561.
மற்றவ ரணைய விப்பால் வளநக ரதனின் மன்னுங்
கொற்றவர் வளவர் தங்கள் குலப்புகழ்ச் சோழ
                                  னார்தம்
பற்றலர் முனைகள் சாய்க்கும் பட்டவர்த் தனமாம்
                                  பண்பு
பெற்றவெங் களிறு கோலம் பெருகுமா நவமி
                                 முன்னாள், 11

     561. (இ-ள்.) வெளிப்படை. அவர் மற்று இவ்வாறு
அணைவாராக, இங்கு வளமை பொருந்திய அத்திருநகரில்
நிலைபெற்ற அரசராகிய அநபாய்ச் சோழர் குலத்து வழிமுதலாய்
வந்த புகழ்ச்சோழ நாயனாராது பகைப்புலத்துப் போர்களை
வெல்லும் பட்டவர்த்தனம் என்னும் பண்புடைய வெங்களிறு
அலங்கார மிகுந்த மகாநவமியின் முன்னாளாகிய அந்நாளிலே, 11

     561. (வி-ரை.) மற்று - அங்கு. வினைமாற்றுப் பொருளில்
வந்தது. இப்பால் என்றலும் காண்க.

     வளநகர் - கருவூர். மன்னும் கொற்றவர் - அநபாயர்.
ஆசிரியரது காலத்து நிலைபெற்று நின்று பேரரசு
செலுத்தியவராதலின் மன்னும் என்றார். மன்னுதல் -
நிலைபேறுடைத்தாதல்.

     கொற்றவர் வளவர் தங்கள் குலப் புகழ்ச்சோழனார் -
அநபாயச்சோழர் குலத்தில் முந்தை வழிமுதலாய் அவதரித்த
புகழ்ச்சோழர் என்ற அரசர். இவர் நாயன்மார்களிலொருவர்
சரிதவரலாறும் பண்பும் பொய்யடிமையில்லாத புலவர்
சருக்கத்துட்காண்க. "பொழிற்கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழர்க்
கடியேன்" என்பது திருத்தொண்டத் தொகை. மன்னுங்கொற்றவர்
வளவர் தங்கள் குலம்
என்றது பொதுவாகச் சோழர் குலத்தைக்
குறித்ததென்பர். ஆயின் இப்புராணம் பாடுங்காலத்து வாழ்ந்த
அந்நகரத்தரசராகிய அநபாயரைச் சிறப்பாகச் சுட்டி அவர் வந்த
குலம் என்ற பொருள்பெற வைத்தது ஆசிரியர் கருத்துப்போலும்.
"அநபாயன் றிருக்குலத்து வழிமுதலோர்" - புகழ்ச்சோழர் புராணம் -
(8) என்று இதற்குப் பின்னர்ப் பொருள் விரித்திருத்தல் காண்க.
"மன்னிய அநபாயன்" - (552) என இக்கருத்தை பெற முன்னர்க்
கூறியதும் காண்க. இப்புராணத்துள்ளே நாயன்மார்களான
சோழர்களது தொடர்பு பற்றிய இடங்களில் அநபாயரைச் சுட்டிக்
கூறும் மரபுடைய ஆசிரியர் இங்குக் கருவூர் என்ற தலைநகரின்
றொடர்புபற்றி அநபாயரை முன்னர்க் கூறியதனாலும், சோழர்
தொடர்பு புகழ்ச்சோழர் புராணத்திற்குச் சிறப்பா யுரியதனாலும்,
அவர் பேர் குறித்து அநபாயர் குலம் என்று இங்குக் குறிக்காது
பின்னர்க் கூறினாரென்க. கருவூரின் றொடர்பில் அநபாயரைச்
சுட்டியதன் மரபு வேறு. பின்னர்ச் சண்டீசர் புராணத்தில் "மன்னர்
பெருமான் அநபாயன் வருந்தொன் மரபின் முடிசூட்டுந் தன்மை
நிலவு பதியைந்தின் ஒன்றாய் விளங்குந் தகைத்தவ்வூர்" (8) என்று
திருச்சேய்ஞலூரின் றொடர்பால் அநபாயரைச் சுட்டிக்
கூறியதனாலறிக.

     பற்றலர் முனைகள் சாய்க்கும் பண்பு பெற்ற - இப்பண்பு
பின்னர் நிகழ்வது புகழ்ச்சோழர் புராணத்துட் காண்க. இஃது பின்னர்
எதிர்காலத்து நிகழ்வதாதலின் சாய்க்கும் என்று எதிர்காலப்
பெயரெச்சத்தாற் கூறினார். பண்பு பெற்ற என்ற குறிப்பும் அது.
பண்பு -
தன்மை. வெங்களிரு - "வெம்மை விருப்பம்" என்ப.
விருப்பமே இச்சரித நிகழ்ச்சிக்குக் காரணமாதலின் இவ்வாறு
குறித்தார். இக்கருத்தினை "வேறிரு தடக்கைத் தாய அடுகளி
றென்ன நின்ற அன்பரை முன்பு கண்டான்" (584) என்ற இடத்துக்
காண்க. உரை பார்க்க. வெம் - கொடிய எனக்கொண்டு
பகைவர்க்குக் கொடுமை பயக்கும் என்றுரைத்தலுமாம்.

     பட்டவர்த்தனம் - யானைச் சேனையினுட் டலைமைபெற்று,
அரசர் எறிவரத் தக்க யானைக்கு வழங்கும் பெயர். பட்டத்துயானை
என்பர்.

     கோலம்பெருகு மாநவமி - மகாநவமி என்பது புரட்டாசி
மாதத்தில் வளர்பிறை முதனாட் டொடங்கி ஒன்பது நாட்கள்
அம்மையாரை நோக்கிக் காக்கப்படும் சைவ நோன்பு. இதனுள்
பூசைச்சிறப்பு இரவிலே நடைபெறுவதால் இதனை நவராத்திரி என்று
வழங்குவர். அடுத்த பத்தாம் நாட் பூசையுடன் இந்நோன்பு முற்றுப்
பெறுவதால் அதனையுங் கூட்டித் தசரா என்பதும், இதில் தேவிபூசை
சிறப்பாதலின் துர்க்கபூசை என்பதும் வடதிசையாளர் மரபு. மா
நவமியில் நகரெங்கணும், திருக்கோயில்களெங்கணும்,
மனைகளெங்கணும், பல வகையானும் அலங்கரித்துத் தேவி
கொலுவிருக்கைச் சிறப்புக் கொண்டாடப் பெறுவது மரபு. ஆதலின்
கோலம்பெருகு மாநவமி என்றார். கோலம் நவமிவரை
நாளுக்குநாட் பெருக உளதாதலின் பெருகும் என்று குறித்தார்.

     முன்னாள் - அட்டமிதினத்திலே. அட்டமி என்னாது
மாநவமி முன்னாள் என்று சுட்டியது விழாவின் சிறப்பெல்லாஞ்
சுருங்கக் கூறிக் குறிக்கும் பொருட்டு. அன்றே - முன்னாளாகிய
அந்நாளிலே என்று கூட்டுக. அன்றே - அசையென்
றொதுக்குவாருமுளர். களிறு - நவமிமுன்னாள் - நீராட -
மதஞ்சொரிய - போக - ஓட - தோன்றி - அணைந்தது - என
இவ்விரண்டு பாட்டுக்களையுந் தொடர்ந்து முடிக்க.

     தன்னின் மன்னும் - நவமி நன்னாள் - நவமி நாளின் -
என்பனவும் பாடங்கள்.