1256.
|
சிந்தும்
பொழுதி லதுநோக்குஞ் சிறுவ ரிறையிற்
றீயோனைத்
தந்தை யெனவே யறிந்தவன்றன் றாள்கள் சிந்துந்
தகுதியினான்
முந்தை மருங்கு கிடந்தகோ லெடுத்தார்க் கதுவே
முறைமையினால்
வந்து மழுவா யிடவெறிந்தார்; மண்மேல் வீழ்ந்தான்
மறையோனும். 51 |
(இ-ள்.)
வெளிப்படை. சிந்தும் பொழுதிலே அதனை நோக்கும்
சிறுவர், சிறிதளவில், அந்தத் தீயவனைத் தந்தையெனவே அறிந்து,
அவனது தாள்கள் சிவபெருமானுக் குரிய பாலினைச் சிந்திய
தகுதியினால் (அப்பாதகத்தைத் தண்டிக்க எண்ணி) முன்பு பக்கத்திற்
கிடந்த கோலினை எடுக்க அவர்க்கு முறைமையினால் அதுவேவந்து
மழுவாயிட, அதுகொண்டு அவனது தாள்களை எறிந்தார்;
மறையோனும் மண்ணின் மேல் வீழ்ந்தான்.
(வி-ரை.)
சிந்தும் பொழுதில் அதுநோக்கும் -
‘மற்றொன்றறிந்திலரால்' (1254), "வேறுணரார்" (1255) என்றிருந்தவர்,
அது நோக்கிய தென்னையோ? வெனின், முன்குறித்த
செயல்களெல்லாம் மற்றவையாயும் வேறாயும் இருந்தன; அதுவோ
அவரின் வேறல்லாது அவரது உள்ளம் ஒன்றியதாயிருந்தது; ஆதலின்
அவர் அதனை நோக்கினார் என்க. நோக்குதல் -
ஊன்றிப்பார்த்தல்.
அவரது நிறைந்த காதல் முழுதும் அருச்சனையில் வைத்தாராதலின்
அதுபற்றிய பொருளாகிய பாற்குடம்சிதறுண்டபோது அவர்
நோக்கம்பட்டது என்க. அவரது புறக்கருவி அகக்கருவிகள் யாவும்
வெளியிற் செல்லாது திருப்பணியொன்றிலே ஒன்றியிருந்தன வாதலின்
திருப்பணிக்கு நேர்ந்த இடையூறு அவரது ஒன்றியிருந்த தன்மையை
மாற்றி நோக்குவித்தது என்க.
தீயோனை இறையில் அறிந்து, என்க - சிந்திய செயலை
நோக்கினார்; அந்நோக்கம் அதனைச் செய்தவன்பாற் சென்று
அவனையாவன் என்று ஆராயச்செய்தது; அதனால் அவன் தமது
தந்தையெனவே விரைவில் அறிந்தனர். தீயோனை
- தந்தையென்ற
நினைவு மட்டும் வந்ததேதவிர அவனது தீமையின் நினைவு
மாறவில்லை என்பார் தீயோனை அறிந்து என்றார்.
தாள்கள்
சிந்தும் தகுதியினால் - தகுதியாவது - சிந்திய
செயல் தாள்கள் செய்தன ஆதலின் தண்டனை பெறுதற்குத்
தகுதியுடைமை.
முந்தை
மருங்கு கிடந்த கோல் - கோல் ஆனிரை
மேய்த்த கோல். அது அவர் பக்கத்துக் கிடந்தது என்பதாம்.
அதுவே
முறைமையினால் வந்து மழுவாயிட-குற்றநீங்கும்படி
தாள்களை ஒறுத்தற்காகக் கோல் எடுக்க அதுஉரிய தண்டனை
தரத்தக்க கருவியாக மாறுதல் முறைமையாதலின் அம்முறையினால்
அதுவே மழுவாயிட என்க. முறைமை-இறைவரது ஆணைமுறை.
வந்து - அவரது கையினில் வந்து. தமது கரணங்கள்
எல்லாம்
சிவகரணங்களே ஆகப்பெற்ற மேலாம் பெரியோராதலின்
தண்டிக்க
எடுத்த சிறுகோலே சிவனாணையால் அவரது கையில் மழுவாயிற்று.
முறைமை - மகனாகும் முறை என்ற குறிப்பும் காண்க.
தந்தையார்
கொண்ட மழு மகனாராகிய இவர்க்கு முரியதாகும் முறைமை.
எறியவேண்டுமென்ற எண்ணத்துடன் எடுத்த முறைமையினால்
என்றலுமாம்.
எறிந்தார்-
தாள்களை என்ற செயப்படுபொருள் வருவிக்க.
வீழ்ந்தான்
மறையோனும் - எறிந்த செயலோடு
இடையீடின்றி வீழ்ந்த செயலும் நிகழ்ந்ததாகலின்
எறிந்தார் -
வீழ்ந்தான் என்று பயனிலையை முன்வைத்தும், அடுத்துவைத்தும்
ஓதினார்; வீழ்ந்ததன் விரைவு குறித்தது. மறையோனும்
- உம்மை
இழிவு சிறப்பு. 51
|