லாம் நிறைந்தன என்ற குறிப்புப்பட நிறைந்தது. நன்று
ஆட்டுதலும்
எனக்கூட்டி யுரைத்தலுமாம்.

     விளையாட்டா நிறைந்த - என்பதும் பாடம். 47