563.

வென்றிமால் யானை தன்னை மேல்கொண்ட பாக
                                ரோடுஞ்
சென்றொரு தெருவின் முட்டிச் சிவகாமி யார்முன்
                                செல்ல
வன்றனித் தண்டிற் றூங்கு மலர்கொள்பூக்
                              கூடைதன்னைப்
பின்றொடர்ந் தோடிச் சென்று பிடித்துமுன் பறித்துச்
                                  சிந்த,   13

     563. (இ-ள்.) வெளிப்படை. வெற்றிதருகின்ற யானையானது
தன்மேலே ஏறியிருந்த பாகர்களோடும் போய் ஒரு தெருவிலே
முட்டி, அங்குச் சிவகாமி யாண்டார் முன்னே சென்று கொண்டிருக்க,
அவரைப் பின் தொடர்ந்து ஓடிப்போய் அவர் தாங்கிச்சென்ற வலிய
ஒப்பற்ற தண்டிலே தூங்கிய பூங்கூடையை முன்பறித்துச் சிந்த, 13

     563. (வி-ரை.) வென்றி - வெற்றி தருவதாகிய.
வெற்றிக்குக்காரணமாகிய. அரசரது பட்டத்து யானையானதாலும்,
அரசர் வெற்றிமுடி சூடியவராதலாலும், இதுவரை அவருக்கு இவ்வுலக
நிலையின் வெற்றிக்குத் துணை செய்ததுபோல இச்சரித நிகழ்ச்சியில்
திருவருள் கூடும் வெற்றிபெறத் துணைசெய்தலானும், இன்னும் சிறிது
போதினில் துண்டமாக்கிக் கொல்லப்பட நிற்கும் அதனை வென்றி
என்னும் அடைமொழி தந்து சிறப்பித்தார். "பற்றலர் முனைகள்
சாய்க்கும்" (561) என்று முன்னருங் கூறினார்.

     மால் - மயக்கம். மதத்தினாலாகியது. பொழிமதஞ்சொரிய
என மேற்பாட்டிற் கூறியது காண்க. யானையின் செயலுக்கும், அது
இனி அடைய நிற்கும் திருவருள் வெளிப்பாட்டுக்கும் அதன் மதமே
காரணமாதலின் அதனை ஈண்டு விதந்து கூறினார். மால் - பெரிய
என்றலுமாம்.

     ஒரு தெருவின் - அரசயானை முதலியவை
செலுத்தப்படற்குரியதாக விதிக்கப்படாத வேறொரு தெருவிலே. அது
சிவகாமியார் விலகிச்சென்றதொரு தெருவாயிருந்தது. முட்டி -
அத்தெருவிலே யானை பாகராற் செலுத்தப்படாமல் தானே போந்தது
என்று குறிக்க முட்டி என்றார்.

     முன்செல்ல - அரசயானை முதலியவை பவனிபோதுந்
தெருவாயிருப்பின் அங்கு நிகழும் நவமிவிழாச் சிறப்புக்கள்
முதலியவற்றால் தாம் விரைந்து சென்று இறைவனுக்கு மாலைசாத்தும்
காலை வந்துதவுதற்கு இடையூறும் தாமதமும் நேருமாதலின்
விலகிச்செல்லும் வேறு ஒரு தெருவிலே முன்னாற்போந்தனர்
சிவகாமியார் என்பது.

     வன் தனித் தண்டு - வலிமை - இறைவனுக்குரிய பூக்கள்
நிறைந்த பூக்கூடையைத் தாங்கப்பெறுதல். தனிமை -
இத்தண்டினுக்குக் கிடைத்தது போன்ற பேறு வேறு எதனுக்கும்
கிடையாமை.

     தூங்கும் - தொங்கும். இடைக்குக் கீழுள்ள உடற்பகுதிகள்
அசுத்த பாகங்களாம். ஆதலின் இறைவனுக்குச் சாத்தும் பூக்களைக்
கொண்ட கூடையை இடுப்புக்குக் கீழ்ப் பிடிக்கலாகாது என்பது விதி;
ஒரு தண்டிலே தூக்கித் தலைக்கு மேற் பிடிக்கப்படும். ஆதலின்
தண்டிற் றூங்கும் என்றார். விரைந்து செல்கையிற் கூடையின்
அசைவினால் உள்ளிருக்கும் பூக்கள் ஒன்றோடொன்று தாக்கி
நலிவுறாதபடி கொண்டுபோகப் பெறும் குறிப்பும் பெறத் தூங்கும்
என்றார்.

     பின் தொடர்ந்து ஓடிச் சென்று - காலை
வந்துதவவேண்டித் திருப்பணியில் வைத்த அன்பினாலே கடிதினில்
முன்னே விரைந்து சென்றார் சிவகாமியாராதலின் யானை அவரைப்
பின்றொடர்ந்து ஓடிச்சென்று அவரது பூக்கூடையினைப் பிடித்தது
என்பது. கடுநடையுடைய யானையும் ஓடிச்சென்று தொடருமாறு
அத்தனை விரைய முன் சென்றனர் அன்பர் என்றது காண்க.

     பிடித்து முன் பறித்து - பிடித்த பின்னரே பறித்தல்
நிகழ்ந்ததாயினும் வேகத்தால் பறித்தலே முன்னர்த் தோற்றப்பட
நிகழ்ந்த தென்னும்படி.

     சிந்த - கூடையைப்பறித்து அதனுள் இருந்த திருப்பள்ளித்
தாமங்களைத் தெருவிலே சிதற. "பூவை யென்கையிற் பறித்து
மண்மேற் சிந்தி" (571), "பூங்கூடைதன்னில் மருவிய பள்ளித்தாம
நிறைந்திட அருள" (600) என்றவற்றாலறிக.

     வன்றிறல் - பிடித்துடன் - என்பனவும் பாடங்கள். 13