571.
|
வந்தவ
ரழைத்த தொண்டர் தமைக்கண்டு வணங்கி
"யும்மை
யிந்தவல் லிடும்பை செய்த யானையெங் குற்ற ?"
தென்ன,
"வெந்தையார் சாத்தும் பூவை யென்கையிற் பறித்து
மண்மேற்
சிந்திமுன் பிழைத்துப் போகா நின்றதித் தெருவே"
யென்றார்.21 |
(இ-ள்.)
வெளிப்படை. வந்தவராகிய எறிபத்தர்,
சிவபெருமானை நோக்கிச் "சிவதா" என்று அழைத்த தொண்டராகிய
சிவகாமி யாண்டாரைக் கண்டு, வணங்கி, "உம்மை இந்த வலிய
துன்பஞ் செய்த யானை எங்குச் சென்றது?" என்று கேட்க, "எமது
பெருமான் அணிகின்ற பூவை என் கையினின்றும் பறித்துத் தரையிற்
சிந்தி முன்னாலே பிழைத்து இதோ இத்தெருவே போகாநின்றது"
என்று சொன்னார்.
(வி-ரை.)
வந்தவர் - மழுவெடுத்து வந்தார்
- எனமுடிந்த
மேற்பாட்டினைத் தொடர்ந்து கொண்டதாம்.
அழைத்த
- "சிவதா" என்று ஓலமிட்டு இறைவனைக்
கூவியழைத்த.
வணங்கி
- என்றதனால் எறிபத்தர் அடியார்பாற் கொண்ட
பத்தியும், அடியாரிடத்து ஒழுகும் முறையும் அறிவித்ததாம்.
"தாழ்வெனுந் தன்மை" விளங்கும் "சைவமாம் சமய" வொழுக்கமும்,
"உரிமை பூண்டார்க் கருட்பெருந் தொண்டு செய்வாரவ ரெறிபத்தர்"
(556) என்ற தன்மையும் விளக்கியபடி.
இந்த - உமது
மாற்றங்களாலும் உமது நிலையாலும்
பிறவற்றாலும் யானறிகின்றவாறுள்ள இந்த.
வல்இடும்பை
- "வேண்டுதல் வேண்டாமை யிலானடி
சேர்ந்தார்க். கியாண்டு மிடும்பை யில" (குறள்) என்பது உண்மை.
ஆதலின் இறைவனடியா ராகிய உமக்கு இடும்பை யென்ப திலதாதல்
வேண்டும். ஆயின் உம்மிடத்துக் கண்ட இவ்விடும்பை
உம்மைச்சார்ந்ததன்று. இறைபணியின் முட்டுப்பாடு காரணமாக
நிகழ்ந்தது என்றது குறிப்பு. இக்கருத்தை உட்கொண்டே
சிவகாமியாண்டாரும் "எந்தையார் சாத்தும் பூவைப் பறித்துச் சிந்திப்
பிழைத்து" என்றதும் காண்க.
சிந்தியதே
பிழையாதலின் சிந்திப் பிழைத்து என்றார்.
முன்பிழைத்துப்
போகாநின்றது - பிழைத்து முன்னே
போகின்றது. பிழைத்து - பிழை செய்து என்றும்,
உயிருடன்
பிழைத்து என்றும், இருபொருளும் பெற வைத்த சொல்லணி.
சிவாபராதத்துக்கு உயிர்த்தண்டனையே கழுவாய் என்ற விதியையும்
உட்கொண்டது கருத்து. சண்டீசர் புராணம், கோட்புலியார்
புராணமுதலியவற்றின் உள்ளீடு சிந்திக்க. இக்கருத்தினையே
பின்பற்றி எறிபத்தரும் "இங்கிது பிழைப்ப தெங்கேயினி" என்று
வரும்பாட்டிற் றொடர்ந்து கூறுவதும் காண்க.
யானை
எங்கு உற்றது? - முன் நிகழ்ச்சியைச்
சிவகாமியாரது "சிவதா சிவதா" என்ற ஓலச்சொற்களாலும் அங்குச்
சிந்திக்கிடந்த பூக்களாலும் பிறவற்றாலும் எறிபத்தர் அறிந்து
கொண்டாராதலின், "இடும்பை யாது?" என அதன் வரலாற்றை
வினவாது இடும்பை செய்த யானை எங்கே? யென்று கேட்டனர்.
இதற்குச் சிவகாமியார் "இத்தெருவே போயிற்று" என்றமையாது,
வரலாறு கூறிய தென்னை? யெனின், அவர் அறிந்ததனை மிக்க
துயரத்தாலும் சினத்தாலும் இவர் அறியார்; அன்றியும் அன்பர்க்
கடாதன அடுத்தபோது தீர்க்கும் இயல்புடைய எறிபத்தர்க்கு இங்கு
அவர்தம் பணி செய்யவேண்டிய தகுதியை அறிவுறுத்தினார் என்க.
மேலும் தம் நியதியான சிறந்த திருப்பணி இன்று வலியப்பட்டு
முட்டுப்பட்டமையால் தாம் உற்ற துயர மிகுதிபற்றி அதனைப்
பன்னிக் கூறியதுமாம். இஃதுலக ரியற்கை என்க. 21
|