562.
|
மங்கல
விழவு கொண்டு, வருநதித் துறைநீ ராடிப்,
பொங்கிய களிப்பி னோடும் பொழிமதஞ் சொரிய,
நின்றா
ரெங்கணு மிரியல் போக, வெதிர்பரிக் கார ரோடத்,
துங்கமால் வரைபோற் றோன்றித் துண்ணென
வணைந்த
தன்றே. 12 |
562. (இ-ள்.)
வெளிப்படை. மங்கலமாகிய திருவிழா வணியை
மேற்கொண்டதாகி, (அத்தலத்தே ஓடி) வருகின்ற (ஆம்பிராவதி)
நதியில் நீராடி, மிக்க களிப்புடனே பொழிகின்ற மதநீர் சொரிய
வருவதாய், அங்கங்கும் நின்றவர்கள் பயந்தோட, எதிரிலே,
குத்துக்கோற்காரர்கள் ஓடிச்செல்லத், தூய பெரிய மலைபோலத்
தோன்றிப் பயங்கரமாக அணைந்தது அன்றே. 12
இவ்விரண்டு பாட்டுக்களும்
ஒருமுடிவு கொண்டன.
562. (வி-ரை.)
மங்கல விழவு கொண்டு - கோல மாநவமி
விழாவின் காரணமாக மங்கலத்தை உட்கொண்டு.
வருநதி
- இந்நகரில் வருகின்ற ஆம்பிராவதி நதி. இது
மேற்குத் தொடர்ச்சி மலைகளிலொன்றில் கோயமுத்தூர்ச்சில்லா
திரிமூர்த்தி மலைக்கருகில் தோன்றிக் கிழக்கில் ஓடி வருவது.
காவிரியின் கிளை நதிகளில் ஒன்று. திருச்சிராப்பள்ளிச் சில்லா
கட்டளை என்ற ஊருக்கருகில் திருமுக்கூடல் என்ற தலத்தில்
காவிரியொடு கலக்கின்றது. இந்நதியும் மணிமுத்தா - நதியும்
காவிரியும் கூடுதலால் அவ்விடததுக்குத் திருமுக்கூடல் என்று
பெயராம். இதன் வடகரையில் கருவூர்த்தலமும் திரு ஆனிலைக்
கோயிலும் உள்ளன. ஆம்பிரம் என்னும் பெயரையுடைய
மாமரங்களினது நீழலில் வருதலால் இதற்கு
ஆரம்பிரமாநதி யென்று
பெயர். உமை அம்மையாரின் திருவருளே உருவமாய் வருதலின்
அம்பாநதி யென்பர். இந்நதியின் இருமருங்கிலும் பல முனிவர்கள்
மாவிருக்கங்களாக இருந்து தவஞ் செய்தார்கள் என்பது தலபுராணம்.
இன்னும் இந்நதியின் வரலாறும் பண்பும் பெருமையும்
கருவூர்த்தலபுராணம் ஆம்பிராவதி நதிச் சருக்கத்துட் காண்க.
இங்ஙனம் உள்ள வரலாற்றினைச் சுட்டி இங்கு ஆசிரியர் வரு
நதி
என்று குறித்தார்.
நதித்துறை
நீராடி - துறை - நதியின் துறைகள்
பலவற்றுள்ளும் யானை யிறங்கி நீராடற்குரிய துறை.
பொழிமதஞ் சொரிய
- பெருங்களிப்புக் காரணமாக
மிகுதியாய் மத நீர் சொரியும் மதமிக்க யானை கட்டுக்கடங்காது
ஓடித் தனதிட்டப்படியே செயல் செய்யும் என்பர்.
நின்றார்
எங்கணும் இரியல்போக - அது வரும்வழியில்
எங்கெங்கும் அருகில் நின்றவர்கள் கண்டு ஓட. இரியல்போக
-
ஒரு சொன்னீர்மையாய் விரைந்து போதலைக் குறித்தது.
‘கறையடியானை யிரியல் போக்கும்' - புறநானூறு -
135 - 12.
எதிர்
- முன்னே. பரிக்காரர் - குத்துக்கோற்பாகர்.
யானையை வசமாக்கும் ஈட்டி முதலிய குத்துக் கோல்களைத்
தாங்கி அதற்கு முன்னும் இருபக்கங்களினும் ஓடிச் சென்று
மக்களை விலக்கியும், யானையை அடக்கியும், அதன் செலவை
ஒழுங்குபடுத்தியும் செல்வோர். யானையின் மேலிருந்து
அங்குசத்தால் அதனைச் செலுத்தும் பாகர்களைப் போலவே
இவர்கள் கீழே நிலத்தில் நடந்து செலுத்தும் பாகர்கள். யானைச்
செலவுக்கு இவர்களும் பொறுப்பு வாய்ந்தவர்கள் என்பது பின்
இச்சரிதத்தாற்றெரிக.
"பொற்பா கரைப்பிளந்து
கூறிரண்டாப் போகட்டு,
மெற்பா சரைப்போக மேல்விலகி - நிற்பால
மும்மதத்து வெண்கோட்டுக் கார்நிறத்துப் பைந்தறுகண்
வெம்மதத்த வேகத்தால் மிக்கோடி - விம்மி
யடர்த்திரைத்துப் பாயு மடுகளிற்றை". |
என்ற, பதினொராந்திருமுறை
- போற்றித் திருக்கலிவெண்பாவும்,
"பணப்பா
கரைப்பரிந்து குத்திப் பறித்த
நிணப்பாகை நீள்விசும்பின் வீசி - யணைப்பரிய
வோடைக் கருங்களிற்றை யொண்பரிக் காரர்கடா
மாடணையக் கொண்டு வருதலுமே" |
என்ற, மேற்படி திருமுறை
- ஆளுடைய பிள்ளையார்
திருவுலாமாலையும், பிறவும் காண்க.
துங்க
மால் வரைபோல் - துங்கம் - பெருமையும்
தூய்மையும் குறிக்கும். மால்வரை - பெருமலை. "மைவரை யனைய"
(575), கைமலை - நடைமலை - கைவரை என்பனவும் வழக்கு.
மலைபோலப் பெருத்த உருவுடன் யானைவந்தது என்க. மெய்யுவமம்.
"வாசக்கட மழைமுற்பட மதவெற்பெதிர் வருமால்" (திருநா - புரா -
111), "காற்றுருமோ குன்றோ கடலோ வடலுருமோ" (ஆளுடைய
பிள்ளையார் திருவுலா மாலை) முதலிய திருவாக்குக்கள் காண்க.
துண்ணென
- யாவரும் திடுக்கிட்டு அஞ்சும்படி.
"இவ்வுலகத்தவர் யாவரும் துண்ணெனும் படிதோன்ற" (455) என்ற
விடத்துக் காண்க.
மதயானையின்
விலக்கற்கரிய பொருள் போக்கினை
இவ்வளவும் விரித்தது, பின்னர் எறிபத்த நாயனார் இத்தனையும் ஒரு
சிறிதும் பொருட்படுத்தாது அதன் மேலடர்ந்து துணித்து வீழ்த்த
பெரு வீரமும் அரிய அடிமைத் திறமும் புலப்படுத்தும் பொருட்டு. 12
|