1260.



செங்கண் விடையார் திருமலர்க்கை தீண்டப் பெற்ற
                                    சிறுவனா
ரங்கண் மாயை யாக்கையின்மே லளவின் றுயர்ந்த
                                 சிவமயமாய்ப்
பொங்கி யெழுந்த திருவருளின் மூழ்கிப் பூமே
                                லயன்முதலாந்
துங்க வமரர் துதிசெய்யச் சூழ்ந்த வொளியிற்
                             றோன்றினார். 55

     1260. (இ-ள்.) வெளிப்படை. செங்கண் விடையினையுடைய
சிவபெருமானது மலர்போன்ற திருக்கையினாலே தீண்டப்பெற்ற
விசாரசருமராகிய சிறுவனார், அவ்விடத்தே தமது மாயை உடம்பின்
மேல் அளவில்லாமல் உயர்ந்த சிவமயமாய்ப் பொங்கி எழுந்ததாகிய
திருவருளிலே மூழ்கித், தாமரைப் பூவில் வீற்றிருக்கும் பிரமதேவர்
முதலாகிய பெருந் தேவர்களும் துதி செய்யத் தம்மைச் சூழ்ந்து
விளங்கிய சிவ வொளியினுள்ளே தோன்றினார். 55

     1260. (வி-ரை.) திருமலர்க்கை தீண்டப்பெற்ற -தீண்டப்
பெற்ற - தீண்டப் பெற்றதனால் என்க. காரணப் பொருட்டாய் வந்த
பெயரெச்சம். பெற்றதனால் திருவருளின் மூழ்கி ஒளியில்
தோன்றினார் என்றதாம்.

     அம்கண்மாயை யாக்கை - அங்குத் தீண்டப்பெற்ற யாக்கை
- மாயையால் ஆகிய உடம்பு. உயிர்களுக்கு உடம்புமாயையினின்றும்
தரப்படுகின்ற தென்பது சாத்திரம். தநு என்கின்ற உடம்பும், கரணம்,
புவனம், போகம் என்ற இவையும் எல்லாம் மாயையினின்றும் வருவனவாம்.

     அளவின்று உயர்ந்த சிவமயமாய் என்றது மாயாவுடம்பும்
கரணங்களும் சிவவுடம்பும் சிவகரணங்களும் ஆகி, பசுகரணங்கள்
எல்லாம் பதிகரணங்களாக மாறிஎன்க.
"மற்றவர்க்கு நந்தம்
கரணம்போ லல்லாமை காண்" என்ற திருக்களிற்றுப்படியாரும்,
"ஊனுயிர் வேறு செய்தா னொமத்தான் மலை யுத்தமனே" என்ற
நம்பிகள் தேவாரமும் "மாயை மாமாயை மாயா வருமிரு வினையின்
வாய்மை, ஆயவா ருயிரின் மேவும் அருளெனி லொளியாய் நிற்கும்"
(சிவப்பிரகாசம் - 70) என்ற ஞானசாத்திரமும் பிறவும் காண்க.
கைதீண்டினதால் மாயை யாக்கையே அதற்கு மேற்பட்ட அளவில்லா
உயர்வுடைய சிவமயமான யாக்கையாக மாற்றப்பெற்றது;
பரிசவேதியானது தான் தீண்டிய பொருளைப் பொன்னாக்குதல்
போல என்க. சிவமயம் - சிவசொரூபம். திருவருளில் மூழ்கி -
அருட்பெருக்கினுள் அழுந்தித் தன்வசமிழந்து. அருள் நிறைவு
பெற்று.

     பூமேல் அயன் முதலாந் துங்க அமரர் துதிசெய்ய - பூ
மேல் அயன் - பூ
- தாமரை; தாமரையில் இருக்கும் பிரமன்.
துங்கம் - பெருமை. சிவத்துவ விளக்கமாகிய திருவருள்
வெளிப்பாடு கண்டு அமரர் துதித்தனர் என்க."வானவர்பூ
மழைபொழிந்தார்" (130) என்பது முதலிய இடங்கள் காண்க.

     பூ - பூமி என்று கொண்டு, அயன் முதலாம் பெருந் தேவரும்
தமது தேவருலகம் விட்டுப், பூ மேல் - பூமியில் வந்து துதிக்க
என்றுரைத்தலுமொன்று. "இந்தப் பூமி சிவனுய்யக் கொள்கின்றவாறு என்று" விரும்பிப் பிரமன் முதலியோர் பூவுலகில் வந்து சிவபூசை
செய்கின்றார்கள்; அவர்கள் எல்லாம் சிவபூசையின் பயன் பெறச்
சண்டீசரைத் துதிக்கின்றார்களாதலின் இவ்வாறு கூறினார்
என்றலுமாம் என்க.

     சூழ்ந்த ஒளியில் தோன்றினார் - தம்மை உள்ளடக்கி
மேற் சூழ்ந்து எழுந்த சிவவொளியில் விளங்கினார். சிவப்பிரகாசம்
என்பது வடமொழி. இவ்வொளி ஞானக் கண்ணாற்காணப்படுவதாகும்.

     சிவபெருமான் வெளிப்பட்டுக் கைதீண்டியதனால் மாயையுடம்பு
சிவவுடம்பாய் விளங்கினமை இப்பாட்டிற் கூறப்பட்டது. இதனை.
"அந்த உடம்பு தன்னுடனே அரனார் மகனா ராயினார்" (1264)
என்பது காண்க.

     சூழ்ந்த ஒளி என்பது சிவத்துவ விளக்கமாகிய பேரொளி.
இத்தகைய ஒளி பெரியோர்களுடலைச் சூழ்ந்து விளங்குமென்பது.
"அங்க ணோரொளி யாயிர ஞாயிறு பொங்கு பேரொளி போன்று"
(26) என்றதனாலும் காண்க. 55