1253.

பரவ மேன்மே லெழும்பரிவும் பழைய பான்மை
                            மிகும்பண்பும்
விரவ மேதக் கவர்தம்பான் மேவும் பெருமை
                            வெளிப்படுப்பா
னரவ மேவுஞ் சடை முடியா ரருளா மென்ன
                              வறிவழிந்து
குரவ மேவு முதுமறையோன் கோப மேவும்
                         படிகண்டான்.   48

     1253. (இ-ள்.) வெளிப்படை. பரவ மேன்மேல் எழுகின்ற
அன்பும், முன் பிறவி வாசனை மீக்கூரும் பண்பும் பொருந்த,
மேன்மையுடைய அவரிடம் உள்ள பெருமையை
வெளிப்படுத்துவதற்குப், பாம்பினை யணிந்த சடைமுடியுடைய
சிவபெருமானது அருளேயாமிது என்று சொல்லும்படி அறிவழிந்து,
குராமரத்தின் மேவி இருந்த முதுமறையோனாகிய எச்சதத்தன்,
கோபமூளும்படி அதனைக்கண்டனன். 48
    

     1253. (வி-ரை.) பரிவும் - பண்பும் - விரவ என்க.
பரவ எழும் பரிவு
- பரவ எழுகின்ற ஆசை.

     பரவுதல் - இங்குப் பூசிக்கும் எல்லா உறுப்புக்களையும்
உள்ளிட்டு நின்றது. பூசை செய்யச் செய்ய அதில் அன்புமிகுதல்
உயர்ந்தோரிலக்கணம்.

     பரவ எழும் பரிவு என்றது இப்பிறவியின் முயற்சியும்,பழைய
பான்மை மிகும் பண்பு
என்றது அதற்கு ஆதரவாய் முன்னைப்
பிறவியிற்கொண்ட சைவ ஒழுக்க முயற்சியும் குறித்தன. பான்மை -
பழைய வாசனை. முன்பாட்டில் நின்ற விதி என்றதும், "அன்பர்
அன்பின் பால் உளதாய்" (1241) என்றதும் காண்க.

     பரிவும் - பண்பும் - விரவ - இவ்வாறாகப் பொருந்தி
நிற்க இந்த நிலையினை(க் கண்டான்) என்க.

     மேதக்கவர் - மேன்மையுடையவர். மேதகைமை - மேன்மை.

     பெருமை வெளிப்படுப்பான் - மேன்மையினை உலகர்க்குப்
புலப்படும்படி வெளிப்படுத்திக் காட்டும் பொருட்டு. வெளிப்படுத்திக்
காட்டாவிடில் அறிவார் ஒருவருமிலர் என்பதாம். பானீற்று
வினையெச்சம். வெளிப்படுப்பான் - சடை முடியார் - அருளாம்
என்ன அறிவழிந்து
- வெளிப்படுத்துவதற்காகச் சடையார்
மேற்கொண்ட அருள் என்னும்படி மறையோன் அறிவழிந்தனன்.
அவன் அறி வழியாது, கோபம் மேவாது நேர்கண்டிருப்பானாயின்
தான் அன்று செய்ததுபோலச் செய்திருக்கமாட்டான்; அப்படிச்
செய்திரானாயின் விசாரசருமரது பெருமை இவ்வுலகில்
வெளிப்பட்டிராது; ஆதலின் அருளே அவனை அறிவழியச் செய்தது
என்ன என்றார். அருள் அறிவுருவாதலின் அறிவழியச் செய்யுமோ
என்றையுறுவார்க்குப் பெருமை வெளிவருவதற்காகத்
திருவருளாயிற்று இது என்னும்படி என்றார். "உள்ளங் கவர்ந்
தெழுந் தோங்குசினங் காத்துக், கொள்ளுங் குணம்" என்றபடி
அறிவழிந்தவரே கோபங் கொள்வர் என்ற குறிப்பும் காண்க.

     முன்னர் 1240 - 1241 - 1242 மூன்று பாட்டுக்களிற்
கூறியதுபோல் ஈண்டும் இந்த மூன்று பாட்டுக்களால்
விசாரசருமனாரது பூசையினைக் கூறும் பண்பும் காண்க. முன்னர்க்,
"குறித்த பூசை கொள்கின்றார்" (1241) என்று பூசையினை ஏற்று அருள் வைத்ததனைக் கூறியபடியே, ஈண்டும், "சடைமுடியார் அருளாம்
என்ன"
என்று உவமை முகத்தாற் குறிப்பார் போன்று அருளினைக்
கூறிமுடித்த பெற்றியும் சிந்தித்துக்களிக்கவுள்ளது.

     பிரமசாரிகளும் - ஆக்கி - கொய்து - தாபித்து - சமைத்தா
(ராய்த்) (1251) - தொடங்கி - சாத்தி - எடுத்து - ஆட்டுதலும் (1252),
- விரவ - முதுமறையோன் அறிவழிந்து - கோப மேவும்படி
கண்டான் (1253) என்று இந்த மூன்றுபாட்டுக்களையும் தொடர்ந்து
முடித்துக்கொள்க.

     விரவு மேதக்கவர் - என்பதும் பாடம். 48