579.
தந்திரத் தலைவர் தாமுந் தலைவன்ற னிலைமை
                                  கண்டு
வந்துறச் சேனை தன்னை வல்விரைந் தெழமுன்
                                   சாற்ற
வந்தரத் தகலமெல்லா மணிறுகிற் பதாகை தூர்ப்ப
வெந்திரத் தேரு மாவு மிடையிடை களிறு மாகி,
29

     579. (இ-ள்.) வெளிப்படை. (அதுகண்டு) இராசதந்திரத்
தலைவர்களாகிய அமைச்சர்களும் தம் தலைவராகிய அரசரது
நிலையைக் கண்டு வந்து, சேனையை மிக விரைந்து எழுந்து
சேரும்படி முன்னே பறைசாற்றவே, அழகிய துகிற் கொடிகள்
பூமியின் மேலிடமாகிய ஆகாய வெளியெல்லாம் தூர்த்து நிறைய,
எந்திரத் தேர்களும், குதிரைகளும், இடையிடையே யானைகளுமாகி,
29

     579. (வி-ரை.) தந்திரத்தலைவர் - அரசாங்க தந்திரம்
வல்ல அமைச்சரிற் சேனைக்காரியம் பார்ப்பவர். சேனைத்தலைவர்
என்பாருமுண்டு.

     தலைவன் - அரசன். முதல்வன் (576) என்றது காண்க.

     நிலைமை - அளவில் சீற்றங்கொண்டு போர்க்குப் புறப்பட்ட
நிலை. தலைவர் ஏவாமலே அவரது குறிப்பறிந்து உரியன செய்தல்
தந்திரத் தலைவர் கடமையா மென்பார் நிலைமைகண்டு என்றதும்
காண்க.

     வந்துற - தலைவர் தாமும் வந்து, சேர்ந்து. உற்று என்பது
உற என நின்றது. வல்விரைந்து - மிக விரைவில் எழும்படி - முன்
- சேர்வதற்குமுன். சேனையை வந்துறச் சாற்ற என்றலுமாம்.

     சாற்ற - பறைசாற்றுவிக்க. இதனை இரண பேரிகை
அடிப்பித்தல் என்பார்.

     அந்தரத்து அகலம் - ஆகாயவெளி. அணி துகிற்
பதாகை
-அழகிய பலநிறங்களுடைய துணிகளால் அமைத்த
கொடிகள்.

     தூர்ப்ப - மறைக்க. கொடிகள் ஆகாயவெளி முழுதும்
மறைக்க. கொடிகள் ஆகாய வெளி முழுதும் மறையுமாறு நெருங்கின
என்க.

     எந்திரத்தேர் - எந்திரங்களைக் கொண்ட தேர்கள்.
எந்திரங்களால் இயக்கப்படும் தேர்கள் என்றும், பகைப் புலத்தின்
மேற் பல படைகளை வீசும் எந்திரங்களைக் கொண்ட தேர்கள்
என்றும் கொள்ள நின்றது. சீவகன் கதையில் கருப்பிணியா யிருந்த
அவனது தாயை மயில் வடிவாயமைந்ததொரு பொறி
ஆகாயத்திற்கொண்டு சென்ற வரலாறு கேட்கப்படும். நூற்றுவரைக்
கொல்லி - ஆயிரவரைக் கொல்லி - முதலியனவாகிய
படைகளையும், உருகிய உலோகக் குழம்பு முதலியவற்றையும், வீசும்
எந்திரங்களையும் முன்னாளில் தமிழர்கள் போரில் வழங்கினர்
எனப் பல பழைய இலக்கியங்களில் அறிகின்றோம். எந்திரத்தேர்
உருளையுடைய தேர் என்பாரு முண்டு.

     மா - குதிரைப்படை. குதிரைப்படையின் மிகுதியும் அதனை
நோக்க யானைப் படையின் தொகைக் குறைவும் குறிக்க இடை
இடை என்றதோடு களிறும் எனவும்மையுந் தந்தோதினார்.

     பதாகை போர்ப்ப - வெந்திறற்றேரும் என்பனவும்
பாடங்கள். 29