1257.
|
எறிந்த
வதுவே யர்ச்சனையி லிடையூ றகற்றும்
படையாக
மறிந்த தாதை யிருதாளுந் துணித்த மைந்தர்
பூசனையில்
அறிந்த விடையூ றகற்றினராய் முன்போ லர்ச்சித்
திடப்புகலுஞ்
செறிந்த சடைநீண் முடியாருந் தேவி யோடும்
விடையேறி, 52 |
1257. (இ-ள்.)
வெளிப்படை. எறிந்த அதுவே அருச்சனையில்
நேர்ந்த இடையூற்றினைப் போக்கும் படையாக உதவப், பூசையினைத்
தடுத்த தந்தையின் இரண்டு தாள்களையும் துணித்து வீழ்த்திய
மகனார், தமது பூசனையில் அறிந்த இடையூற்றினைப் போக்கினராய்,
முன்போல அருச்சிக்கத் தொடங்கலும், நெருங்கிய நீண்ட
சடையினையுடைய சிவபெருமானும் உமாதேவியாருடன் விடையின்
மேல் ஏறி, 52
1257.
(வி-ரை.) எறிந்த அதுவே....படையாக
சிவபூசையில்
இடையூறகற்றும்படை பாசுபதாத்திரமாம். ஆகமங்களில் விதித்த
பூசை உறுப்புக்களுள், 'இடையூற்றை விலக்குதல்'(விக்கினோச்சாடனம்)
என்பதொன்று. அது, உரிய மந்திரம் பாவனை செயல்களால் மேல் -
நடு - கீழ் என்ற மூன்றுலகங்களாலும் நேரும் இடையூறுகளைப்
போக்கிப், பின் பூசையிற் புகுதலாம் என்ப. அவ்விடை யூறுகளாவன
இன்னவென்றறியாது வருபவை. இங்கு நேர்ந்தது இவற்றின் வேறாய்ப்,
புதிதாய், இன்னதென் றறியவந்ததொன்று, ஆதலின் அர்ச்சனையில்
அறிந்த இடையூறு என்றார்.
மறிந்த
- மறித்தல் - தடுத்தல். மறித்த என்பது எதுகை
நோக்கி மறிந்த எனமெலித்தல் விகாரமாயிற்று. குறித்த செயல்
விகாரமாதலின், சொல்லும் விகாரமாயிற்று. அவ்விடையூறு
மெலிந்தொழியும் என்பதும் குறிப்பு.
இருதாளும்
துணித்த - ஒருதாளே பாற்குடத்தை இடறவும்
இருதாளும் சிதைத்ததென்னை? எனின், ஊன்றி நின்ற தாளினது
துணைகொண்டே மற்ற ஒரு தாளைத் தூக்கி இடறினானாதலின்
குற்றஞ்செய்த தாளினுக்குத் துணைசெய்த குற்றத்தினுட்பட்டது
ஊன்றி நின்ற காலுமாம். எனவே நீதிநூல் விதிப்படி
குற்றஞ்செய்தானும் அதற்குத் துணைசெய்தானும் ஒருங்கே
தண்டிக்கப்படுதல் முறையாமென்க.
முன்போல்
அருச்சித்திட - இடையூறகற்றிய வகையால்,
தாதை வீழ்ந்த செயல் முதலிய புற நிகழ்ச்சிகள் ஒருசிறிதும்
உள்ளத்திற்றாக்காது இறைவன் பாலதாகவே கொண்ட ஒருமை
நினைவால் அருச்சித்திட என்பது.
அர்ச்சித்திடப்
புகலும் - சடைமுடியாரும் -வெளிப்படலும்
- உலகப் பற்றறுத்த போதே இறைவன் வெளிப்படுவன் என்பதுண்மை.
"யானெனதென் றற்ற விடமே திருவடியா" (கந்தர் கலிவெண்பா)
என்றது காண்க.
முடியாரும்
- உம்மை சிறப்பும்மை. முன் உள்ளே நிறைந்து
பூசைகொண்ட அவரும் என இறந்தது தழுவிய எச்சவும்மை
என்றலுமாம்.
வெளிப்படலும்
- முன்னர்க் "கோளமதனில் உள் நிறைந்து
பூசைகொ"ண்ட அவர், இப்போது காதல்கூர வெளிப்பட்டனர் என்க.
"மறைய நின்றுளன்...முறுக வாங்கிக் கடைய முன்னிற்குமே" (அப்பர
் - திருக்குறுந்தொகை - பொது.) என்றபடி அன்பு முறுகி விளைந்த
இடத்தே தான் இறைவரது வெளிப்பாடு நிகழுமென்க. நாயன்மார்
சரிதங்கள் பலவுங்காண்க.
தேவியோடும்
விடையேறி - அடியார்க் கருள்தந்து
தம்முலகம்தர வரும்போதெல்லாம் இவ்வாறு வருவர் சிவபெருமான்.
52
|