552.
பொன்மலைப் புலிவென் றோங்கப் புதுமலை
                       யிடித்துப் போற்று
மந்நெறி வழியே யாக வயல்வழி யடைத்த சோழன்
மன்னிய வநபா யன்சீர் மரபின்மா நகர மாகுந்
தொன்னெடுங் கருவூ ரென்னுஞ் சுடர்மணி வீதி
                                  முதூர். 2

     (இ-ள்.) வெளிப்படை. பழைமையாகிய நெடிய கருவூர் என்று
சொல்லப்பெறும் ஒளியும் அழகுமுடைய வீதிகளோடு கூடிய பழைய
ஊர், வெற்றியின் அடையாளமாக இமயமலையினுச்சியில் புலிக்கொடி
ஓங்கி நிற்க, அம்மலையினை இடித்துக் காவல் பொருந்தும்படி
அமைத்த புதிய வழியே வழியாய் வழங்க ஏனை வழிகளை யடைத்த,
கரிகாற் சோழர் முதல் அநபாயச் சோழர் வரை சிறப்பில்
நிலைபெற்ற முடிசூட்டு மரபின்வரும் தலைநகரங்களில் ஒன்றாகும்.

     (வி-ரை.) கருவூர் என்னும் மூதூர் - சோழன் - அநபாயன் -
சீர்மன்னிய - மரபின் மாநகரமாகும் என மாற்றிப்
பொழிப்புரைத்துக்கொள்க.

     பொன்மலை - இமயமலையையும் பொன்மலை என்பர்.
"பொன்னின் வெண்டிரு நீறுபுனைந்தெனப், பன்னு நீள் பனி
மால்வரை" (11) என்று உவமை முகத்தால் முன்னர் உரைத்தது
காண்க. இமயத்துச்சி வரை சோழர்கள் தமது அரசு நடாத்தி
இமயத்துச்சியிற் புலிக்கொடி நாட்டிய செய்தி நம் பழந்தமிழ்
நூல்களானும், பிற சரித்திர ஆதரவுகளானும் பெறப்பட்ட
செய்தியாம். இதுபற்றிக் "கோட்டுயர் பனிவரைக் குன்றினுச்சியிற்
சூட்டிய வளர்புலிச் சோழர்" (51) என்ற இடத்துக் கூறியவையுங்
காண்க. இவ்வாறு முதலிற் செய்தவர் கரிகாற்சோழர் என்ப.
"பொன்னிமயக் கோட்டுப் புலிபொறித்து மண்ணாண்டான் மன்னன்
வளவன் மதிற்புகார் வாழ்வேந்தன்" (சிலப் - 17 - ஆய்ச் - உள்வரி
- 2) என்றது காண்க.

     சோழன் அநபாயன் சீர்மன்னிய என்றது புலிக்கொடி
பொறித்த சோழர் முதல் நீடித்து நிகழ்காலத்து அநபாயர்வரை
சிறப்பால் நிலைபெற்று வருகின்ற என்றதாம். மரபின் முந்தையோர்
புகழொடு புணர்த்திப் பின்வருவாரைக் கூறுதல் கவியியல்பென்க.
"துலையிற் புறவி னிறையளித்த சோழர்" என்பதும் பிறவும் காண்க.
இவ்வாறன்றி மூதாதையர்செயலை அநபாயருக்கே ஏற்றிப் புகழ்ந்தார்
என்றுரைகொள்வாருமுளர். முன்னர் வளர்புலிச் சோழர் என்றபடி
இங்கும் சீர்மன்னிய என்று கூறியது காண்க. சீரால் மன்னிய என்று
விரித்துரைக்க.

     வென்று பொன்மலை புலி ஓங்க என்க. வென்று -
வென்றதனாலே. புலி பொன்மலையில் ஓங்குதற் குளதாய காரணங்
கூறியவாறு. புலிநின் றோங்க என்று பாடங்கொண்டு
நிகழ்காலத்தும் நிலைபெற்று விளங்க என ஆசிக் குறிப்புப்பெற
உரை கொள்வாருமுண்டு. ஏனைய விற்கயல்களை வென்று ஒங்க
என்பாருமுண்டு.

     மலையிடித்துப் போற்றும் அப்புது நெறியே வழியாக
எனக் கொண்டு கூட்டியுரைத்துக்கொள்க. போற்றும் -
காவல்புரிந்து வழங்கிய.

     அயல்வழி அடைத்த - தான் செய்த புதுவழியே யன்றி
அதன்முன் அந்நாள் வழங்கிய வேறு பிற வழிகளை வழங்காது
அடைத்த; வழியன்றாகுமாறு மலைகளை இடித்துப் புதிய நேர்வழி
உண்டாக்குதல் மன்னர்களின் வழக்கமென்பாருமுண்டு. இது
வழக்கமன்று. இங்குக் குறித்தது புதுநாடுவென்ற அரசன் அந்நாட்டின்
பாதுகாவலின் பொருட்டுச் செய்த அரணாம். நாட்டிற்குரிய அரச
அங்கங்கள் ஆறினுள் அரண் ஒன்று. "படைகுடி கூழமைச்சு
நட்பரண், ஆறும் உடையா னரசரு ளேறு" "மணிநீரு மண்ணு
மலையு
மணிநிழற், காடு முடைய தரண்" என்ற திருக்குறட்
பாக்களைக் காண்க. இமயமலை நமது பரதநாட்டிற்கு வடக்கு
மதில்போல அமைந்தது. அதிற் பல வழிகளிருப்பின் நாடு காவல்
பெறாதென்றறிந்தவராய், நாட்டின் காவலழியும்படி முன்வழங்கிய பல
வழிகளையும் ஆள் வழங்காதடைத்து ஒரு புது வழி யுண்டாக்கி
அயற்புலத்தார் நுழையாதவாறு அதனைக் காவல்புரிந்தது பேரரசராய்
விளங்கிய கரிகாற் சோழரின் இராச தந்திர காரியப் பெருஞ்
செயலாம். அமைச்சராய் விளங்கிய ஆசிரியர் இதன் பெருமையை
அறிந்து இதனைத் தேற்றம் பெற (136) முன்னர்க் கூறியதுமன்றி
இங்கும் எடுத்துக் காட்டியவாறு. அன்றியும் இப்புராணத்துள் வரும்
புகழ்ச்சோழரும் அதுபோலவே முரணிய அயலானுடைய
மலையரணை வென்று அவனைத் துரத்திய செய்தி அவர்
புராணத்துக் காணப்படுவதும் நோக்குக. அயல் வழிகளை அடைக்க,
இந்நாட் பிரஞ்சு அரசாங்கத்தாரது புதுவை, காரைக்கால்
நகரங்களைச் சுற்றி வேலியிட எண்ணுஞ் செய்திகளையும் இங்கு
உன்னுக.

     இடித்துப் போற்றும் - இடித்து - மலையினை இடித்தலால்
குறுக்கிடாதபடியுண்டாகச் செய்து. போற்றும் - காவல் புரியும்.
இவ்வழியினை அரணாகக் கொண்ட தன்மை கூறியபடி. புறநாட்டார்
தம் நாட்டில் நுழையும் வாயில்களைக் காவல் செய்தல் அரசகாரிய
முறைகளில் ஒன்று. அரண் என முன்னோர் வழங்கியது இதுவே.
இந்நாளிலும் நமது ஆங்கில மன்னரும் பிறரும் தத்தம் நாடுகளில்
அயல் நாட்டார் நீர்வழியாலும் நிலவழியாலும் தம் காவலினுள்
அமைந்தன்றி நுழையாது செய்யும் காவல் வகைகளை இங்கு
வைத்துக் காண்க. எல்லைப்புறப் பாதுகாவல் (Frontier Defence)
என்று இமயச் சாரல் முழுதினும் இந்நாள் நமது அரசர்
அரும்பாடுபட்டு அமைத்துள்ள அரண் முறைகளையும், அவற்றையுங்
கடந்து எல்லைப்புற நாடுகள் படும் தொல்லைகளையும் இங்கு
வைத்து உணர்ந்தால் இக்கூறிய சோழர் செய்தியின் பெருமை
தேற்றம்பெற நன்கு விளங்கும். அயல் வழி - அதுவரை
அயற்புலத்தோர் வந்துகொண்டிருந்த வழி எனவும், புதுவழியல்லாத
பிறவழி என்றும் இருவகையுங் கொள்க. 608, 1162 பாடல்கள்
பார்க்க.

     அநபாயன் - இப்புராணம் பாடுவித்துச் சைவவுலகத்துக்குச்
செய்த பெருந்தொண்டு கருதித் தம் அரசரை ஆசிரியர் பாராட்டி
வைத்த பதினொரு இடங்களில் இது ஒன்று. சோழமன்னரையும்,
சோழர் தலைநகரையும் பற்றிய புராணங்களில் இவ்வாறு
குறித்திருத்தல் மரபின் றொடர்ச்சி பற்றிய முறையுமாம். மரபின் மா
நகரம்
- முடிசூட்டும் மரபின் வந்த தலைநகரம். மாநகர் -
தலைநகர். இவைபுகார் (காவிரிப்பூம்பட்டினம்), திருவாரூர், உறையூர்,
சேய்ஞலூர், கருவூர் என்பன. "அநபாயன் வருந்தொன் மரபின்
முடிசூட்டுந் தன்மை நிலவு பதியைந்தின்" என்பது சண்டீசர் புரா - 8.
கருவூர் என்னும் மூதூர் மாநகரமாகும் என முடிக்க. தொன்னெடும்
- தொன்மையும் நெடுமையும் கொண்ட. நெடுமை - பெருமை.
தொன்மையில் நீண்ட - வழிவழி வந்த என்றலுமாம்.

     கருவூர் - தலவிசேடங்க காண்க.

     சுடர்மணி வீதி - இதுபற்றி முன்னர்த் திருநகரச் சிறப்பிலும்
பிறாண்டும் உரைத்தவை காண்க.

     மூதூர் - பழைமை பொருந்தியவூர். ஊரின் பழைமை
மேலுரைத்தனர். 2