1263.
ஞால மறியப் பிழைபுரிந்து நம்ப ரருளா
                           னான்மறையின்
சீலந் திகழுஞ் சேய்ஞலூர்ப் பிள்ளை யார்தந்
                              திருக்கையிற்
கோல மழுவா லேறுண்டு குற்ற நீங்கிச் சுற்றமுடன்
மூல முதல்வர் சிவலோக மெய்தப் பெற்றான்
                          முதுமறையோன்.
58

     (இ-ள்.) வெளிப்படை. வயதான் முதரிந்த மறையோனாகிய
எச்சதத்தன் உலகமறியும்படி சிவாபராதஞ் செய்தும்,
சிவபெருமானது திருவருளினால், நான் மறையின் நல்ல ஒழுக்கம்
விளங்கும் சேய்ஞலூர்ப் பிள்ளையாருடைய திருக்கையில் ஏந்திய
அழகிய மழுவினாலே எறியப்பட்டதனால், அந்தப் பிழையினின்றும்
நீங்கினவனாய்த், தன் சுற்றத்தாருடனே மூலமுதல்வருடைய
சிவலோகத்தில் சேரும் பேற்றினைப்பெற்றான்.

     (வி-ரை.) ஞாலமறிய - உலகத்தாரெல்லாருங்காண.
வெளிப்படையாக.

     பிழை புரிந்தும் - பிழை - சிவாபராதம் சிவனடியாரிடத்திலும்
சிவனிடத்திலும் குற்றம் செய்தமை. உம்மை இழிவு சிறப்பு.
பிழைபுரிந்தும் குற்றம் நீங்கிச் சிவலோக மெய்தப்பெற்றான் என்க.
பிழை இங்குக் கழுவாயில்லாதசிவாபராதம் குறித்தது. அந்தப் பெரும்
பிழையின் குற்றமும் நீங்கப்பெற்ற காரணம் கூறுவாராய்,அது
நம்பாருளால்பிள்ளையார் தம் திருக்கையிற் கோலமழுவால்ஏறுண்டமையாம் என்று மேலே தொடர்ந்து
கூறுவது காண்க.

     நம்பாருளால் - இவ்வாறு இக்குற்றத் தீர்வுநம்பரருளாதலுக்குக்
காரணம் இரண்டு வகையாலறிவித்தார். அவை : "மேதக்கவர்
தம்பால் மேவும் பெருமை வெளிப்படுப்பான், அரவ மேவுஞ்
சடைமுடியா ரருளா மென்ன" (1253) என்றதனால் எச்சதத்தனுக்கு
வந்த கோபம், விசாரசரு மனாரது பெருமையினை உலகுக்கு
வெளிப்படுத்துவதற்குத் திருவருளால் வந்தது என்பதொன்று; "கோல்
எடுத்தார்க்கு அதுவே முறைமையினால்வந்து மழுவாயிட" (1256)
என்றதனால் அச்சிவாபராதத்தினைப்போக்க அருளினால் கோலே
மழுவாயிற்று என்பதொன்று என்க.

     நான்மறையின் சீலம் திகழும் சேய்ஞலூர் எனவும், சீலம்
திகழும் பிள்ளையார்
எனவும் உரைக்க நின்றது. திகழும் - ஊர்
என்ற பொருள், மறையவர்பதி யாதலின் திகழ்தற் கிடமாகிய ஊர்
என்றதாம்.

     சேய்ஞலூர்ப் பிள்ளையார் - சேய்ஞலூரில் அவதரித்தசிவ
குமாரர் என்க. மூத்த பிள்ளையார் என்று விநாயகப் பெருமானையும்,
இளைய பிள்ளையார் என்று முருகப்பெருமானையும், ஆளுடைய
பிள்ளையார் என்றுதிருஞானசம்பந்தப் பெருமானையும்
சிவபெருமானதுபிள்ளைகளாகும் காரணத்தால் வழங்குதல் காண்க.
"யாவர்க்குந் தந்தைதாயெனுமவரிப் படியளித்தா, ராவதனாலாளுடைய
பிள்ளையா ராய்" (திருஞான - புரா - 69) என்று இச்சொற்பொருளை
விரித்தமை காண்க. ஆர் - விகுதி சிறப்புணர்த்திற்று.

     பிள்ளையார் என்றும், திருக்கை என்றும், கோலமழுஎன்றும்
சிறப்பித்தது தீர்த்தற்கரிய சிவாபராதத்தையும் தீர்க்கத்தக்க
திருவருட்குக் காரணமாய் நின்ற சிறப்பு உணர்த்துதற்கு என்க.

     ஏறுண்ணுதல் - எறியப்படுதல். ஏறுண்டு - ஏறுண்டதினால்.
ஏறுண்டு - நீங்கி என்க. உண்டு - பெற்று. ஏறு - எறிகை.

     நீங்கி - எய்தப்பெற்றான் - நீங்கியதனால் - சேரும் பேறு 
பெற்றனன். ஏறுண்டதனால் நீங்கினான்; நீங்கியதனால் எய்தினான்
என்று ஒன்றற்கொன்று காரணமாயிற்று. "தந்தைதா ளொடும்
பிறவித்தா ளெறிந்து" (திருவிளை - புரா) என்றதும் காண்க.

     சிவலோகம் எய்தப்பெற்றான் - தனது குற்றத்தினால் நரக
லோகத்தில்நெடுங்காலம் கிடக்கவேண்டியவன் அதற்கு மாறாகச்
சிவலோகத்தை யடையப்பெற்றனன் என்பது குறிப்பு. இவன் சிவனடி
யாரைப் பகைத்துச் சிவலோகமடைந்தவர்களுள் ஒருவன்.
திருத்தொண்டர்புராணவரலாறு (48) பார்க்க.

     முதுமறையோன் - முதுமை வயதளவின்நின்றது.
"மறைமுதியோன்" (1249) என்றவிடத்துரைத்தவை பார்க்க.

     சுற்றமுடன் - இவர்கள் விசாரசருமனாரின் தொடர்புகொண்ட
புண்ணிய விசேடத்தினால் சிவனுலகடைந்தவாகள். "மூவேழ் சுற்ற
முரணுற நரகிடை, யாழா மேயரு ளரசே போற்றி" என்ற திருவாசகம்
காண்க. "கோத்திரத்திலிருபத்தோர் தலைமுறைக்கு முத்திவரங்
கொடுப்போ மென்றார்" என்ற அருணாசல புராணமும் பார்க்க.

     பிள்ளையார்தங் திருக்கையின் கோல மழுவா லேறுண்டு குற்ற
நீங்கினானாரனும், மூலமுதல்வர் சிவலோகமெய்தப்பெற்றுச் சிவபெரு
மானது அங்கீகாரமும் பெற்றானாயினும், எங்கள் ஆசிரியர்
பெருமானது திருவாக்கானது அடியார்க்குச் சொல்லும் சிறப்பினை
வேறெவருக்கும் சொல்ல இடந்தராதென்பதனை அவன்
சிவலோகமடைந்த இந்த இடத்தினும் "பெற்றான் முதுமறையோன்"
என்று அவனை முன்போலவே ஒருமையிலும், நாயனாரைப்
"பிள்ளையார் தம்திருக்கை" என்று சிறப்புப்பன்மையிலும்
கூறியதனாலறிக. இதுபற்றி முன்னர் உரைத்தவையும் நினைவு கூர்க.
58