1255.






மேலாம் பெரியோர் பலகாலும் வெகுண்டோ னடிக்க
                                  வேறுணரார்
பாலார் திருமஞ் சனமாட்டும் பணியிற் சலியா
                                   ததுகண்டு
மாலா மறையோன் மிகச்செயிர்த்து வைத்த
                         திருமஞ்சனக்குடப்பால்
காலா லிடறிச் சிந்தினான் கையாற் கடைமைத்
                             தலைநின்றான்.
50

     (இ-ள்.) வெளிப்படை. வெகுண்டோனாகிய எச்சதத்தன்
பலகாலும் அடிக்க மேலோராய பெரியோர் வேறு அதனை
உணராதவராகிப் பாலினால் நிறைந்த திருமஞ்சன மாட்டும்
திருப்பணியிற் சலியாததனைக் கண்டு, அறிவழிந்து மயக்க மெய்தி
மிகவும் கோபித்து, முன்னர்ச் செயலினாற் கடைத்தொழிலிற்
றலைநின்றானாகிய அம்மறையவன், வைத்திருந்த திருமஞ்சனக்
குடப்பாலினைக் காலினால் இடறிச் சிந்தினான்.

     (வி-ரை.) மேலாம் பெரியோர் - மிகப் பெரியோர்.
பெரியோராயுள்ள யாவர்க்கும் மேலாகும் நிலையினுள்ளவர்;
தொண்டர்கள் பெரியோர்; இவர் "தொண்டர்தமக் கதிபராக"
உள்ளாராதலின் மேலாம் (மேல் - ஆகும்) என்ற குறிப்புமாம்.

     பலகாலும் - வெகுண்டோன் அடிக்க -
வெகுண்டோனாதலின் பலகாலும் அடிக்க என்று பலகாலும்
செய்ததற்குக் காரணங் கூறியவாறு. கோபத்தால் அறிவிழந்
திராவிடில் ஒரு முறையோடு நின்றிருப்பான் என்றதும் குறிப்பு.

     சலியாதது - ஒரு சிறிதும் பிறழாது செய்தலை. இரண்டனுருபு
விரிக்க. "சலியாது முயன்ற தவப்பெருந் தொண்டர்."

     மாலா மறையோன் - பலகாற்செய்தும் பயனின்றாதலை
உணர்ந்துங் அறிவு பெற்று உண்மையறிய மாட்டாதவனாய்
கையாற்செய்த தீமைபோல் காலாலும் செய்ததற்கு அவனது
அறிவழிந்த மயக்கமிகுதியே காரணம் என்றபடி. மால்ஆம்-
மாலினால் - மயக்கத்தினால் - மீதூரப்பட்டு மாலின்படிவமேயாகும்
என்றது குறிப்பு.

     மிகச் செயிர்த்து - முன்னர் அறிவழிந்து கோப மேவினான்;
இப்போது அறிவு முற்றுமழிந்ததுடன் மயக்கமே உருவாகி மேலும்
கோபம்கொண்டு என்க.

     வைத்த திருமஞ்சனக் குடப்பால் - தாபித்து வைத்தவற்றுள்
(1251) எடுத்து ஆட்டியவைபோக எஞ்சி இனி ஆட்டுதற்கென்று
தாபித்து வைக்கப்பட்டிருந்ததொரு குடம் என்பது குறிப்பு.
திருமஞ்சனப் பாற்குடம் என்க.

     காலால்.....தலைநின்றான் - கை- செயல் ஒழுக்கம். கை -
சிறுமையுமாம். கடைத்தொழிலில் தலைநின்றவன். கையினால் இனி
மேலும் செய்யும் கடைத் தொழிலின்மையின் காலினாலும் அவ்வாறே
செய்தான் என்பதுமாம். கடைமை - தலை - முரண்அணி. கை -
கால்
- சொல்லணி. தலைநின்றான்- வினையாலணையும் பெயர்.
சிந்தினான் - அதனால் தலைநின்றான் என வினைமுற்றாகக்
கொண்டுரைத்தலுமாம்.

     இவ்வொரு பாட்டில் வெகுண்டோன் - மாலா மறையோன்
- கையாற் கடைமைத் தலைநின்றோன் என்று மும்முறை
எச்சதத்தனைக் குறித்து முடித்தது அவன் செய்தசிவாபராதத்தினை
மும்முறையாலுங் கடிந்து மொழிந்து காட்டியதுடன், அதனைச்
சொல்லுமுன், தன்னை அது தாக்காதபடி கழுவாய் செய்து
கொள்ளவே முதலில் மேலாம் பெரியோர் என விசாரசருமரைத்
துதித்துக் கொண்டார் என்க.

     கடைமைத்தலை நின்றான் என்று முன்பு செய்த
அபாரதத்தினைக் கடைத்தொழிலிற் றலைமை காட்டிய ஆசிரியர்,
பின்னர்ச் செய்ததனை, இடறிச் சிந்தினான் என்ற மட்டில்
அமைந்ததனால் முன் செய்கை அடியார்பாற் செய்த அபசார மாய்ப்
பின்னதனினும் கொடிய மிக்க பெரும்பாதகமாம் என்பது குறிப்பாம்.
"முன்னத்தி னுணருங்கிளவியு முளவே, யின்ன வென்னுஞ்சொன்முறை
யான" (தொல் - சொல் - எச்ச - 63) என்றபடிஇவ்வாறு மும்முறை
கூறி அவனது மிகக் கடையனாந் தன்மை குறித்தனர்.
"தனியுமொரேவழி" என்றதனால், மறையோன்செயிர்த்துக், கடைமைத்
தலைநின்றான் சிந்தினான் என்று, ஒரு பொருள் மேல்வந்த
பலபெயர்க்கும் தனி வினைகள் தந்து முடித்தார்.

     சலியாரது கண்டு - என்பதும் பாடம். 50