559.
வைகறை யுணர்ந்து, போந்து, புனன்மூழ்கி, வாயுங்
                                    கட்டி,
மொய்ம்மலர் நெருங்கு வாச நந்தன வனத்து முன்னிக்,
கையினிற் றெரிந்து நல்லகமழ்முகை யலரும் வேலைத்
தெய்வநா யகர்க்குச் சாத்துந் திருப்பள்ளித் தாமங்
                                  காய்து, 
  9

     559. (இ-ள்.) வெளிப்படை. விடியற்காலையில் துயிலுணர்ந்து,
வெளியிற்போய்த் தண்புனலில் மூழ்கி, வாயையுங் கட்டிக்கொண்டு,
கொத்துக்களாக மலர்கள் நிறைந்த மணந்தங்கிய நந்தன வனத்திற்
சென்று, பழகிய கையினாலே தெரிந்துகொண்டு, நல்ல
வாசனையுடையனவாய் அன்றலரும் பருவமுடைய அரும்புகளை
அலருஞ் சமைய முணர்ந்து, அவற்றுள்ளே தெய்வ நாயகர்க்குச்
சாத்துந் திருப்பள்ளித் தாமங்களைக் கொய்து, 9

     559. (வி-ரை.) இப்பாட்டும் வரும்பாட்டும் மலர் கொய்து
திருமாலைகட்டிச் சாத்தும் சரியைப்பணியாளர் கைக்கொண் டொழுக
வேண்டிய நியமத்தை விளக்குகின்றன. சிவகாமியாண்டார் செய்த
திருப்பணியின் இயல்பு கூறும் சரித முகத்தால் உலகினர்க்கு இதன்
நியமங்களை ஆசிரியர் அழகுபெற வழிகாட்டி வகுத்தமை
உய்த்துணர்ந்து அவ்வழி உலகம் ஒழுகி உய்வதாக.

     வைகறை - விடியற்காலம். சூரியனுக்கு முன் ஐந்து நாழிகை
அளவுள்ள சிறுபொழுது. முந்தியநாளின் வைகுதல் அறுகின்ற காலம்
எனும் பொருளில் வந்த பெயர் என்பர். வைகுறு எனவும் வழங்கும்.
முன்னாள் இதுவரையுமே வைகிற்று என அதற்குப் பொருள் கூறுவர்.
வைகுறுவிடியல் - இராப்பொழுது தன்னோடு கழிவுறுதற் கேதுவாகிய
விடியல் என்க. "விளம்பழங் கமழுங் கமழ் சூழ் சூழிசி" என்ற
நற்றிணையுள் வைகுறு புலர்விடியல் என்றது மப்பொருட்டு அற்றை
நாட்பொழுது தன்னெல்லை யோடறுதல் பற்றி வைகறையெனவும்
படும். வைகுதல் கழிதல் என்னும் பொருட்டு, என்பன முதலாகச்
சூத்திர விருத்தியும் எமது மாதவச் சிவஞானசுவாமிகள்
விரித்துள்ளனவுங் கருதுக.

     உணர்ந்து - துயிலெழுந்து. கழுத்திலிருந்து உயிருணர்ச்சி
சாக்கிரத்தில் வருதலே துயிலுணர்தலாம் என்ப. விடிய ஐந்து
நாழிகைப் பொழுது ஆயிற்று என்பதைத் தானே உணர்தல்
என்றலுமாம்.

     போந்து - காலைக் கடன்களை முடித்தற் பொருட்டுப்
புறத்தில் நிருதி திக்கை நோக்கிப் போய் வருதல். மலசல
முதலியவற்றை வீட்டுக்குள்ளேயே கழித்தலும், அவ்வாறு
ஒன்றுசேரும் குப்பைகளை ஒன்று சேர்த்து ஊருக்குப் புறம்பு
வெளிப்படுத்தலும், அது காரணமாகப் பற்பல தொல்லைப்படுதலும்
முதலியன,
இந்நாட் புதிய நாகரிகத்தின் பயனாகக் கிடைத்த
கேடான உபகாரங்களாம். இவை முன்னாள் நகர, கிராம
வாழ்க்கையிற் காணப்படாதது மாந்தர் சுக வாழ்விற்குக் காரணமா
யிருந்தது. சூரியனுதிக்குமுன் அதிகாலையில் எழுதல், இயன்ற அளவு
சுத்தி செய்து கடவுளை வணங்குதல், வெளியிற்போய் வந்து
பற்றுலக்குதல், குளித்தல், சூரியனுதிக்கையில் அவனுக்கு
அர்க்கியமாதி கொடுத்தல், பின் அற்றைநாட் கருமத்திற் புகுதல்
முதலியன முந்தையோர் கண்ட முறையும் நியமமுமாம் விரிவு
ஆசாரக் கோவை முதலிய நூல்களிற் காண்க. இந்நல்லொழுக்கங்கள்
இந்நாள் அருகி வருதல் வருந்தத்தக்கது.

     புனன்மூழ்கி - "சீதப்புனல் மூழ்கிச் சிற்றம்பலம் பாடி",
"மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேரென்னக், கையாற்
குடைந்து குடைந்துன் கழல்பாடி" என்பனவாதி திருவாசகங்களும்,
பிறவும், புனன் மூழ்கும் நியமத்தை விளக்குவன. ஊற்றுள்ள
தூநீர்க்குளங்கள், நல்ல நீர் ஓடும் ஆறுகள், இவைகளில் மூழ்கிக்
குளித்தல் நன்மை தரும். நீரினுட்பாய்ந்து மூழ்கிக் குளித்தல்
சுகம்தரும். இவ்விதிகளைச் சுகாதார நூல்களுட் காண்க. இவ்வாறன்றி
வெந் நீரிற் குளித்தல், கிணறுகளில் நீர் மொண்டுவைத்துச் சிறு
பாத்திரங்களிற் குளித்தல் முதலிய இக்கால வசதிகளைப் பற்றிச்
செய்து கொள்ளும் நியமங்கள் அத்தனை பயன்றரா. எவ்வாற்றானும்
குளிர்ந்த நீரிற் குளித்தலே நமது நாட்டியல்புக் கடுத்ததாம். இவை
முதலிய வெல்லாம் இங்கு வைத்துக் கண்டுகொள்க. இனி, நீர்
மூழ்குதல் உடற்சுத்தம் செய்யும். உடல் சுத்தமற்றதாயின் உளச்
சுத்தத்திற் குறைவுளதாம். அசுத்த உடலுடன் செய்யும் நியமங்கள்
அசுத்த பாத்திரத்தில் வைக்கும் பால்போலக் கேடுறும் என்பது
ஆன்றோர் துணிந்த உண்மை. இவ்வுண்மையறியாதார் பலவாறு
பிதற்றி யொழிவர். இவை யெல்லாம் உணர்த்துவார் இங்குப்
புனன்மூழ்கி என்பதனை விதந்து கூறினார்.

     வாயுங்கட்டி - வாயைத் துணியினாலே கட்டி.
இறைவனுக்காகும் மலர் பறிக்கும் போதும் திருமாலை கட்டிச்
சாத்தும்போதும் வாயினின்றும் அசுத்த வாயு, வாய் நீர் ஆவி,
தும்மல், இருமல், உமிழ்நீர் முதலியன வெளிப்போந்து
மலர்களிலே தாக்கி அசுத்தப் படுத்தாத படிக்கும், மலர்களின்
மணம் தமது மூக்கிற்புக்கு நுகர்ச்சிக்கட் படாதபடிக்கும்,
இத்திருப்பணியாளர், இது செய்யும் போது வாய்கட்டிப் பணி
செய்தல் மரபு. இந்நியதி இந்நாளிலும் மிக நியமமான சில பூசைகளிற்
கையாளப்படும் வழக்குண்மை காண்க. கதிர்காமத் தலத்திற் பூசாரி
நாடோறும் வாய்கட்டி வந்தே பணி செய்தல் இன்றும்
காணத்தக்கதாம். எனவே இத்திருப்பாணியாளர் பணியிற்
கைத்தொண்டும் மனத்தொண்டும் என இரண்டுமே நிகழ்தற்குரியன.
இங்கு முன்னி என்றதும், மேற்பாட்டில் "உண்ணிறை காதலோடும்"
என்றதும், வரும்பாட்டில் "நெஞ்சில் வாலிய நேசங்கொண்டு"
என்றதும் காண்க. இதுபற்றி முன்னுரைத்தவையும் காண்க.

     உண்மை நூற்றுணிபும் விதியும் இவ்வாறிருப்பவும் இந்நாளில்
நந்தன வனத் திருப்பணியாளர் பலர், மலர் கொய்யும் போதும்,
மாலைகட்டும் போதும் நந்தனவனத்துள்ளும் பூமண்டபத்துள்ளும்
ஒரு சிறிதும் கருதாது பலவற்றையும் வாயில் வந்தபடி யெல்லாம்
பேசுதல், உமிழ்நீர் உமிழ்தல், தும்முதல், இருமுதல், தாம்பூலம்
புகையிலை முதலியன தரித்துக் கொள்ளுதல், குளிக்காமலும்,
அன்றிக் கைகால் சுத்தியேனும் செய்யாமலும் பணிசெய்தல்
முதலிய அநுசிதம் செய்து ஒழுகுதல் மிக வருந்தத்தக்கது.
இம்மட்டோ! திருநந்தன வனத்துள்ளும், அதற்கருகிலும், இறைவன்
பூசனைக்கு ஆகும் மரம் செடி கொடிகளின் கீழும், அருகிலும்
அவனுக்காகும் அறுகுபடர்ந்த தரையிலும் மலசலமும் கழிக்கத்
துணிந்து எரிவாய்நரகிற் காளாகின்றனர். நந்தன வனத்துள்ளே
குடியிருக்க வசதி செய்தல், போசனஞ் செய்தல், சிற்றுண்டி முதலிய
உல்லாசம, பயிலுதல், துயிலுதல் முதலியனவும் சிவாபராதமும்
அநுசிதமுமாம். திருக்கோயிலுக்குள் வில்வ மரத்தின் கீழும்
சிறிதும் அஞ்சாது மலசலம் கழிக்கும் பாதகர் எதைத்தான் செய்யத்
துணியார்? அந்தோ! பாவம்! நந்தனவனம்
வைத்துப் பரிபாலிக்கும்
அதிகாரிகளும் கோயில் அதிகாரிகளும் இவற்றைக் கவனித்துத்
திருத்த உரியராவர். இவ்விதிகளை உலகம் கண்டொழுகும்
பொருட்டு இங்கு அமைத்தது ஆசிரியரின் அருளினைக்காட்டும்.
வாயும் - உம்மை இறந்தது தழுவியது.

     மொய்ம்மலர் நெருங்கு வாச நந்தனவனத்து முன்னி -
மொய்ம்மலர் -
அரும்புகள் நெருங்கிய மலர்க் கொத்துக்கள்.
மொய் - அரும்புகள். மொய் - மொய்த்தல் என்று
கொண்டுரைத்தலுமாம். நெருங்கு - அவ்வகைப் பூங்கொத்துக்கள்
உள்ள பலவகைத் தாவரங்களும் நெருங்கிய. வாச நந்தனவனம் -
மலர்களின் நறுமணங்கமழும் திருநந்தனவனம். மொய் வாச மலர்
என்று கூட்டி உரைத்தலுமாம். முன்னி - நினைத்து. இத்திருப்பணி
செய்யுங்காற் சிவனடியே சிந்தித்துச் செய்ய வேண்டுமென்பது விதி.
இறைவனுக்காகும் மலர், இலை, வேர் தலியவற்றையும், அவற்றின்
பறித்தற்குரிய பக்குவங்களையும் எண்ணி யாராய்வது
என்றுரைத்தலுமாம். அலரும் வேலை எனக் கால நியமங் கூறுதல்
காண்க.

     கையினில் தெரிந்து - இருளும் ஒளியும் கலந்த
விடியற்காலமாகிய வைகறையின் பகுதியாதலின் பூ முதலியவற்றைக்
கண்ணினுதவியாற்றானே யறிந்து பறித்தல் இயலாது. ஆதலின்
கையினது முன்பயின்ற பழக்க விசேடத்தால் அறிந்து. இதுபற்றியே
கண்களுள்ள கைகளை வேண்டிப் பெற்ற வியாக்கிர பாதர் சரிதம்
இங்கு நினைவு கூர்க.

     தெரிந்து என்றது இவை முன்னாள் மலர்ந்த பழமலர்; இவை
நாளை யரும்ப நின்ற முகை; இவை சிறிது போதில் அலரும் காலை
மலர், என்பனவாதி பக்குவங்களைக் கைப் பழக்கத்தாலறிதல்
குறித்தது.

     ஆவனவும் ஆகாதனவும் அறிந்து என்க.

     நல்ல கமழ்முகை - நல்லனவும் நறுமணங் கமழ்வனவுமாகிய
அரும்புகள். நல்ல - புகழுக்கடி முதலிய கேடில்லாதவை. கமழ் -
அப்போது புதிதின் அலர்ந்து மலரும் தருணமே அவ்வவற்றிற்குரிய
மணம் வீசும் பருவம். "அரும்பு நன்மலர்கள்" - தேவாரம்.

     அலரும் வேலை சாத்தும் - அலரும் பருவத்தே
இறையவன் திருமுடியிற் சாத்தத் தகுதியுடையனவாய்ப், புதிதின்
அலர்ந்து வீசும் மணம் முழுமையும் இறைவன் றிருமுடியிலே
கமழுமாறு சாத்தும் என்க. அலரும் வேலை கொய்து என்று
கூட்டியுரைத்தலுமாம். காலைப் போதாயின் மலர்கள் அலர்ந்து
வண்டுகள் மொய்க்கும்; அவை அநுசிதமாம்; ஆதலின் அலர்தற்கு
முன்பருவத்தும் முன் காலத்தும் பூக்கொய்தல் மரபு.

     தெய்வ நாயகர் - தேவ தேவன். உயர்திணையின் உயர்ந்து
முதலில் நிற்போர் தேவர்கள். அவர்கட்கும் நாயகன் முழுமுதற்
கடவுளாகிய சிவபெருமான். "யாதோர் தேவ ரெனப்படு
வார்க்கெலாம், மாதே வன்னலாற் றேவர்மற்றில்லையே" என்பது
அப்பர் சுவாமிகள் தேவாரம். இந்திரன் - மால் - பிரமன் முதலிய
தேவர்கள் எல்லாரும் பசுக்களே யாவர். சிவபெருமான்
அவர்களுக்கு நாயகராகிய பசுபதி. இத்தலத்து எழுந்தருளிய
இறைவர் பசுபதீசர் என்ற பெயர் பெறுவதும் இப்புராணக் குறிப்பு.

     சாத்தும் திருப்பள்ளித்தர்மம் - சரத்தும் - சாத்தத்தக்க.
இவ்விவை இறைவனுக்குச் சாத்தற் குரியனவும் அவன்
பூசைக்குரியனவுமாம்; இவ்விவை அதற்கு விதிக்கப்படாதன;
இவ்விவை இறைவி பூசைக்குகந்தன; இவ்விவை இறைவி பூசைக்கு
விதிக்கப்படாதன; இவையிவை இன்னின்ன தெய்வங்களுக்குரியன; இவையிவை இன்னின்ன நாட்களில் எடுக்கலாகாதன என்பனவாதி
நியமங்களைச் சிவாகமங்களுள்ளும் புட்பவிதி முதலிய உரிய
நூல்களுள்ளும் காண்க.

     திருப்பள்ளித்தாமம் - இறைவனுக்காகும் பூ - இலை வேர்
முதலியவற்றைத் திருப்பள்ளித்தாமம் என்பது சைவ மரபு. இவற்றைக்
கொய்து என்றதும் காண்க. தாமம் - மாலை. இங்கு மலருக்கு
ஆகுபெயர் என்ற உரைக் குறிப்புக்கள் பொருந்தாமை யறிக.

     இத்திருப்பணியே செய்து சிறப்படைந்த
முருகநாயனார்புராணத்துப் "புலரும் பொழுதின் முன்னெழுந்து" (7)
என்ற திருப்பாட்டு முதல் ஐந்து திருப்பாட்டுக்களையும் ஈண்டுத்
தனித்தனி சிந்திக்க.

     மொய்யலர் - கமழ்முகம் - என்பனவும் பாடங்கள். 9