568.
"தஞ்சே சரணம் புகுதுந் தமியோர்
 நெஞ்சேய் துயரங் கெடநேர் தொடரும்
 மஞ்சே யெனவீழ் மறலிக் கிறைநீள்
 செஞ்சே வடியாய் ! சிவதா! சிவதா !,,
    18

     568. (இ-ள்.) வெளிப்படை. "தஞ்சமாய் அடைக்கலம் புகுதும்
தமியோராகிய மார்க்கண்டேயருடைய நெஞ்சிற்பொருந்திய துயரம்
கெடும்படி திருவுள்ளங் கொண்டு, அவரைத் தொடர்ந்து வந்த
காலனுக்குச் சிறிதே நீண்ட செம்மையுடைத்தாகிய சேவடியினை
யுடையவரே! சிவதா! சிவதா! 18

     568. (வி-ரை.) தஞ்சே - தஞ்சமாக - அடைக்கலமாக.
தஞ்சம்
- பற்றுக் கோடுமாம். "தஞ்சே கண்டேன்" - திருவாய்முர்
- திருக்குறுந்தொகை. அம் ஈறு குறைந்தது. சரணம் புகுதும் -
அடைக்கலம் புகுந்த "முத்தி தருந்தா ளிணைக்கே சரணம்
புகுந்தேன்" என்ற தேவாரத் திருவிருத்தங் காண்க. தமியோர் -
ஒப்பற்றவராகிய மார்க்கண்டேயர்.

     நெஞ்சு ஏய் துயரம் - மனத்திற் பொருந்திய துன்பம். -
துயரமாவது சிவ பூசைக்கு முட்டு நேர்ந்த தென்பது. நேர்
தொடரும்
- இழைத்த நாள் எல்லை கடக்கும் காலமறிந்து
அதனால் அந்நேர்மைபற்றி உயிர் கொண்டுசெல்வதற்குத்
தொடர்ந்தான் என்க. நேர் - தனது தூதுவராலன்றித் தானே
நேரில் என்றலுமாம்.

     மஞ்சே என வீழ் மறலி கருமேகம்போல மேல்வந்து
வீழ்ந்த இயமன். கருமை காலனுக்கும் அவனது ஊர்தியாகிய
எருமைக்கும் ஒத்த நிறப்பண்பு. அவன் உயிர்களைக் கொண்டு
செல்லத் தனது ஊர்தியினிவர்ந்து வருவான் என்பது "வழித்திரு
மைந்தனாவி கொளவரு மறலி யூர்திக், கழுத்தணி
மணியினார்ப்போ?" (113) என்றதனாலறிக. "கரும்பெரும் பாண்டி
லீட்ட மாலிய முகிலின் கூட்டம்" (74), "மாகடலி னுட்படியு
முருமேகமென....-கருமேதி" (திருநா - புரா - 8), எனக் கரிய
எருமைகளை மேகம் போன்றன என உவமித்தது காண்க. இங்கு
உயிர்கொண்டு போகவந்து துயரம் விளக்கும் மறலியை மஞ்சு
என்றதென்னையோவெனின், மறலியின் செயலால் பின்னர்
அம்முனிவர் அழியா ஆயுள் - சிவப்பேறு - முதலிய அமுதம்
பெறுதல் குறிக்க என்க. பண்புவமம். மறலிக்கு - நான்கனுருபு
பகைப்பொருளில் வந்தது.

     இறை நீள் - சிறிது நீட்டிய - அழித்தற்கடவுளாகிய
இறைவனது திருவடி இவ்வாறு சிறிதளவில் நீளாது பெரிதும்
நீண்டிருக்குமாயின் இயமன் அழிந்தே பட்டிருப்பான் என்பது.
"பண்டு தொண்டர்மேல் வந்த கூற்றைக் காய்ந்தசேவடியார்" என்ற
குங்குலியக்கலய நாயனார் புராணம் (1) காண்க. - "கூற்றம் பதைப்ப
உதைத்துங்ஙனே உருட்டிய சேவடி யான்கட வூருறை யுத்தமனே" (1),
"உதைத்தெழு சேவடியான்" (2), "காலனைப் பண்டொருகால் உரப்பிய
சேவடியான்" (3), "காலனைத் தானலற, உறுக்கிய சேவடியான்" (4),
"உழக்கிய சேவடியான்" (5), "உடறிய சேவடியான்" (7) என்பனவாதி
தேவாரங்களால் திருக்கடவூர் வீரட்டத் திருவிருத்தத்தினுள்
இவ்வருட்செயலைப் போற்றினர் அப்பர் சுவாமிகள். அருளினாலே
"இறையே நீண்டது" என்ற கருத்தினை இராவணனை ஊன்றி
அருளிய செயலிலே வைத்து "அங்கொரு தன் றிருவிரலாலிறையே
ஊன்றி யடர்த்தவற்கே யருள்புரிந்த அடிகள்" (திருத்தாண்டகம் -
திருவலம்புரம் 10), என்ற விடத்தும், "அனகனாய் நின்ற
வீச னூன்றலு மலறி வீழ்ந்தான், மனகனா யூன்றி னானேன்
மறித்துநோக் கில்லையன்றே" (1) என்ற ஸ்ரீகயிலாயத்திருநேரிசை
முழுவதினும், பிற இடங்களிலும் போற்றுதல் காண்க.

     செஞ் சேவடி - செம்மையைத் தருவதாகிய சிவந்த திருவடி.
செம்மை - வீடாகிய நித்திய இன்பத் திருநின்ற செம்மை. மறலிக்கு
இறை மாத்திரம் நீண்ட அச் செயலினாலே அத்திருவடி
முனிவருக்குச் செம்மை தந்ததனால் செஞ் சேவடி என்றார். செம் -
சிவப்பு நிறமென்று கொண்டு, மிகுதிப் பொருள் குறித்து வந்த
அடுக்கென வைத்து மிகச் சிவந்த என்று பொருள் கூறுவாரு
முண்டு. செங்கோல் என்றதிற்போல செம் - கோடாத என்று
பொருள் கொள்வர் திரு. இராமநாதச் செட்டியார். 18