572.
"இங்கிது பிழைப்ப தெங்கே யினி" யென வெரிவாய்
                                    சிந்து
மங்கையின் மழுவுந் தாமு மனலு வெங் காலு
                                 மென்னப்
பொங்கிய விசையிற் சென்று பொருகரி தொடர்ந்து
                                 பற்றுஞ்
செங்கண்வா ளரியிற் கூடிக் கிடைத்தனர் சீற்ற 
                                 மிக்கார். 22

     (இ-ள்.) வெளிப்படை. "இங்கு இந்த யானை இனிப்
பிழைப்பது எங்கே?' என்று சொல்லி, உடனே, தீயை வாயிலே
சிந்துவதாய் அங்கையில் ஏந்திய மழுவும் தாமுமாகத் தீயும் காற்றும்
கூடியது போல மிக்க வேகத்தினாலேபோய்ப், போர் செய்யும்
யானையை வேகத்தினாற் றொடர்ந்து பாய்ந்து பற்றுகின்ற சிவந்த
கண்களையும் கூரிய நகங்களையுமுடைய சிங்கத்தினைப்போலக்
கோபத்தால் மிக்கவராய் அவ்வியானையைக் கிட்டினர்.

     (வி-ரை.) எறிவாய் சிந்தும் - மழுவுக்கு அடை. அதன்
முகத்தில் ஒளிவீசுதலாலும் அதுசெய்யும் செயலாலும் தீயுமிழ்வது
போன்றிருக்கும் மழு என்க. இவரது தன்மை இவர்படையின்மேலும்
ஏற்றப்பட்டது. கருவியினைக் கையாள்பவர் செயலே கருவிக்குமாகும்
என்பதியல்பு.

     மழுவும் தாழம் - அனலும் வெங்காலும் - என்ன - மழு
அனல் என்னவும் தாம் வெங்கால் (வெவ்விய கடுங்காற்று) என்னவும்
என்று நிரனிறையாக்கிக் கூட்டி உரைத்துக்கொள்க. பாய்ந்து சென்ற
வேகத்தாற் காற்றினைப்போன்றார் என்க. இதனையே பொங்கிய
விசையில்
என்று தொடர்ந்து காட்டியவாறு. தீயும் காற்றும்
கூடியபோது கடுமை மிக்கு அழிவு செய்த லுறுதியாதலின்
இவ்விரண்டினையும் கூட்டியுவமித்தார்.

     பொங்கிய - சினத்தாற் பொங்குதலாலே. மேலே
"நெருப்புயிர்த் தழன்று பொங்கி" (570) என்றது காண்க.

     செங்கண் வாள் அரியில் - சிங்கத்தின் செங்கண் அதன்
கோபங்காட்டும். கோபித்த சிங்கம் யானையின்மேற் பாய்ந்து அதன்
மத்தகத்தைத் தனது கூரிய நகங்களாற் பிளக்கும் என்பர். வாள் -
ஆகுபெயராய் வாள்போற்கூரிய நகங்களைக் குறித்தது. "பருக்கை
யானை மத்தகத் தரிக்குலத் துகிர்ப்புக, நெருக்கி வாய நித்திலந்
நிரக்குநீள் பொருப்பனூர்" (திருவாரூர் - நட்டராகம் - திருவிராகம்.
1) என்ற ஆளுடைய பிள்ளையார் தேவாரங் காண்க. அரியில் -
அரியினைப்போல. இல் ஐந்தனுருபு. ஒப்புப் பொருளில் வந்தது
முன்னர் அனலுங்காலும் என்றவிடத்துப் போல, இங்கும் வாள்
மழுவுக்கும், அரி - நாயனாருக்கும் முறையே உவமானமாகக்
கொள்க. முன் சொன்னவை விசையிற்சென்றபோது உள்ள
நிலையினும், இங்குக் கூறியன, யானையைக் கூடிக் கிடைத்த
நிலையினும் உவமானமாயின. ஆதலின் மிகைபடக் கூறலாகாமை
உணர்க. செங்கண் - முன், எரிவாய் சிந்தும் என்றதற்கேற்பச்
செங்கண் - செவ்வொளி என்று கொண்டு வாளுக்குக் கூட்டி
யுரைத்தலுமொன்று.

     பொருகரி தொடர்ந்து பற்றும் - கரி - இங்கு
உண்மையில் மதங்கொண்டதோர் யானையினையே நாயனார்
கூடிக்கிடைத்தனராதலின் கரி என்றது உவமை முகத்தானன்றி
உண்மை முகத்தானும் நேர்பட்ட நயம் காண்க. தொடர்ந்து -
பற்றும்
- என்றதற்கேற்பக் கூடி - கிடைத்தனர் - என்றார்.

     கிடைத்தனர் - மிக்கார் - மிக்காராய்க்கிட்டினர்.
இவ்வாறன்றிக் கிட்டினர்; கிட்டினபோது, பிழைத்த யானையைக்
கண்டதும் கோபம் மிக்கனர் என வினைமுற்றாக
உரைப்பினுமமையும்.

     வன்காலும் - தொடர்ந்து செல்லும் - என்பனவும்
பாடங்கள். 22