1259.





தொடுத்த விதழி சூழ்சடையார் துணைத்தா ணிழற்கீழ்
                                விழுந்தவரை
எடுத்து நோக்கி "நமபொருட்டா லீன்ற தாதை
                              விழவெறிந்தாய்,
அடுத்த தாதை யினியுனக்கு நா" மென் றருள்செய்
                                தணைத்தருளி
மடுத்த கருணை யாற்றடவி யுச்சி மோந்து
                            மகிழ்ந்தருள,   54

     1259. (இ-ள்.) வெளிப்படை. தொடையாகிய கொன்றைமாலை
சூழ்ந்த சடையினையுடைய சிவபெருமானார் தமது
துணைத்தாள்களினீ ழலின் கீழே விழுந்தவரை எடுத்து நோக்கி,
"நம்பொருட்டாக உன்னைப்பெற்ற தந்தை வீழும் படி நீ எறிந்தாய்;
இனி, உனக்கு நாமே அடுத்த தந்தையாயினோம்" என்று
அருளிச்செய்து, அவரை அணைத்தருளி, நிறைந்தகருணையினால்
தடவி; உச்சிமோந்து மகிழ்ந்தருள, 54
   

     1259. (வி-ரை.) சடையார் - விழுந்த அவரை, எடுத்து -
நோக்கி - என்றருள் செய்தருளி - அணைத்தருளி - தடவி
- உச்சிமோந்து - மகிழ்ந்தருள - (அவ்வாறு) தீண்டப்பெற்ற
சிறுவனார்-மாயையாக்கையின் மேல் - சிவமயமாய்த் -
திருவருளின் மூழ்கி - ஒளியில் - தோன்றினார் என்று இந்த
இரண்டு பாட்டுக்களையும் தொடர்ந்து முடித்துக்கொள்க.

     தொடுத்தஇதழி சூழ்சடையார் - இதழி - கொன்றை -
இதழியும் சடையும் சிவபெருமானுக்குச்சிறப்பாயுரியவை. முன்னர்ச்
"சடைநீள் முடியாரும்" (1257) என்றும், பின்னரும் "துண்டமதிசேர்
சடைக்கொன்றை மாலை" (1261) என்றும் இவற்றையே
எடுத்துக்கூறுதல் காண்க. தொடுத்தஇதழி - மாலையாகத்
தொடுத்ததுபோன்ற சரக்கொன்றை. தொடுக்கப்பட்ட
கொன்றைமாலை என்று உரைத்தலுமாம். விசாரசருமனார்
தொடுத்துச்சூட்டிய இதழிமாலை என்ற குறிப்புப்பட உரைக்கவும்
நின்றது. ஆத்தியின் கீழ் மணலாற் சிவலிங்கந் தாபித்துக்
கோயிலாக்கினாராதலின்அந்தத் தொடர்புபற்றி "ஆத்திமலரும்
செழுந்தளிரும் முதலா"(1238) என்று ஆத்தியை முன்வைத்துக்
கூறினாரேனும், முல்லைப்புறவுக்குரியதும் சிவபிரானுக்குச்
சிறப்பாயுரியதுமாகிய கொன்றையும் உடன் கொள்ளப்படு 
மென்பதாம். "பூமலி கொன்றை சூட்ட" (சாய்க்காடு - 6) என்ற
திருநேரிசையும் காண்க. விசாரசருமனார் சிவமூர்த்தியாகிய
குறிப்புடன் திருப்பள்ளித் தாமஞ்சாத்திக் காதல்கூர
அருச்சித்தாராதலின் அவர்நினைத்துக் குறித்து அலங்கரித்த
அந்தக் கோலத்துடன் வெளிப்பட்டுநிற்றலும் இறைவனருளின்
இயல்பாமென்க. "ஆரொருவ ருள்குவா ருள்ளத் துள்ளே
யவ்வுருவாய் நிற்கின்றவருளுந்தோன்றும்" (பூவணம் - 10) என்ற
திருத்தாண்டகமுங் காண்க.

     துணைத்தாள் நிழற்கீழ் - துணைத்தாள் - இரண்டு
பாதங்கள். அடைந்தவர்க்குத் துணை - பற்றுக்கோடு - ஆகிய
திருவடிஎன்றலுமாம். "கழற்சேவடி யடைந்தார் களைகணெட்டும்"
(தாண்டகம்). தாள் - திருவருள் நிறைவு. நிழல் - என்றது
அவ்வருளின் நிறைவின் ஒருவர் பொருட்டு வெளிப்படும் நிலை.
அருள்வெளிப்பட்ட பின்னரே அதன் அனுபவம் நிகழக்
கூடியதாதலின் தாளின் கீழ் என்னாது தாள் நிழற்கீழ்
என்றார். தாட்கீழ் எனவரும் இடங்களிலும் இவ்வாறே
வருவித்துரைத்துக் கொள்ளத்தக்கது.

     விழுந்தவரை எடுத்து - கீழ் வீழ்ந்தாராதலின் எடுக்க
வேண்டியதாயிற்று, வீழ்ந்தாலன்றி எடுத்தல் நிகழ்க்
கூடாதாதலின் பெரியோர்கள்பாலும் இறைவர்பாலும் அருள்பெற
வேண்டுவோர் அவர் காலின்கீழ் வீழ்தல் வேண்டும் என்பது
இக்கருத்துப்பற்றியதாம். கீழ் வீழ்ந்த நிலையிலிருந்த
பாண்டியநாட்டை மேலெழுவிக்க விரும்பிய குலச்சிறை
நாயனார், ஆளுடையபிள்ளையார் வரும் வழியில்
வீழ்ந்துகிடந்து அவரே வந்து தமது திருக்கைகளாற் றூக்கி
எடுக்கும் வரையில் எழாமல் வீழ்ந்த படியே கிடந்த வரலாறு
இங்குநினைவுகூர்தற்பாலது. (திருஞான - புரா - 656 - 657).

     நோக்கி - அருட்பார்வை யளித்து.

     "நம்...நாம்" என்று அருள் செய்து - இவை இறைவனார்,
விசாரசருமனாருக்கு உரைத்த உபதேசமாகிய உறுதிமொழிகள்.

     எடுத்து - அணைத்தருளி - தடவி - என்றவை
சிவபெருமான் கையினாற் றீண்டிச் செய்த செயல்கள். எடுத்தல்
பாசநீக்கம் செய்தலும், அணைத்தல் - தடவுதல் சிவப்பேறு
பெறுவித்தலும் குறித்தன. "அன்று நின்னுரு வாகத் தடவியே
யாலவாயர னாகத் தடவியே" (திருவியமகம் - 5) என்ற
ஆளுடையபிள்ளையார் தேவாரம் காண்க. "சித்தமல மறுவித்துச்
சிவமாக்கி" (அச்சோ 1) என்ற திருவாசகக் கருத்தும் நினைவு
கூர்க. அணைத்தலால் சிவமாக்கப் பெறுதலும், தடவுதலால்
அதனுள் மூழ்கிச் சிவவொளியிற் றோன்றுதலுமாம்.
இக்கருத்துமேல்வரும் திருப்பாட்டில் "தீண்டப்பெற்ற
என்றதனால் விளக்கப்படுதல்காண்க. சிவஞானமாபாடியம் 11
சூத்திர வுரையைத் தழுவி அணைத்தல் - அருள் விளக்கமும்,
தடவுதல் - ஆனந்த விளக்கமுமாம் என்று கொள்ளலா மென்பர்
வித்வான் திரு. சா. பெரியசாமிப் பிள்ளை. "தீவகமாமென
வுருவாய் வந்து நாதன் றிருநோக்காற் பரிசத்தாற் றிகழும்
வாக்காற், பாவனையால்" (சிவப்பிரகாசம் - 8) என்றபடி இங்கு
நோக்கி - அருள்செய்து
- தடவி என்றவற்றால் முறையே
நோக்கால் - வாக்கால் - பரிசத்தால்நிகழும் தீக்கைகளும்,
இனம்பற்றி ஏனையதீக்கைகளும் நிகழ்ந்தன எனக்
கொள்ளலாமென்பர் ஸ்ரீ ந. சிவப்பிரகாசதேசிகர்.

     எடுத்து - "என்னையிப் பவத்திற் சேரா வளையெடுத்து"
என்ற சிவஞான சித்தியார் பார்க்க.

     ஈன்றதாதை- பெற்றெடுத்து வளர்த்துப் பிரமோபதேசமும்
செய்த தந்தையையும். சிறப்பும்மை தொக்கது.

     நம்பொருட்டால் - நமக்குச் செய்யும் திருப்பணிவிடை
முட்டின்றி நிறைவேறும் பொருட்டு. "அர்ச்சனையில்
இடையூறகற்றும் படையாக", "அறிந்த இடையூ றகற்றினராய்"
(1257) என்றது காண்க.

     இனி உனக்கு நாம் அடுத்த தாதை என்க. அடுத்த-
பின்முறையால் என்று கொண்டு ஈன்றதாதை எறிந்து
பட்டொழிந்தமையால் அடுத்ததாதை - அடுத்த படியில் - என்க.
அடுத்த - தகுதியான என்று கொண்டு அவன் உனக்கு
அடாததாதை, நாமே அடுத்ததாதை என்ற குறிப்பும் காண்க.
இனி அடுத்த - வழிபட்ட - தாதை என்றலுமாம். இனி உனக்கு
அடுத்த தாதை
என்றது இதன் முன்னர் எல்லா உயிர்களுக்கும்
போல உனக்கும் பொதுவகையால் இறைவராயும் தாதையாயு
மிருந்தோம்; இனி அவ்வாறன்றிச் சிறப்பு வகையால் தாதை
முறைமையால்அடுத்து மிகநெருங்கி விளங்குவோம் என்றதும்
ஆம்.

     அணைத்தருளி - தடவி உச்சிமோந்து - மகிழ்ந்தருள
- இவை தாதையர் தம் சிறுவரிடத்து அன்பினாற் செய்யும்
செயல்கள். தாதை என்ற முறைமை அருளினாராதலின் தாதைபோல
இவை செய்தருளினர். இதன் மேல் மகன்மையாகிய உரிமை தந்த
விவரம் 1261-ல் உரைப்பார். 54