565.
அப்பொழுது தணைய வொட்டா தடற்களி றகன்று
                                  போக,
மெய்ப்பெருந்தொண்டர்மூப்பால்விரைந்து
                          பின்செல்லமாட்டார்,
தப்பினர் விழுந்து, கையாற் றரையடித், தெழுந்து,
                                  நின்று,
செப்பருந் துயர நீடிச், செயிர்த்து முன் "சிவதா"
                                வன்பார்.  
15

     565. (இ-ள்.) வெளிப்படை. அப்பொழுது வலிய
அவ்வியானை அவர் தன்னை அணுகவொட்டாதபடி
நீங்கிப்போயினதாக, உண்மைத் தன்மையுடைய பெருந்தொண்டர்
மூப்பினாலே விரைவாய்த் தொடர்ந்து அதன்பின்னே செல்ல
மாட்டாதவராகி, அதனை விட்டார்; கீழே விழுந்து, கையினாலே
தரையில் அடித்து, மோதிப், பின் எழுந்து நின்று, சொல்லற்கரிய
துன்பத்தால் நீடிக்கோபித்து முன்னே "சிவதா" என்பாராகி, 15

     565. (வி-ரை.) அப்பொழுது - அடிக்க வரும்பொழுது.
அணையவொட்டாது - அவர் அணுகாதபடி. அடிக்கும்
அந்தப்பொழுது - சந்தி - கைகூடாதபடி என்றலுமாம். தப்பினர் -
யானையை அடிக்க வந்தகுறியின் வழுவினர். அடித்திருப்பாராயின்,
அதனால் தீங்குறுவார்; ஆதலின் அதனினின்றும் தப்பினர்
என்றலுமாம்.

     விழுந்து - துயரத்தால் தாமே நிலத்தில் வீழ்ந்து .
வேகத்திற் குறிவைத்து வந்த அது தப்பியதாதலின் அவ்வேகந்
தப்பியதாற் கீழேவிழுந்து என்றுரைத்தலுமாம். தப்பினர் என்றதனை
முற்றெச்சமாக்கித் தப்பிவிழுந்து - கால்தவறி வீழ்ந்து
என்றுரைப்பாருமுளர்.

     கையால் தரையடித்தல் - மிக்க துயரத்தால் நிகழ்வதோர்
மெய்ப்பாடு.

     எழுந்து நின்று - துயரமிகுதிப் பாட்டினாலே விழுந்து
தரையடித்தலாகிய முதற் செயல் நிகழ்ந்த பின்னர் நிகழும்
மெய்ப்பாடு. எழுந்து நிற்றலும் முறைகூறி ஓலிடுதலும் இவையே
பின் நிகழ்வன.

     செப்பருந்துயரம் நீடி - சொல்ல முடியாத துயரத்தான்
மிக்கவராய். தாம் நித்தமும் நியதியாகச் செய்து வந்த இறைவன்
திருப்பணி இன்று இவ்வாறு முட்டுப்பட்டமையாற்
பெருந்துயரமடைந்து.

     செயிர்த்து - திருப்பணி முட்டுமாறு செய்தலின் அதுசெய்த
பொருளின் மாட்டுச் சினம் மிக்கது. பெருந்துயரத்தின் பின்னிகழும்
உள்ளநிலை. இவ்வாறே மூர்த்தி நாயனார் புராண வரலாற்று
நிகழ்ச்சியும் காண்க.

     சிவதா என்பார் - இறைவனை நினைத்து ஓலமிடும் ஒரு
ஓலச்சொல். இது போல, அவிதா - அவிதா என்பனவும்,
அப்பிராமண்ணியம் என்பதும் ஆபத்துக் காலங்களில் முறையிடும்
ஓலச் சொற்கள். இவ்வாறன்றி இதற்கு எப்போதும் இவர் "சிவதா
சிவதா" என்று சொல்வது வழக்க மென்றுரைப்பாரும் உளர். என்பார்
- என்பாராகி.

     என்பாராகிச் - சிவதா! சிவதா! முதலாய்! எனவே மொழிய
(569) என்று தொடர்ந்து முடிக்க.

     துயரமெய்திச் - என்பதும் பாடம். 15