558.
|
அண்ணலார் நிகழு நாளி லானிலை யடிக ளார்க்குத்
திண்ணிய வன்பு கூர்ந்த சிவகாமி யாண்டா ரென்னும்
புண்ணிய முனிவ னார்தாம் பூப்பறித், தலங்கள்
சாத்தி,
யுண்ணிறை காத லோடு மொழுகுவா ரொருநாண்
முன்போல், 8 |
558. (இ-ள்.)
வெளிப்படை. பெருமையுடைய எறிபத்த
நாயனார் இவ்வாறு தொண்டு செய்து வாழ்கின்ற நாளிலே
திருவானிலையில் எழுந்தருளிய பெருமானார்க்கு உறைப்புடைய
அன்பு மிகுந்த சிவகாமி யாண்டார் என்னும்
புண்ணிய முனிவனார்,
தாம், விதிப்படி பூக்களைப் பறித்து, மாலைகட்டிச் சாத்தி,
மனத்துள்ளே நிறைந்த ஆசையோடும் ஒழுகிவருவார்; ஒருநாள் முன்
வழக்கம்போல, 8
558.
(வி-ரை.) அண்ணலார்
நிகழும் நாளில் - அண்ணல்
பெருமையுடையார். இவரது பெரியராந்தன்மை 536ம் பாட்டிலும்,
இவர் செய்த திருத்தொண்டின் நிகழ்ச்சி மேற் பாட்டிலுங் (557)
உரைக்கப் பெற்றன. ஆனிலை அடிகள் - ஆனிலை
பசுபதீச்சரம்
என்னும் கோயில். அடிகள் - அத்திருக் கோயிலில்
இலிங்கத்
திருமேனி கொண்டு விளங்க வீற்றிருக்கும் சிவபெருமான். "கருவூருள்
ஆனிலையடிகள் யாவையுமாய வீசரே" (4) என்ற ஆளுடைய
பிள்ளையாரது இத்தலத் தேவாரங்காண்க. "ஐயாறுடைய அடிகளோ",
"எல்லாந்தா னிவ்வடிகள் யாரென்பார்", "அவரெம் பெருமானடிகளே",
"கடவூர் மயானத்துப் பெரிய பெருமா னடிகளே", "நமக் கடிகளாகிய
அடிகளே" முதலிய தேவாரத் திருவாக்குக்கள் காண்க. இறைவனது
தன்மை பெற்று விளங்குதலால் அவனடியார்களும் அடிகள்
எனப்படுவார். இதுபற்றி 428-ம் பாட்டில் உரைத்தவையும் காண்க.
திண்ணிய அன்பு - எதுவரினுங் கலங்காத உறைப்புடைய
அன்பு.
தமது சீவனார்த்தமாகவோ அல்லது வேறு பயன் கருதியோ
செய்யப்படும் அன்பன்று. வேத இருதயன் சிவன்; அவனை
வணங்கினாலல்லது உயிர்களுக்கு உய்தியில்லை. கற்றதனாலாய
பயனும் இப்பிறவி பெற்றதனாலாய பயனும் அவனை வணங்குதலே
என்ற வேதத் துணிபை மனத்துக் கொண்டு, உள்ளபடி செலுத்தும்
அன்பு. "அடியவர்தந் திண்மை யொழுக்க நடைசெலுத்தி" (496),
"திருத்தொண்டினுறைப்பாலே வென்றவர்" (அப்பூதி - புரா - 13)
முதலியவை காண்க. திண்மை - வலிமை. "கற்பென்னுந்
திண்மையுண்டாகப் பெறின்" (குறள்), "திண்ணமரும் புரிசை"
(ஆளுடையபிள்ளையார் தேவாரம் - பண் - பஞ்சமம் -
திருவெண்டுறை - 11) "திண்ணார் புரிசை" (பண் தக்கேசி - பூவணம்
- 11), "திண்ணார் மழுவாட் படையாய் நீயே" - (திருத்தாண்டகம் -
திருவையாறு - 5). பகைப் புலத்தாற் கலங்காது காவல் புரிதலின்
திண்ணிய மதில் என்பதுபோல, இங்கு அடாதன அடுத்த போதும்
கலங்காது நிற்கும் அன்பாதலின் திண்ணிய என்றார்.
கலங்காமை
பின்னர் 564 - 565 பாட்டுக்களிற் காண்க.
கூர்ந்த
- கூரப்பெற்ற - மிகப்பெற்ற.
சிவகாமி
யாண்டார் என்னும் புண்ணிய முனிவனார் -
அவர் பேர் சிவகாமியாண்டார் என்பது. இது இறைவனது பேர்.
சிவகாமி எனும் அம்மையாரது நாயகன் என்பதனால் இறைவன்
பேராயிற்று. சிவன் பேரைத் தம் பேராக வைத்தழைக்கப்
பெற்றவரிவர். "சிவன்பேர் சென்னியில் வைத்த ஆரூரன்"
முதலியவை காண்க. தாம் சிவனிடத்து மிக்க காமமுடையராய்
எம்மை யாள்பவர் என்று, காரணப் பெயரே இயற்பெயராக வழங்கப்
பெற்றவர் எனக் கூறினுமமையும் - திண்ணிய அன்புகூர்ந்த
-
என்ற அடை மொழிகளின் குறிப்பும் காண்க. சிவபாத விருதயர்
என்ற பேர்க் குறிப்பும் இது. என்னும் - என்னப்படும். படுவிகுதி
தொக்கது. இவ்வாழ்வானென்பான் (குறள்) என்புழிப்போல.
புண்ணிய முனிவனார் - சிவபுண்ணியஞ் செய்யும் முனிபுங்கவர்.
புண்ணியம் என்ற பொதுப்பெயர் இங்கு இட நோக்கிச் சிவ
புண்ணியங்களில் முதலாவதாகிய சரியையின் மேனின்றது.
முனிவனார் - மனன சீலர். எப்போதும் இறைவனையே நினைத்துப்
பணி செய்து கிடப்பவர். உண்ணிறை காதலோடும் ஒழுகுவார் என்று
இங்குக் கூறுவதும், "நெஞ்சில் வாலிய நேசங் கொண்டு" (560)
என்றதும் காண்க. இவர் மறையவராதலின் முனிவனார் எனப்
பட்டார் என்றுங் கூறிவர். "நூல் கொண்ட மார்பிற்றொண்டர்" (564)
என்றதும் காண்க.
தாம்
- தாமே - ஏகாரம் தொக்கது. இப்புண்ணியங்கள்
எவரெவருந்தாமே செய்தல் சிறந்ததாம். கூலியாட்களையும்
பிறரையும் கொண்டு செய்வித்தல் அத்துணைச் சிறந்ததன் றென்ப.
பூப்பறித்து
அலங்கல் சாத்தி - அடிகளார்க்குச் சாத்தி
எனக் கூட்டுக - பறித்து, அவ்வாறு பறித்த பூ முதலியவற்றை
மாலை முதலியவாகக் கட்டிச் சாத்தி என்க. பூ - என்ற பெரும்பகுதி
கூறவே, மற்றும் தக்கனவாகிய இலை, வேர் முதலியனவும் உடன்
கொள்ளப்படும். நால்வகைப் பூக்களிலுந் தக்கனவற்றை விதிப்படியும்,
காலப்படியும் கொண்டு செய்யும் இத் திருப்பணி மிக்க
சிறப்புடையதாம். இதனைச் செய்து திருப்புகலூர்
வர்த்தமானீச்சரத்தில் வழிபட்டுவந்த முருக நாயனாரை ஆளுடைய
பிள்ளையார் தமது தேவாரத்தில் "பூம்புகலூர்த் தொண்டர் போற்றி
வட்டஞ் சூழ்ந்தடிபரவும்" (1), "தொண்டர் தண்கய மூழ்கித்
துணையலுஞ் சாந்தமும் புகையுங், கொண்டு கொண்டடி
பரவிக்குறிப்பறி முருகன்செய் கோலம்" (3),
"மூசு வண்டறை
கொன்றை முருகன் முப்போதுஞ் செய் முடிமேல்,
வாசமா
மலருடையார்" (5) எனப் பன்முறையும் வைத்துப் பாடிப்
பாராட்டியிருத்தல் இத்திருப்பணிச் சிறப்புக் காட்டுவதாம்.
"துளக்கினன் மலர் தொடுத்தாற் றூயவிண் ணேறலாகும்"
என்றருளியதால் இதன் பயனுமறிக. இப்பணி செய்யும்வகை
வரும்பாட்டில் விரிக்கின்றார்.
உள்நிறை
காதலோடும் ஒழுகுவார் - உள்ளத்தினுள்ளே
நிறைந்த ஆசை காதல் - பக்தி - அன்பு என்பன
ஒரு
பொருட்கிளவி.
சாத்தி
என்று மெய்யின் றொழிலும், உள் நிறை காதல்
என்று மனத்தின் றொழிலும் கூறினார். ஏனை வாக்கின் றொழில்
கூறாமையின் காரணம் வரும் பாட்டில் வாயுங் கட்டி
என்றதனாலறிக. விரிவு ஆண்டுக் காண்க. 560-ம் பாட்டிலும்
இவையிரண்டுமே குறித்ததுங் காண்க. "பெரும்புலர் காலைமூழ்கிப்
பித்தர்க்குப் பத்தராகி, யரும்பொடு மலர்கள் கொண்டங் கார்வத்தை
யுள்ளேவைத்து" என்ற திருக்கடவூர்த் திருநேரிசையுங் காண்க.
ஒரு
நாள் - ஒரு - ஒப்பற்ற. இவர் பொருட்டு இச்சரித
நிகழப்பெற்றுத் திருவருள் வெளிப்படு நாள் இந்நாளேயாதலின்,
இவர் திருப்பணி செய்தொழுகிய நாள் பலவற்றினும் இஃது
ஒப்பற்றதாய் ஒரு நாளாயிற்று
என்பது குறிப்பு.
முன்
போல் - ஒழுகுவார் அந்த வழக்கம்போல்.
ஒழுகுவார் - என்னும்
- முனிவனார் - முன்போல் கொய்து -
கொண்டு - கொண்டு வேண்டி வாராநின்றார் - என இம் மூன்று
பாட்டுக்களும் தொடர்ந்து முடித்துக் கொள்க.
பறித்தல் சாத்துதல்
முதலிய சரியைக்கும், ஏனைக்கிரியை
முதலியவற்றிற்கும் காதல் இன்றியமையாத அடிப்படையாம்.
அஃதில்லையேல் அவை பயன் பெறா என்பார் உள்நிறை
காதலோடும் என்று காட்டிய ஆசிரியர், அதனை வற்புறுத்தற்குப்,
பின்னரும் நெஞ்சில் வாலிய நேசங் கொண்டு என
வரும்பாட்டிலும் கூறினார். அன்றியும் இப்பாட்டிற் கூறியது,
நியமமான நித்திய வொழுக்கத்தின் உள்ளுறையும், பின்னர்க் (560)
கூறுவது அவ்வொருநாளின் சிறப்பியல்புமாம். ஆதலின் கூறியது
கூறலாகாமை காண்க.
அன்பு
பூண்ட - என்பதும் பாடம். 8
|