1258.



பூத கணங்கள் புடைசூழப் புராண முனிவர் புத்தேளிர்
வேத மொழிக ளெடுத்தேத்த விமல மூர்த்தி
                                 திருவுள்ளங்
காதல் கூர வெளிப்படலுங் கண்டு தொழுது
                               மனங்களித்துப்
பாத மலர்கண் மேல்விழுந்தார் பத்தி முதிர்ந்த
                              பாலகனார். 53

     1258. (இ-ள்.) வெளிப்படை. பூதகணங்கள் புடைசூழ்ந்து
வரவும் பழைய முனிவர்களும் தேவர்களும் வேதமொழிகளால்
தோத்திரித்து வரவும் விமல மூர்த்தியாகிய சிவபெருமான் தமது
திருவுள்ளக் கருணைமிக்கு வெளிப்பட்டருளலும், பத்திமுதிர்ந்த
பாலகனாராகிய விசாரசருமனார், கண்டுதொழுது மனமிகக்
களிப்படைந்து அவரது பாத தாமரைகளின்மேல் வீழ்ந்தனர். 53
    

     1258. (வி-ரை.) புராண முனிவர் - பழைய முனிவரர்.
புத்தேளிர் - தேவர்கள்.

     விமலமூர்த்தி - சிவபெருமான். விமலமூர்த்தி என்னும்
அன்மொழித் தொகைத் தொடர்மொழி மலங்கட்குப் பகையான
திருமேனியையுடையவர் எனப் பொருள்தரும். "மூலமாகிய
மும்மல மறுக்குந், தூயமேனி" (திருவாசகம்) என்பது காண்க.

     காதல்கூர - தம்மை அவர்க்குத் தாதை எனக்
கொள்கின்றாராதலின் காதல் என்ற சொல்லாற் கூறினார்.

     பத்தி முதிர்ந்த- முறுகி வளர்ந்த அன்பினையுடைய."முறுக
வாங்கிக்கடைய" என்ற கருத்துமிது. (கடைதல் - தியானித்தல்;
"தியான நிர்மதனாத்" என்பது சுருதி.)

     பாலகனார் - விமலனார் தம்மைத் தாதை எனக்கொள்வார்
காதல்கூர வெளிப்பட்டபடியால் அதற்கேற்ப நாயனாரையும்
பாலகனார் என்ற சொல்லாற் கூறினார்.

     பாதமலர்கள்மேல் விழுதல் - பாதத்தின்கீழ் மரம்போல
வீழ்ந்து அவசமாய்க் கிடத்தல். இக் கருத்துப்பற்றியே மேல்வரும்
பாட்டில். "கீழ் விழுந்தவரை எடுத்து" என்றது காண்க. மேல் -
ஏழனுருபு. வரும் பாட்டில் கீழ் என்பதுமது. 53