580.
வில்லொடு வேல்வா டண்டு பிண்டிபா லங்கண் மிக்க
வல்லெழு முசலநேமி மழுக்கழுக் கடைமுன் னான
பல்படைக் கலன்கள் பற்றிப் பைங்கழல் வரிந்த
                                   வன்க
ணெல்லையில் படைஞர் கொட்புற் றெழுந்தன
                          ரெங்கு;மங்கும்,
   30

     580. (இ-ள்.) வெளிப்படை. வில்லுடனே வேலும், வாளும்,
தண்டும், பிண்டி பாலங்களும், வலிய இருப்புலக்கையும்,
சக்கரங்களும், மழுவும், சூலமும் முதலிய பற்பலபடைக்கலங்களையும்
ஏந்தியவர்களாய், அழகிய வீரக்கழலணிந்த, வரிந்து கச்சுக் கட்டிய
வன்கண்மையுடைய, அளவில்லாத படை வீரர்கள் சுழன்று குதித்து
எங்கும் எழுந்தனர்; எங்கும், 30

     580. (வி-ரை.) வில்லொடு - ஏனைப் படைகளினின்றும்
வில்லினை, ஓடு உருபு தந்து பிரித்துக் கூறியது அதன் சிறப்பும்
மிகுதியும் நோக்கி.

     பிண்டிபாலம் - "தலையிலே பீலி கட்டப்பட்டு எறிவதோர்
படை. "ஒருவகை எறியாயுதம். பீலித் தண்டம் என்பர்.

     முசலம் - இருப்புலக்கை. கழுக்கடை - சூலம். எறியீட்டி
என்றலுமாம். மழு - பரசு கோடரி போன்றது. முன்னான -
முதலாகிய. பைங்கழல் - வீரக்கழல் அணிந்தார்களும், வரிந்த -
கச்சுவரிந்து கட்டி, கழலை வரிந்து கட்டிய என்பாரு முண்டு.
வன்கண் - வீரமுடைய. இரக்கமற்ற மறம். அப்படைஞர்
யாவரும் வீரர்களே என்பார் பைங்கழற் படைஞர் என்று
குறித்தார்.

     கொட்புற்று - கழன்று. உற்சாகத்தோடு குதித்து என்பர்
ஸ்ரீமத் ஆறுமுகத் தம்பிரான் சுவாமிகள். போர்க்குச் செல்லும்போது
இடசாரி வலசாரியாகச் சுற்றிப் பலவின்னியாசமான அவ்வித்தையின்
தொழில்களைச் செய்தென்று பொருள் கூறுதலு மொருபட்சம் -
என்பர் மகாலிங்கையர்.

     எங்கும் - எங்கேயும் - எவ்விடத்தும். முற்றும்மை.
நால்வகைச் சேனையினும் இதிற்குறித்த காலாட் படையின்
தொகுதியும் மிகுதியும் குறித்தது. படைஞர் - படைக்கலமேந்திய
காலாள் வீரர். இவர்கள் ஏந்திவந்த படைகளை மேலேகுறித்தது
காண்க. எங்கும் எழுந்தனர் என்று மாற்றியுரைக்க. இரண்டாவது
எங்கும் என்றதனை வரும்பாட்டில் மல்க என்றதோடு கூட்டி
எங்கும் மல்க
என்றுரைத்துக் கொள்க. இவ்வாறன்றி எங்கு
மெங்கும்
என்பதனை மிகுதிபற்றிய அடுக்குத் தொடராக்கி
எங்கெங்கு மென்று பொருள் கொள்வாருமுண்டு. அது சிறவாமை
காண்க.

     நால்வகைச் சேனையில் தேர் - யானை - குதிரைப்படைகள்
என்ற முதன் மூன்றும் மேற்பாட்டானும், ஏனைய காலாட்படை
இப்பாட்டானும் குறித்தார். உறுப்பு நான்கு எனக் (583) கூறுவதும்
காண்க.

     மூன்றும் சேர ஒரு பாட்டானும் இவ்வொன்று ஒரு பாட்டானும்
கூறியது அவ்வவற்றின் தொகைச் சுருக்கமும் பெருக்கமும் பற்றி.