569.
|
"நெடியோ னறியா நெறியா ரறியும்
படியா லடிமைப் பணிசெய் தொழுகு
மடியார் களில்யா னாரா வணைவாய்
முடியா முதலா!" யெனவே மொழிய, 19 |
569.
(இ-ள்.) வெளிப்படை. "திருமாலும் அறியமாட்டாத
சிவநெறியிலே நின்றவர்களாகித், தாம் அறிந்த வகையாலே அடிமைத்
தன்மையில் நின்று பணிசெய்து ஒழுகுகின்ற அடியார் கூட்டத்திலே
நான் யாராக மதித்து அணைவீர்? முடிவில்லாத முதல்வரே!" எனச்
சிவகாமியாண்டார் மொழியவே, 19
1569.
(வி-ரை.) நெடியோன்
- திருமால். சிறப்பும்மை
தொக்கது. நீண்டவன் - ஈரடியால் மூவுலகளக்க நீண்ட
திரிவிக்கிரம வடிவு கொண்டவன் என்பது பொருள். "மாலுங்
குறளாய் வளர்ந்து", "உலககெல்லா மளவிட்ட
குறுமாணுருவன்"
(ஆளுடைய பிள்ளையார் தேவாரம் - பண் - குறிஞ்சி -
திருக்கண்ணார் கோயில் - 5), "திருநெடுமால்" (திருவாசகம்)
முதலியன காண்க. அவனும் அறியா நெறியாவது
சிவநெறி.
இந்நெறியினையும், இவ்வறியாமையினையும் இவை இத்தன்மையன
என்று இலிங்க புராணத் திருக்குறுந்தொகையிலே விளக்கியருளினர்
அப்பர்சுவாமிகள். நெறி - திருவடி என்பாருமுண்டு.
நெறியார்
- நெறியாராகி. அந்நெறி நிற்பார்களாகி. அறியும்
படியால் அடிமைப் பணி செய்தொழுகும் என்றது அடியார்கள் தாந்
தாம் அறிந்த வகையாலும்அறிந்த அளவாலும், என்றும்
இறைவனுக்குத் தாம் அடிமை என்பதுணர்ந்து, பணியே செய்து
ஒழுகுகின்ற என்றதாம். "யானறி வகையால் வாழ்த்தி" (403),
"கோழைமிட றாககவி கோளுமிலவாகவிசை கூடும்வகையால்,
ஏழையடி யாரவர்கள் யாவைசொன சொன்மகிழு மீசன்" (ஆளுடைய
பிள்ளையார் தேவாரம் - பண் - சாதாரி - திருவைகா - 1) முதலிய
திருவாக்குக்களின் கருத்தினையே இங்கு அறியும்படியால்
என்ற
விடத்துக் கொள்ளப்பட்டது.
நெறியார்
- நெறிக்கு உடையவராகிய சிவபெருமான் என்று
கொண்டு, அவரறியும்படியால் எனப் பொருள் கொள்வாருமுண்டு.
இப்பொருட்கேற்ப, அணைவார் - முதலார் என்று
படர்க்கைப்
பொருள்பட வரும் பாடங் கொள்வர். மேன் மூன்று பாட்டுக்களினும்
இறைவனை முன்னிலையாக்கி உரியாய்! இறைவா! என்று பலவாறும்
நேரே விளித்துச் சிவதா! சிவதா! என ஓலமிடுகின்றனராதலின்
அவற்றைத் தொடர்ந்த பொருளில் வரும் இப்பாட்டில் படர்க்கை
முகத்து வைத்துக் கூறியதாகக் கொள்ளும் பாடமும் பொருளும்
சிறவா என்க.
அடிமைப்
பணி - அடிமையிலே பட்டுச் செய்யும் பலவகைத்
திருப்பணிகள்.
அடியார்களில்
யான் ஆரா அணைவாய் - பணி செய்யும்
சீரடியார்களில் ஒருவனாக வைத்து எண்ணுதற்கு நான் எவ்வகையில்
உரிமையுடையவன் என்றுட் கொண்டு நீ இங்கு அணைந்து இடர்
தீர்ப்பாய்? நான் ஒன்றுக்கும் பற்றாத நாயேன் ஆதலின் நீ
அணையாமல் நின்றனை என்பது குறிப்பு. "நாங்க ளெண்ணலா
ரடிமைக் கென்ப தின்றறி வித்தீர்" (353), "யான்மிகை யுமக்கின்
றானாலென் செய்வீர் போதாது" (354), "இன்றெ னடிமைநீர் வேண்டா
விட்டால்" (355) என்ற ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணப்
பாட்டுக் கருத்துக்களை இங்கு வைத்துக் காண்க. "ஊடுவ
துன்னோடு" என்ற திருவாசகப்படி தமது ஆன்ம நாயகனாகிய
இறைவனுடன் ஊடி நின்றுரைப்பது அவர்பாற் பற்றுக் கொண்ட
அடியார்களுக் கியல்பாம்.
முடியா
முதலாய்! - "பொன்னம் பலத்தெம் முடியா முதலே"
- திருவாசகம். முதல் உண்டாயின் முடிவும்
வேண்டும். "தோற்ற
முண்டேல் மரணமுண்டு" - நம்பியர்நரர் தேவாரம்.
ஆனால்
இம்முதலுக்கு முடிவில்லை. எனவே முதல் - ஆதியுமில்லை.
"ஆதியு
மந்தமு மில்லா வரும்பெருஞ் சோதியை" என்று திருவாசகம்
போற்றியது.
இதற்கு இவ்வாறன்றி,
அடியார்களில் யான் ஆரா எனவே
மொழியா முடியா முதலார் அணைவார் என்று பாடங் கொண்டு
"அடியார்களில் யான் யார்? அதனைச் சொல்லுவாய்" என்று
அதிகாரத்துடன் கேட்க, முடியா முதல்வராகிய சிவனாரைப் போல
(ஒருவர் அங்கு) வருவாராயினார் - என்றுரை கூறுவர் ஆலால
சுந்தரம் பிள்ளை அவர்கள். இப்பொருட் பொருத்தம்
ஆராயத்தக்கது.
அணைவார்....முதலார்.......மொழியா
- முதல்வா -
என்பனவும் பாடங்கள். 19
குறிப்பு
- இப்பாட்டுச் சில ஏட்டுப் பிரதிகளில் இல்லை -
565 - ம் பாட்டு "சிவதா என்பார்" என முடிந்துள்ளதும், அதனையே
தொடர்ந்து 570 - ம் பாட்டு "என்றவருரைத்த" எனத் தொடங்குவதும்
கருதத் தக்கது. இப்பாட்டின் "எனவே மொழிய" என முடிந்த
தொடருடன் வரும் பாட்டின் தொடக்கம் இலகுவிற் றொடர்ந்து
செல்லாமையுங் ஆராயத்தக்கது.
|