1261.
அண்டர் பிரானுந் தொண்டர்தமக் கதிப னாக்கி
                              யனைத்து "நாம்
உண்ட கலமு முடுப்பனவுஞ் சூடு வனவு முனக்காகச்
சண்டீசனுமாம்பதந்தந்தோ" மென்றங் கவர்பொற்
                                 றடமுடிக்குத்
துண்ட மதிசேர் சடைக்கொன்றை மாலை வாங்கிச்
                                சூட்டினார்.
56

     (இ-ள்.) வெளிப்படை. தேவர்களது பெருமானாகிய
சிவபிரானும் விசாரசருமனாரைத் தொண்டர்களுக்கெல்லாம்அதிபராக
ஆக்கி, "நாம் உண்டபரிகலமும், உடுக்கும் உடைகளும், சூடும்
மாலை அணிகலன் முதலியனவும் ஆகிய அனைத்தும்உனக்கே
உரிமையாகும்படி சண்டீசன் ஆகும் பதவியையும்தந்தோம்" என்று
சொல்லி அவருடைய அழகிய பெரிய திருமுடிக்குத் தமது
பிறைச்சந்திரன் இருக்கும் சடையிற்சூடிய கொன்றைமலர் மாலையை
எடுத்துச் சூட்டியருளினார்.

     (வி-ரை.) அதிபன் ஆக்கி - சூழ்ந்தஒளியிற் றோன்றிய
அவரை எனச் செயப்படு பொருள் முன்பாட்டிலிருந்து வருவிக்க.

     தொண்டர்தமக்கு அதிபன் ஆக்கி-
தொண்டர்களுக்கெல்லாம் நாயகராக - முதல்வராகச் செய்து."சோதி
மணிமுடித் தாமமு நாமமும் தொண்டர்க்கு நாயகமும்"
(திருப்பல்லாண்டு) என்றது காண்க.

     உண்ட கலமும், உடுப்பனவும், சூடுவனவுமாகிய
அனைத்தும்
என்க. அனைத்தும் என்ற முற்றும்மையால்
"பூதலத்தோரும் வணங்கப் பொற்கோயில்" முதலியனவாய்
இங்குக்கூறாதவையும் கொள்க.

     உனக்காகச் சண்டீசனுமாம் பதம் - உனக்கே
உரிமையாகுமாறு சண்டீசன் என்கிற பதவியை.

     சண்டீசர் என்பது ஒரு பதவி; அல்லது தானம்.சிவபெருமான்,
அம்பிகை, விநாயகர், முருகக்கடவுள், சூரியன் இவர்களுக்கெல்லாம்
அவ்வம் மூர்த்திகளை நெருங்கி அந்தந்த நிலையில் சண்டீசபதம்
உண்டு. அவ்வவற்றில் வாழ்பவர்கள்அவ்வம் மூர்த்திகளை
வழிபடுவோர்க்கு அவ்வவழிபாடுகளின்பயனை அளிப்பர்.
சிவபெருமானுடைய சண்டீச பதத்தில் இந்தக்கற்பத்தில் வாழ்பவர்
இச்சரிதத்தில் கண்ட விசாரசருமனாராவர். இவர் இப்பதவியின்
பெயரால் அழைக்கப்படுகின்றார். சூரியமூர்த்தியிடம் உள்ள சண்டி
தேசச்சண்டர் எனப்படுவர். அவ்வாறே அம்பிகை விநாயகர்
முருகக்கடவுள் இவர்களது சண்டபதத்து வாழ்வோர் முறையே
நீலிச்சண்டன், ஆம்போச்சண்டன், மாத்ருச்சண்டன்என்று
பெயர்பெறுவர். சிவபெருமானது சண்டபதத்தில் வாழ்வோர்
தொனிச்சண்டர் எனப்படுவார். இவ்வரலாறுகளையெல்லாம்
ஆகமங்களும் விரிவாய்க் கண்டு கொள்க.

     சண்டீசனுமாம் பதம் - தொண்டர்தமக் கதிபனாக
ஆக்கியதுடன் என உம்மை இறந்தது தழுவிய எச்சவும்மை.

     உனக்காக - சிவநின்மாலியங்களாகிய அமுது, பரிவட்டம்,
மாலை முதலியவைகள் சண்டீசருக்கு உரியன. இவர்க்குக் கோயில்
சிவாலயத்தில் அபிடேகத்தீர்த்தத் தொட்டிக்கு அடுத்து
அமைக்கப்படும். சிவபெருமானுடன் இடையறாத தியானத்
தொடர்புடையாராதலின் இவரது கோயிலுக்கும் சிவதீர்த்தத்
தொட்டிக்கும் இடையே குறுக்கிட்டுப்போகலாகாது என்பது சிவாலய
தரிசன விதிகளுள் ஒன்று. சிவதரிசனம் சண்டீச தரிசனப்
பிரார்த்தனையுடன் நிறைவேறுகிறது. சண்டீசர் கோயிலையடைந்து
வணங்கிக் கைகளைத்தட்டித் தாம்பெற்றசிவ நின்மாலியப்
பிரசாதங்களை அவரிடம் சேர்த்துச் சிவதரிசன பலனைத்தர
வேண்டுமென்று பிரார்த்தித்து அவர்பாற் பெற்ற விபூதியை
அணிந்துகொள்ள வேண்டுமென்பது விதி. சிவ நின்மாலியங்களைச்
சிவதீக்கையில்லாதவர்கள் புசிக்கலாகாது; சண்டீச நின்மாலியத்தை
எவரும் புசிக்கலாகாது; என்றிவ்வாறு பலவும் சிவாகமங்களுள்
விதிக்கப்பட்டுள்ளன. அவற்றை நல்லாசிரியர்பாற் கேட்டு ஒழுகுவது
சைவ நன்மக்களின் கடமை.1

     உண்டகலம் - நிவேதனமாயின உணவாகிய பரிகலம்.
பரிகலசேடம் என்பர் வடவர். உண்டு மிகுந்த உணவு. பரிகலம் -
கலம் என வந்தது.

     உண்டகலம் - உடுப்பன - சூடுவன -அனைத்தும்உனக்காக
என்றதனால் சிவனுக்கு நிவேதித்த திருஅமுதே சண்டீசருக்கு
ஊட்டத்தக்கது; அவருக்கு உடுத்த ஆடையே உடுக்கவும்,
சூட்டியமாலை - அணிகள் என்பவையேசூட்டி அலங்கரிக்கவும்
தக்கன என்பதாம்.

     துண்டமதி - பிறைச்சந்திரன். வாங்கி - எடுத்து.
கொன்றைமாலை - சிவனுக்குரிய திருவடையாளமாலை.


     1முக்கிய குறிப்பு : - வழிபடுவோர் சண்டீசமூர்த்தியின்
பேரில் தமது ஆடைகளின் நூலிழைகளை எடுத்துப்போடும் கெட்ட
வழக்கம் பல கோயில்களிற்காணப்படுகிறது. இது பெருஞ்
சிவாபராதமாம். சிவனுக்குச் சாத்திய நின்மாலியமான ஆடையே
சண்டீசருக்குச் சாத்தப்படுவதாகும். மக்கள் தாங்களணிந்து
அசுத்தமானஆடைகளின் இழைகளைப் போடுதல் மிகவும்
அநுசிதமும் பாவமுமாகும்.

     உனக்காக- தந்தையின் உரிமை மகனாருக் காகும் என்றபடி.
"அடுத்ததாதை இனி உனக்கு நாம்" (1259) என்று கொண்டாராதலின்
தமது உரிமைகளையெல்லாம் தந்து மகனாராக்கிக் கொண்டருளினர்
என்க. சூட்டுதல் - மகுடம் சூட்டுதலைக் குறிப்பாலூணர்த்தி
நிற்றலும் காண்க. மதிசேர்சடைக் கொன்றை மாலை என்ற
குறிப்புமது. 56