567.
"ஆறும் மதியும் மணியுஞ் சடைமே
 லேறும் மலரைக் கரிசிந் துவதே?
 வேறுண் ணினைவார் புரம்வெந் தவியச்
 சீறுஞ் சிலையாய்! சிவதா! சிதவா!
       17

     567. (இ-ள்) வெளிப்படை. "கங்கையையும் பிறைச்
சந்திரனையும் அணியுஞ் சடைமுடிமேல் ஏற்றியணியப்படுகின்ற
மலரை யானை சிந்துவதோ?; மாறுபட்டு மனத்தினுள் நினையும்
அசுரரது புரங்கள் வெந்து மாயும்படி கோபித்த வில்லை
யேந்தியவரே! சிவதா! சிவதா!; 17

     567. (வி-ரை.) ஆறும் மதியும் அணியும் சடை -
கங்கையின் செருக்கடக்கிப் பிறையை வாழ்வித்த சீலமுடைய சடை
என்க. ஆறு - கங்கை. கங்கையைச்
சடையில் அணிந்தது
அடியடைந்து பணிந்த பகீரதனைக் காத்தும் உலகமழியாமற் காத்தும்
அருளிய சரிதம் குறித்தது. மதியணிந்தது தன் அடைந்தார்க்கு
இன்பங்கள் தந்து காக்கும் செயல் குறித்தது. அத்தன்மையுடைய
சடைமேல் ஏறும் மலரைச் சிந்துவதே என்றமையால் அந்தத்
திருப்பணிவிடையே கதியாக அடைந்த என்னைக் காத்தல் கடன்
என்பது. சடைமேல் ஏறும் - அத்தகைய சிறப்புடைய சடையினைப்
போற்றி யலங்கரிக்கும் என்றதாம்.

     கரி சிந்துவதே - ஏகாரம் வினா. சிந்துவது தகுமா?
முடிமேல் ஏறுவதனைப் படிமேற் சிந்துவதா? ஆற்றினை அணிந்து
உலகங் காத்த சிறப்புப் பல்வகையானும் விதந்தோதப்படுதலான்
இங்குப் புண்ணிய முனிவனார் அதனைச் சுட்டினார். "கயல்பாயக்
கடுங்கலுழிக் கங்கை நங்கை யாயிரமா முகத்தினொடு
வானிற்றோன்றும், புயல் பாயச் சடைவிரித்த பொற்புத் தோன்றும்",
"பகீரதற்காய் வானோர் வேண்டப் பரந்திழியும் புனற்கங்கை
பனிபோலாகச் செறுத்தானை" முதலிய திருத்தாண்டகங்கள் காண்க.
அவ்வாறு ஆற்றினை அணியாதிருந்தாராயின் "சலமுகத்தா
லவன்சடையிற் பாய்ந்திலளேற் றரணியெல்லாம், பிலமுகத்தே
புகப்பாய்ந்து பெருங்கேடாம்" என்று திருவாசகம் அருளிற்று.
உலகத்திற்கு இவ்வாறுவரும் பெருங்கேட்டைத் தவிர்த்த உமக்கு
இச்சிறு கேட்டைத் தவிர்த்தல் இலகுவிற் செய்யும் கடமையாம்
என்பது.

     வேறு உள் நினைவார் புரம் வெந்து அவியச் சீறும்
சிலையாய் -
மாறுபட்ட நினைப்புள்ள முப்புரத்தார்களை
அப்போதே சீறி எரித்த வில்லையுடையவனே! இங்கு நினைப்பு
மட்டு மன்றி மாறுபட்ட செயலும் நிகழ்ந்து விட்டது. உள்வேறு
நினைவார் என்க. அந்த முப்புரத்திலே வேறு நினையாதார் மூவர்
இருக்க, அவர்களை வாழ்வித்து, ஏனைப்புரத்தார் மட்டும் எரியச்
சீறினார். ஆதலின் உள் வேறு நினைவார்புரம் என்றார்.
பிறிதினியைபு நீக்கிய விசேடணம். "மூவ ருயிர்வாழ முப்புரமு நீறாக
ஏவர் பொருதா ரிமையோரில்" என்ற புலவர்பாட்டும் காண்க. சீறும்
சிலை
- சீறியது இறைவனது நினைப்பு. செயல் சிரிப்பு. சிலையோ
ஏந்திய அளவில் நின்றது. ஆதலின் சீறும் சிலை என்பது
உபசாரமாத்திரையாய் நின்றதென்க.

     வேறுந் நினைவார் - என்பதும் பாடம். 17