557.
|
மழைவள
ருலகி லெங்கு மன்னிய சைவ மோங்க
வழலவிர் சடையா னன்பர்க் கடாதன வடுத்த போது
முழையரி யென்னத் தோன்றி முரண்கெட வெறிந்து
தீர்க்கும்
பழமறை பரசுந் தூய பரசுமுன் னெடுக்கப்
பெற்றார். 7 |
(இ-ள்.)
வெளிப்படை. நிலைபெற்ற சைவம் மழையினால்
வளருந் தன்மையுடைய உலகத்தில் எங்கும் ஓங்கும்படியாக,
அழல்போன்ற நிறத்துடன் அவிர்ந்த சடையினை யுடையானது
அன்பர்களுக்கு அடுக்கத்தகாத இடர்கள் வந்த காலத்தில்,
குகையினின்றுங் கிளம்பிப் பாயும் சிங்கம்போல, விரைவிற்றோன்றி
அந்த முரண்பட்ட வலிமை கெடும்படி எறிந்து தீர்க்கும்
படைக்கலமாகிய, பழமறைகளாற் போற்றப்பட்டதாகிய பரசாயுதத்தை
எப்போதும் ஏந்துகின்றவர் (அவர்).
(வி-ரை.)
மழைவளர் உலகு - உலகம் மழையின்
றுணையானே வளர்ந்து வழங்குவதாம். "வானின் றுலகம் வழங்கி
வருதலால்"என்பது திருக்குறள்.
உலகில்
எங்கும் மன்னிய சைவம் - மன்னிய சைவம்
எங்கு மோங்க என்க. சைவம் சிவத்துடன் சம்பந்தமாவது.
உலகத்தென்றும் சிவசம்பந்தமே நிறைவது - சிவ நிறைவுட்பட்டது
உலகம். "ஆண்டுலகே பழனைத்தினையும் வைத்தார் தாமே
யங்கங்கே சிவமாகி நின்றார் தாமே" (திருப்பழனம் - 9) என்ற
திருத்தாண்டகமுங் காண்க. மன்னுதல் - இடையூறு
வந்த காலத்தும்
அழிவின்றி நிலைபெறுதல். ஓங்க - எங்கும் மேம்பட்டு நிற்க.
நிலைபெற்ற நிறைவாகிய அது பொதுவகையாலன்றிச் சிறப்பாக
விளக்கம் பெற. சைவம் எங்கும் மன்னியதாயினும் இடையூற்றின்
மிகுதிப்பாட்டாற் சிலவிடத்து ஓங்காது குன்றி நிற்கும். கூன்பாண்டியர்
காலத்தே சமணம்மிக்குச் சைவ விளக்கம் குன்றியது போலக் காண்க.
அவ்வாறு குன்றாது ஓங்க இந்நாயனார் இடையூற்றினை எறிந்து
தீர்க்கப் பரசு எடுத்தனர் என்பது. மன்னிய -
செய்யிய என்னும்
வாய்ப்பாட்டு வினையெச்சமாகக் கொண்டு, உலகில் எங்கும் மழை
மன்னும்பொருட்டுச் சைவம் ஓங்க என்றுரைத்தலுமாம். சைவம்
ஓங்குதலால் மழைமன்னுதல் "வீழ்க தண்புனல்" என்ற
திருப்பாசுரத்தாற் காண்க. மரசினால் அடாதன நீங்கின; அவை
நீங்கச் சைவம் ஒங்கிற்று; அது ஒங்க மழை மன்னிற்று; அது மன்ன
உலகம் வளரும் - எனக் கொண்டுரைக்க. இச்சரிதத்தே யானையால்
நேர்ந்த சிவாபசாரம் இந்நாயனாரது செயலினாலே
நீங்க, மன்னனும்
ஒங்கியது காண்க. மன்னனது கோலோங்குதலும் மழைக்குக்
காரணமாமென்ப. திருப்பாசுரத்தினும் "வீழ்க தண்புனல்; வேந்தனு
மோங்குக" எனத் தொடர்ந்து கூறியருளியதுங் காண்க. இதுபற்றிய
விரிவுரையில் ஆசிரியர் சேக்கிழார் பெருமான்,
"வேள்வி
நற்பயன் வீழ்புன லாவது, நாளு மர்ச்சனை
நல்லுறுப் பாதலா,
லாளு மன்னனை வாழ்த்திய தர்ச்சனை, மூளு மற்றிவை
காக்கு முறைமையால்"
-
திருஞான - புரா - 822
|
என்றருளியிருப்பதையும்
இங்குவைத்துச் சிந்திக்க.
அழல்
அவிர் சடை - தீப்போலச் செந்நிறத்தனவாகி
விரிந்தசடை. "அழனீரொழுகியனைய சடை", "மின்னார் செஞ்சடை",
"மின்வண்ண, மெவ்வண்ணமவ்வண்ணம் வீழ்சடை" என்பனவாதி
திருவாக்குக்கள் காண்க. மின் தீயினது கூறாகும் என்க.
அடாதன
- அடுக்கத்தகாதன. வரத்தகாத தீங்கு.
அடியார்களுக்கு நேரும் தீங்கினைத் தம் வாக்கினாலும் சொல்லாத
மரபுடைய ஆசிரியர், அம்மரபுபற்றி அடாதன என்ற நயம் காண்க.
481, 647 - முதலிய பாட்டுக்கள் காண்க.
முழையரியென்ன
- முழை - சிங்கங்கள் பதுங்கி வசிக்கும்
மலைக்குகை முதலிய மறைவிடங்கள். அரி -
சிங்கம். பசிமுதலிய
அவசியம் நேர்ந்தபோ தன்றிப் பிறகாலத்து இது வெளிவராது.
அவசியம் நேர்ந்தபோது எவ்வகையிடையூற்றுக்கும் அஞ்சாது
வீரத்தோடெழுந்து பாயும். யானைமேற் பாய்தல் சிங்கத்தினாலன்றிப்
பிறவற்றிலியலாது. இவை முதலியகாரணங்கள் பற்றி இங்குச்
சிங்கத்திற்கு ஒப்புமை கூறினார். தொழிலுவம அணி. "செங்கண்
வாளரியிற்கூடி" (572) என்று பின்னருங் கூறினார்.
சீறி
- இச்சீற்றம் அன்பர்க்கடாதன அடுத்தபோது தீர்க்கும்
அன்புடைமையால் எழுந்த சிவப் பணிவிடையின் நிகழ்வதாகலின்
நூல்களால் விலக்கப்பட்ட மனக்குற்றங்களில் ஒன்றாக வைத்து
எண்ணப்படாததாமென்க. இறைவனது கோபப் பிரசாதம் போலக்
காண்க.
முரண்கெட - பகை
நீங்குமாறு. முரண்செய்த காரணத்தைக்
கெடச்செய்தலே அடாதனவற்றைத் தீர்க்கும் வழியாம். "அண்ணல்
அரண் முரண் ஏறும்" என்பது அப்பர் சுவாமிகள் தேவாரம்.
அடுத்தார்க்கு அரணும் அடுக்காதார்க்கு முரணுமாம்.
எறிந்து தீர்க்கும்
பரசு - மறைபரசும் பரசு - எனப் பாசு
என்பதனை இரண்டிடத்தும் கூட்டுக. மறைபரசும் பரசு -
சிவபெருமான் கையில் உள்ளது. பரசு ஹஸ்தாய நம : என்பது
சிவாஷ்டோத்தரம். "பரசுபாணியர்" முதலாகவுள்ள தமிழ்
வேதங்களும் காண்க. இங்கு நாயனார் ஏந்தியது அது போன்றதே
என்பதாம். இது பற்றியே முதனூலாகிய தமிழ் மறையும் "இலைமலிந்த
வேல்" என்று போற்றியது.
பாசும்
பரசு - சொற்பின் வருநிலை என்ற சொல்லணி.
தூயபரசு - இங்குப் பரசு, எறிந்து கொலைசெய்யும்
படையாயிருந்தும், தூய் - என்ற தென்னை?
எனின், அடியார்க்கு
அடுக்கும் அடாதனவற்றை நீக்கித், தூய நல்ல சிவதன்மஞ்செய்யத்
துணை செய்தலானும், அடாதன செய்து அடியார்பால்
அபசாரப்பட்டாரை ஒறுத்து அவரையுந் தூய்மை செய்தலானும் அது
தூயதேயாம் என்க. "கோல மழுவா லேறுண்டு குற்றம் நீங்கிச்
சுற்றமுடன், மூல முதல்வர் சிவலோக மெய்தப் பெற்றான்" -
சண்டீசர் புராணம் - 58. "பாதகமே சோறு பற்றினவா" -
திருவாசகம்.
முன்
எடுக்கப்பெற்றார் - முன் - முதன்மையாக.
எப்போதும் தம்முணர் விளக்கம் பெற. எடுக்கப்பெற்றார்
-
எடுத்துத் தாங்கும் பேறு பெற்றார்.
அடியார் பணிகள்
இருவகைப்படும். அவர் வேண்டுவன
கொடுத்தல் ஒன்று. இளையான்குடிமாற நாயனார், இயற்பகை
நாயனார் முதலியோர் செய்தன. இவ்வகை.
அடியார்க் கடாதன
அடுத்தபோது முன்வந்து தீர்க்கும் வீரம் மற்றொரு வகை. இங்கு
நாயனார் செய்கை இவ்வகைப்பட்டது. விறன்மிண்ட நாயனார்,
சத்திநாயனார் திருப்பணிகளும் இவ்வாறேயாவன.
மறை,
இறைவன் வாக்காய் அநாதியாயுள்ளதென்பார் பழமறை
யென்றார். 7
|