578.
வளவனுங் கேட்ட போதின் மாறின்றி மண்காக்
                                   கின்ற
கிளர்மணித் தோள லங்கற் சுரும்பினங் கிளர்ந்து
                                   பொங்க
வளவில்சீற் றத்தி னாலே யார்செய்தா ரென்றுங்
                                   கேளா
னிளவரி யேறு போல வெழின்மணி வாயி னீங்க, 
28

     578. (இ-ள்.) வெளிப்படை. சோழரும், அதனைக்
கேட்டபோது, எதிர் ஒருவருமின்றி உலகத்தைத் தனி காக்கின்ற
கிளர்ச்சியுடைய மணிகளணிந்த தோளில் உள்ள மாலையில்
மொய்த்த வண்டுகள் ஆரவாரித்து எழும்படி உண்டாகிய
அளவுபடாத பெருங் கோபத்தினாலே "இதனைச் செய்தவர் யாவர்?"
என்றுங் கேளாது, மணிவாயிலினை இளைய ஆண்சிங்கம்போல,
நீங்கிவர, 28

     578. (வி-ரை.) கேட்டபோதில் - கேட்டவுடனே.

     மாறின்றி மண் காக்கின் றபற்றலரி லாதாய் என
மேற்பாட்டில் வாயிற்காவலர் சுட்டியபடி என்க. மாறு - பகை.
கிளர் தோள் சுரும்பு கிளர்ந்து பொங்க
- விரைந்து எழுச்சி
பெற்றதாலும் போர்குறித்து எழுந்ததாலும் தோள் கிளர்ந்தன.
அவ்வசைவு காரணமாக வண்டினம் கிளர்ந்தன என்க.
"மண்ணினைக் காக்கின்ற மன்னன்" - கம்பர்.

     யார் செய்தார் என்றும் கேளான் - பற்றலரிலாதாய்
என்று அவர்கள் விளித்தவதனால் தம்பால் இது செய்யத்தக்க
பகைப்புலத்தவரில்லாமை நினைவூட்டப்பெற்றும், கோபம் மிக்க
காரணத்தாலே அது தமது உள்ளத்தைக் கவர்ந்தெழுந்தமையின்,
இயல்பில் எவரும் முதலில் கேட்கத்தக்க இக்கேள்வியைத் தானும்
கேட்காமல் மேல் எழுந்தனர். கேட்டிருந்தால் இவ்வாறு
புறப்பட்டிருக்கமாட்டார் என்பது குறிப்பு. "உள்ளங் கவர்ந்தெழுந்
தோங்குசினங் காத்துக், கொள்ளுங் குணமே குணமென்க" என்ற
மேம்பாட்டினை உன்னுக.

     சிலராம் என வாயிற்காவலர் கூறினாரேனும், அதனுள்
அமைந்துபடாமை, "சிறிய பகையெனினும் ஓம்புத றேற்றார்",
"வினைபகை யென்றிரண்டி னெச்ச நினையுங்காற், றீயெச்சம்
போலத் தெறும்" என்பனவாதி நியாயம்பற்றி யென்க.

     இளவரி ஏறு போல - கிழச்சிங்கமாயின் போருக்கு
இங்ஙனம் விரையாது என்க. முழையரி - (557) வாளரி - (572)
என முன்னர் எறிபத்தரைக் குறித்தனராதலின் இங்குச் சோழரை
இளவரி என்றார். இருவரும் அரியேறே போல் வார்சளாயினும்
இச்சரிதப் பின்னிகழ்ச்சி பற்றி அவருக்கு இவர் இளையார் என்று
குறித்த நயமும் அழகும் காண்க. இச்சரித நாயகராகிய எறிபத்தரின்
ஏற்றங் குறித்த அழகுங் காணத்தக்கது.

     மணிவாயில் - மணிக்கட்டியவாயில். மணி - ஆராய்ச்சி
மணி. திருநகரச்சிறப்புச் சரிதம் (112) காண்க. ஆராய்ச்சிமணி
கட்டியிருந்தும் ஆராயாது கிளம்பினார் என்றது குறிப்பு. மணி
அழகு எனக் கொள்ளின் எழின்மணி - மிக்க அழகு என்க.

     வாயில் நீங்க - வாயிலினின்றும் கதுமென விரைந்து
புறப்பட.

     எரிமணி - என்பதும் பாடம். 28